Last Updated : 09 Sep, 2020 11:03 AM

 

Published : 09 Sep 2020 11:03 AM
Last Updated : 09 Sep 2020 11:03 AM

கதை: உழைப்பை மறக்கலாமா?

ஓவியம்: கிரிஜா

பொழுது விடிந்து வானம் வெளுக்கத் தொடங்கியது. மான் தன் நண்பர்களைத் தேடி அவற்றின் இருப்பிடத்திற்குச் சென்றது. மானின் நண்பர்களான குரங்கு, அணில், மயில் எதுவும் அங்கே இல்லை.

சிறு வயதிலிருந்தே நான்கும் நண்பர்கள். அவர்கள் எப்போதும் எங்கும் சேர்ந்தே செல்வார்கள். உணவைத் தேடி உண்பார்கள். சேர்ந்தே விளையாடுவார்கள். ஆனால், இரண்டு நாட்களாக மூவரும் மானின் கண்ணில் படவே இல்லை.

‘எங்கே போயிருப்பார்கள்?’ என்று யோசித்தபடி மான் நண்பர்களைத் தேடியது. அவர்கள் தென்படவே இல்லை. களைத்துப் போன மான் ஒரு மரத்தடியில் வந்து படுத்தது.

“என்ன மானே,தனியாக இருக்கிறாய்? உன் நண்பர்களைத் தேடுகிறாயா?” என்ற குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தது மான். மரத்தின் மேல் கிளையில் குருவி அமர்ந்திருந்தது.

“ஆமாம்.என் நண்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றது மான்.

“உண்மையிலேயே உன் நண்பர்கள் எங்கே போயிருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியாதா? இரண்டு நாட்களாக அவர்கள் அருவிக்கரையே தஞ்சமென்று கிடக்கிறார்கள். அங்கே போய்ப் பார்” என்றது குருவி.

“அருவிக் கரைக்கா? அங்கே போய் என்ன செய்கிறார்கள்? இதோ போய்ப் பார்க்கிறேன்” என்று குருவியிடம் சொன்ன மான், அருவிக்கரை நோக்கி ஓடியது.

அருவிக்கரையில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்றிருந்தார்கள். ஒரு புதர்ச்செடியின் பின்னே போய் மறைந்து கொண்ட மான், தன் நண்பர்களைத் தேடியது.

மான் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது.

ஓரிடத்தில் அதன் நண்பனான குரங்கு மனிதர்கள் தின்றுவிட்டு குப்பையில் வீசிய பழத்துண்டுகளை ஆசை ஆசையாகத் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்தது. அப்போது சிலர் குரங்கின் மீது கல்லை எடுத்து வீசினார்கள். குரங்கு கற்கள் தன்மீது படாதவாறு அங்குமிங்கும் ஓடிய பிறகு மீண்டும் வந்து பழங்களைத் தின்றது.

இன்னோர் இடத்தில் மனிதர்கள் குப்பையில் வீசிய கெட்டுப் போன கடலைகளைத் தின்றுகொண்டிருந்தது மயில். அப்போது சிலர் மயிலுக்குத் தெரியாமல் அதன் தோகையிலிருந்து இறகுகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

மான் அணிலைத் தேடியது. அணில் ஒரு குப்பைத் தொட்டியின் அருகில், மனிதர்கள் வீசிய கெட்டுப்போன ரொட்டித் துண்டுகளைத் தின்றுகொண்டிருந்தது. அப்போது சிறுவர்கள் சிலர் அணிலைப் பிடிக்கத் துரத்தினார்கள். அணில் அவர்களிடம் அகப்படாமல் ஓடித் தப்பித்து, மீண்டும் வந்து அந்தத் ரொட்டித் துண்டுகளைத் தின்றது.

தன் நண்பர்களின் நிலைமையைப் பார்த்து மானுக்கு வருத்தமாகிவிட்டது.

‘ஓ... நண்பர்கள் அருவிக்கரையே தஞ்சம் என்று கிடப்பதற்கான காரணம் இதுதானா?’ என்று நினைத்துக்கொண்ட மான், மனிதர்கள் கண்ணில்படாதவாறு பொழுதைக் கழித்தது.

மாலைப் பொழுது வந்தது. சற்று இருள்கவியத் தொடங்கியது. மனிதர்கள் அருவிக்கரையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

மான் மெதுவாகப் புதரின் மறைவிலிருந்து வெளியே வந்து, தன் நண்பர்களை அழைத்தது. நண்பனைக் கண்ட குரங்கும் மயிலும் அணிலும் ஓடி வந்தன.

மான் அவர்களிடம் ஏதும் அறியாதது போல், “நண்பர்களே,இரண்டு நாட்களாக நான் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டது.

அணிலும் குரங்கும் மயிலும், “நண்பா, நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக இங்கேதான் இருக்கிறோம். இங்கே மனிதர்கள் விதவிதமான உணவுகளை எங்களுக்குத் தருகிறார்கள். நாம் காட்டில் உணவுக்காக அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த அருவிக்கரையில் ஓரிடத்திலேயே அமர்ந்து விதவிதமான உணவுகளை உண்ண முடிகிறது. நீயும் எங்களுடன் இங்கேயே தங்கிவிடு” என்றன.

“நண்பர்களே, இன்று காலையே நான் அருவிக்கரைக்கு வந்துவிட்டேன். இங்கே என்ன நடக்கிறது என்பதை நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்” என்றது மான்.

“அப்படியா? நாங்கள் உன்னைப் பார்க்கவில்லையே... உனக்கும் உணவு கிடைத்ததா?” என்று வியப்புடன் கேட்டது குரங்கு.

“இல்லை,அப்படிக் கிடைத்தாலும் நான் அவற்றை உண்ண மாட்டேன். நீங்களும் காட்டிற்குத் திரும்பி வாருங்கள்.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“காட்டில் நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறோம். அருவிக்கரையில் மனிதர்கள் சாப்பிட்டு மீதம் போடுகிற உணவை உண்ண வேண்டிய நிலைமை நமக்கு எதற்கு? காட்டில் இல்லாத உணவா? குரங்குகள் சாப்பிட்டுவிட்டு மண்ணில் போடுகிற பழங்களின் விதைகளிலிருந்து புதிய மரங்கள் முளைத்து வளர்கின்றன. அந்த மரத்திலுள்ள கனிகளை மற்ற குரங்குகள் உண்ணுகின்றன. அணில்கள் மண்ணில் புதைத்து வைத்து மறந்து போய்விடுகிற விதைகள் முளைத்து மீண்டும் பருப்புகளையும் தானியங்களையும் விளைவிக்கின்றன. அவற்றை ஏராளமான அணில்கள் உண்ணுகின்றன. மயில்கள் உண்டு இடுகிற எச்சத்தில் எத்தனையோ மரங்கள் முளைக்கின்றன. அவற்றிலும் கனிகள் கனிகின்றன. மற்ற மயில்கள் அவற்றை உண்கின்றன. இப்படி நாமே நமக்குத் தெரியாமல் உழைத்து உண்கிறோம். பிறகு ஏன் உணவுக்காக மனிதர்களைத் தேடிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டது மான்.

“அப்படியானால் அருவிக்கரையில் மனிதர்கள் தருகின்ற உணவை உண்ணக் கூடாதா நண்பா?”

“நீங்கள் யாராவது சுத்தமான உணவை உண்டீர்களா? நிம்மதியாக பயமின்றி உண்ண முடிந்ததா? இல்லையே...மனிதர்கள் தாங்கள் உண்ட எச்சில் உணவை உங்களுக்குக் கொடுத்தார்கள். கூடவே மனிதர்கள் உங்களை எப்படி எல்லாம் துன்புறுத்தினார்கள் என்று நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். மயிலின் தோகையைப் பறித்தார்கள். குரங்கைக் கல்லால் அடித்தார்கள். அணிலைப் பிடித்துச் செல்லப் பார்த்தார்கள். இப்படி மனிதர்களுக்குப் பயந்து அசுத்தமான உணவை உண்பதைவிட நிம்மதியாக, சுதந்திரமாகக் காட்டில் கிடைக்கும் இயற்கையான உணவுகளை உண்பது நல்லது அல்லவா?”

மான் சொன்னதைக் கேட்டு மூன்றும் யோசித்தன.

‘மான் சொல்வதும் உண்மைதானே...இப்படி உணவுக்காக அடுத்தவர் முன் கையேந்தி நிற்பதைவிட நம் உழைப்பில் உணவைத் தேடி உண்பதுதானே நல்லது. இல்லை என்றால் உழைப்பையே மறந்து சோம்பேறி ஆகிவிடுவோமே’ என்ற உண்மையை அவை புரிந்துகொண்டன.

அவை மூன்றும் மானிடம், “நீ சொல்வது சரிதான்.நம் உணவை நாமே தேடி உண்பதன் மகிழ்ச்சி இதில் இல்லை. நாளையிலிருந்து நாங்கள் இந்த அருவிக்கரைக்கு வர மாட்டோம். காட்டில் சுதந்திரமாக வாழலாம்”என்று சொன்னபடி மானுடன் காட்டுக்கே திரும்பிச் சென்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x