Published : 12 Sep 2020 09:16 AM
Last Updated : 12 Sep 2020 09:16 AM

கரோனாவைத் தடுக்கும் முதல் போராளி

இ. ஹேமபிரபா

கரோனா வைரஸ், நீர்த்திவலைகள் மூலமும் காற்றுவழியாகவும் பரவும் என்ற புரிதல் வந்தபிறகு, முகக்கவசம் நமது அன்றாட உடையுடன் ஐக்கியமாகிவிட்டது. உலகம் முழுக்க கரோனா பரவத் தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களில் முகக்கவசத்துக்குத் தட்டுப்பாடு நிலவியது. இப்போதோ பல வண்ணங்களிலும் துணிகளிலும் விதவிதமான முகக்கவசங்கள் கிடைக்கின்றன.

இன்னொரு பக்கம், முகக்கவசத்தைச் சுற்றி நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் புரளிகளும் வலம்வருகின்றன. முகக்கவசம் பயன்படுத்துவது பொதுநலன் கருதியே. அதனால், நமக்கு எந்த லாபமும் இல்லை, முகக்கவசத்தில் உள்ள துளை வழியே வைரஸ் வெளியேறும் என்பது போன்ற தவறான கருத்துகளும் நிலவுகின்றன. அதனால், பொது இடங்களில் முகக்கவசம் அணியச் சொல்லி உலக நாடுகள் அனைத்தும் ஏன் வலியுறுத்துகின்றன, எந்த வகை முகக்கவசத்தை அணியலாம் என்பது குறித்துத் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது.

முகக்கவசம் ‘சுயநலனுக்கும்’தான்

ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்கள் கழித்துத்தான், அறிகுறிகள் வெளியே தெரியத் தொடங்குகின்றன. யார் நோயாளி என்பது தெரிந்தால், அவர்களிடம் மட்டும் தொற்று நீங்கும்வரை விலகியிருக்கலாம். யாரிடமிருந்து பரவும் என்பதே தெரிந்துகொள்ள முடியாத சூழலில், அனைவரும் முகக்கவசம் அணிவது முக்கியம். மருத்துவர்களும் முன்களப் பணியாளர்களும் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நடைமுறைக்குப் பதிலாக, பொதுச் சமூகமும் முகக்கவசம் அணிய உலக சுகாதார மையம் வலியுறுத்தியதற்கான காரணம் இதுவே.

முகக்கவசம் அணிபவர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் மிகக் குறைவாக இருக்கிறது என்ற உண்மை தற்போது தெரியவந்திருக்கிறது. இதற்கான காரணம் எளிது. முகக்கவசம் அணிந்திருப்பவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது சுற்றுப்புறத்தில் வெளியேறும் நீர்த்திவலைகள் குறையும். அதேபோல், நம் மூக்கு - வாயின் மூலம் உள்ளே நுழையும் திவலைகளும் குறையும். அதனால், சுற்றுப்புறத்தில் இருக்கும் வைரஸின் அளவும் குறையும், நம் உடலின் உள்ளே செல்லும் வைரஸின் எண்ணிக்கையும் குறையும். மிகக் குறைந்த அளவில் உள்ளே செல்லும் வைரஸ் பல்கிப் பெருகி, பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்குவதற்கு முன், நம்முடைய நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் வைரஸை வென்றுவிடுகிறது. தலைக்கவசம்போல் முகக்கவசமும் நம் உயிர் காக்கிறது.

மிதமான தாக்கம்

கரோனா வைரஸ் தாக்கியிருந்தாலும், பலருக்கும் அறிகுறிகள் தெரிவதில்லை. இவர்கள் ‘அறிகுறியற்ற நோயாளிகள்’. இவர்களுடைய உடலில் வைரஸ் இருக்கும்; ஆனால், காய்ச்சல், சளி, இருமல் போன்ற வேறெந்த பிரச்சினைகளும் இருக்காது. அறிகுறி இல்லையென்றால், அது மிதமான தொற்று.

அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுவதற்கு முன்பாக மிதமான தொற்று இருந்தவர்களின் சதவீதம் 18. இது தற்போது 40-45 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. மிதமான தொற்று உள்ளவர்கள் நோயைப் பரப்புவார்களே என்ற கேள்வி எழலாம். ஆனால், மேற்கண்ட எண்ணிக்கை என்ன சொல்கிறதென்றால், தொற்று ஏற்பட்டாலும் பலர் எந்த உடல் பாதிப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே, முகக்கவசம் அணிவதால் தொற்று பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குவதற்கு முன்பே, குணமாகிவிடலாம் என்பது புரிகிறது.

முகக்கவசம் அணிந்த எலிகள்

கரோனா வைரஸ் தாக்கம் உள்ள எலிகளை ஒரு கூண்டிலும், ஆரோக்கியமான எலிகளை இன்னொரு கூண்டிலும் வைத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது. தனித்தனியாக எலிகளுக்கு முகக்கவசம் அணிவித்து சோதனை நடத்த முடியாது. எனவே, இரண்டு கூண்டுகளுக்கும் இடையில் மருத்துவ முகக்கவசத்தை (surgical mask) வைத்துப் பிரித்தார்கள். இதேபோல், முகக்கவசத்தால் பிரிக்கப்படாத இரண்டு கூண்டுகளை வைத்தனர்.

இந்தக் கூண்டுகளைத் திறந்த வெளியில் வைக்காமல், காற்று செல்வதைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பெரிய பெட்டகத்துக்குள் தனிமைப்படுத்தி வைத்தனர். இதன்மூலம் கரோனா வைரஸ் உள்ள சுற்றுப்புறக் காற்று உள்ளே செல்லாது. அதேநேரம் பாதிக்கப்பட்ட ஒரு எலியிடம் இருந்து மற்றொரு எலிக்கு நோய் பரவியதா என்பதை உறுதிப்படுத்த முடியும். இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டதன் நோக்கம், ஒன்றையொன்று தொடாமல் காற்று மூலம் நோய் பரவுகிறதா என்பதைக் கண்டறிவதுதான்.

ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வு முடிவு, வேறொரு முக்கிய மான விஷயத்தைத் தெளிவாக்கியது. முகக்கவசத்தால் பிரிக்கப்படாமல் இருந்தபோது 66 சதவீதமாக இருந்த தொற்று, முகக்கவசத்தால் பிரிக்கப்பட்டிருந்தபோது, 25 சதவீதமாகக் குறைந்திருந்தது. முகக்கவசத்தால் தடுக்கப்பட்டி ருந்த எலிகளுக்குத் தொற்றின் தாக்கமும் வெகு மிதமாக இருந்தது.

கப்பல் பரிசோதனை

முகக்கவசப் பயன்பாட்டின் அவசியம் பற்றி அறிய தனிமைப்படுத்தப்பட்ட கப்பல்கள் பெரிதும் உதவுகின்றன. இதில் ஓரிடத்தில் எத்தனை பேர், எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனையை மேற்கொள்ளவும் முடியும்.

டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess) என்பது ஒரு பொழுதுபோக்குக் கப்பல். இது ஆசிய, ஆஸ்திரேலியக் கடல்களில் உலவும். இந்தக் கப்பலில் பயணம்செய்து, பின்பு ஹாங்காங்கில் இறங்கிய ஒரு நபருக்குத் தொற்று இருக்கிறது என்பது, ஜப்பான் அருகே கப்பல் சென்றுகொண்டிருந்தபோது தெரியவந்தது. அது பிப்ரவரி 1-ல். ஜப்பான் கடற்கரைக்கு அந்தக் கப்பல் சென்றுசேர்ந்தபோது, பிப்ரவரி 3 ஆகிவிட்டது. அந்தக் கப்பல் கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டது. அதிலிருந்த 3,700 பேரில், 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதத்தினருக்கு மிதமான தொற்று இருந்தது. மற்றவர்களுக்குத் தீவிரத் தொற்று இருந்தது. அந்த வேளையில், அனைவரும் முகக்கவசம் அணிவது நடைமுறையில் இல்லை.

மார்ச் மத்தியில், அர்ஜெண்டினாவில் இருந்து 21 நாட்கள் பயணம் செல்ல ஒரு பொழுதுபோக்குக் கப்பல் புறப்பட்டது. அதிலிருந்த பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்பே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கப்பலில் ஏறுவதற்கு முன்பே உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. சீனா, ஹாங்காங், தைவான், தென்கொரியா, ஜப்பான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு சென்றிருந்தவர்களைக் கப்பலில் அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் முகக்கவசப் பயன்பாடு வலியுறுத்தப்பட்டது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின்பும் கரோனா தொற்று உண்டானது. ஆனால், இந்த முறை பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் மிதமான தொற்றுடன் இருந்தனர். 20 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிரத் தொற்று இருந்தது.

முகக்கவசப் பயன்பாடு நடைமுறையில் இல்லாதபோது, பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 20 சதவீதத்தினருக்கே மிதமான தொற்று இருந்தது, மற்றவர்களுக்குத் தீவிரத் தொற்று இருந்தது. ஆனால், முகக்கவசம் அணிந்திருந்தபோது 81 சதவீதத்தினருக்கு மிதமான தொற்றே ஏற்பட்டது. இதேபோல், முகக்கவசம் வலியுறுத்தப்பட்டிருந்த பதனிடும் ஆலைகளில் 95 சதவீதத்தினருக்கு மிதமான தொற்றே இருந்தது. முகக்கவசம் அணி வதால் எந்த அளவுக்கு நோயின் தீவிரத்திலிருந்து விடுபடலாம் என்பதற்கு இவையே சான்று.

பலவகை முகக்கவசங்கள்

தற்போது பலவகை முகக்கவசங்கள் கிடைக்கின்றன. N95 முகக்கவசம் சிறந்தது என்றாலும், அதிக விலையால் அனைவராலும் அதை வாங்க முடியாது. மருத்துவ முகக்கவசம், துணியால் செய்யப்பட்ட முகக்கவசம் ஆகியவற்றில் எதைப் பயன்படுத்துவது என்கிற கேள்வி வருகிறது.

அமெரிக்காவின் ‘டியூக் பல்கலைக் கழக’த்தைச் (Duke University) சேர்ந்த அறிவியலாளர்கள் லேசர் கருவி, கைபேசி கேமராவை வைத்து, இதற்கொரு எளிய சோதனையை மேற்கொண்டார்கள். ஓர் இருட்டறையில், வெவ்வேறான முகக்கவசங்களை அணிந்துகொண்டு ஒருவர் பேசினார். அப்போது அவருடைய வாயிலிருந்து வெளிப்படும் திவலைகளை லேசர் கதிர் ஒளிச்சிதறச் செய்யும்.

இதை கேமராவால் படமெடுத்து, குறிப்பிட்ட முகக்கவசம் எவ்வளவு திவலைகளை வெளியிட்டது என்பதைக் கணக்கிட்டார்கள். எதிர்பார்த்ததைப் போல் N95 முகக்கவசத்தின் வழியாக மிகக் குறைவான அளவு திவலைகளே வெளிப்பட்டன. அடுத்ததாக மருத்துவ முகக்கவசம் வந்தது. அதேவேளை, துணியால் செய்யப்பட்ட முகக்கவசமும், N95 செயல்பாட்டுக்கு 80 – 90 சதவீதம்வரை ஈடாக இருந்தது.

அதனால், நமது வசதிக்கேற்ப, துணியால் செய்யப்பட்ட முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம். துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அன்றாடம் சோப்பு போட்டுத் துவைத்து, காயவைத்துப் பயன்படுத்துவது அவசியம். ஆனால், இவை எல்லா இடங்களிலும் ஒரே தரத்தில் கிடைப்பதில்லை. பல அடுக்குகளுடன் காற்றைத் தடைசெய்கிற மாதிரியும் வாங்கிவிடக் கூடாது. இது மூச்சு விடுவதற்கே சிரமத்தை ஏற்படுத்தும். அதேபோல் துணி நைந்து போகாமலும் இருக்க வேண்டும். எனவே, சரியான முகக்கவசத்தைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

மருத்துவ முகக்கவசங்களை ஒரு நாளுக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். ஊரடங்குத் தளர்வுக்குப் பின்பு, மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களான பேருந்து, கோயில் போன்ற இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது மிக மிக அவசியம். நான்கு பேர் அணியாமல் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, நாமும் அணியாமல் செல்லலாம் என்று நினைக்கும் போக்கு, மிகத் தவறு.

இத்தனைக்கும் பிறகு, ஒரு முக்கியக் குறிப்பு: முகக்கவசத்தைத் தாடைக்குக் கீழே அணியக் கூடாது. மூக்கையும் வாயையும் முழுமையாக மூடும் வகையிலேயே அணிய வேண்டும். வாயை மட்டும் மூடுவதுபோல் சிலர் அணிகின்றனர். இப்படித் தவறான வழிகளில் அணிவதால்தான் வைரஸைத் தடுக்க முடியாமல் போகும்.

இ. ஹேமபிரபா

கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் தொடர்புக்கு: hemazephyrs@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x