Published : 09 Sep 2020 10:57 AM
Last Updated : 09 Sep 2020 10:57 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நரம்பு பச்சை நிறமாகத் தெரிவது ஏன்?

மரம் ஏறும் மீன்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

சில வகை மீன்கள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றிருக்கின்றன. அதனால் தண்ணீரை விட்டு வெளியே வந்து துடுப்புகளால் குறைந்த தூரத்துக்கு நடக்கின்றன, மரத்தில் ஏறுகின்றன.

மட்ஸ்கிப்பர் என்ற பிரபலமான மீனின் சுவாசிக்கும் பகுதி தலைக்கு மேலே இருக்கிறது. நீரின் மேற்பரப்பில் செல்லும்போதும் தரையில் நடக்கும்போதும் மரத்தில் ஏறும்போதும் வெளிக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு, 8 மணி நேரம் வரைகூடத் தண்ணீரைவிட்டு இவற்றால் வெளியில் இருக்க முடியும்.

மாங்குரோவ் கில்லிஃபிஷ் ஃப்ளோரிடா, தென் அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் வசிக்கிறது. இதுவும் நீரிலும் நிலத்திலும் வாழும். மரம், பாறைகளில் ஏறும்.

அனபான்டீடே இனத்தைச் சேர்ந்த 4 வகை மரம் ஏறும் மீன்கள் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் காணப்படுகின்றன. இவற்றில் ‘அனாபஸ்’ வகை மீன்கள் இந்தியாவிலும் வாழ்கின்றன. தமிழ்நாட்டில் ‘பனையேறி கெண்டை’ என்று அழைக்கப்படும் மீனும் மரம் ஏறும், மஞ்சரி.

நோபல் பரிசு எவ்வாறு தோன்றியது, டிங்கு?

- ஜி.கே. பால சண்முகேஷ், 9-ம் வகுப்பு, ஆதர்ஷ் வித்யா கேந்திரா,நாகர்கோவில்.

விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான ஆல்ஃபிரட் நோபல் ஸ்வீடனைச் சேர்ந்தவர். 300-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றில் ஒன்று டைனமைட். வெடிபொருளான டைனமைட்டைக் கொண்டு ஏராளமாகச் சம்பாதித்தார். இவரது தம்பி இறந்ததை இவர் என்று நினைத்த ஒரு பிரெஞ்சு பத்திரிகை, ‘மரண வியாபாரி மரணம்’ என்று செய்தியை வெளியிட்டது. அதைக் கண்ட நோபல் மிகவும் வருத்தமடைந்தார். தான் இறந்தால் இப்படி நினைவுகூரப்படக் கூடாது என்று முடிவு செய்தார். தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை, ‘மனித இனத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தவர்களுக்குப் பயன்படும்’ வகையில் உயிலை எழுதி வைத்தார்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாகப் பங்களித்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். நோபல் இறந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசுகள், நோபல் அறக்கட்டளையால் வழங்கப்பட்டு வருகின்றன. 1968-ம் ஆண்டு ஸ்வீடன் மத்திய வங்கி 300-வது ஆண்டைக் கொண்டாடியதை ஒட்டி, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் ஏற்படுத்தப்பட்டது.

நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 அன்று நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. நார்வேயும் ஸ்வீடனும் உயில் எழுதும்போது கூட்டுப் பிரதேசமாக இருந்தன. அதனால் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும் மற்ற நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. தங்கப் பதக்கம், சான்றிதழ், பணம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் தனி நபர்களுக்கு மட்டுமின்றி, நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது. 1948-ம் ஆண்டு காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால், நார்வே நோபல் கமிட்டி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற யாருக்கும் தகுதியில்லை என்று கூறி, பரிசை வழங்க மறுத்துவிட்டது, பால சண்முகேஷ்.

நரம்புகள் பச்சை நிறமாகத் தெரிவது ஏன், டிங்கு?

- பி. ஜெரூசா, 3-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

ரத்தம் உடல் முழுவதும் பாய்கிறது. உடலின் சில பகுதிகளில் நரம்புகள் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் பச்சை நிறத்தில் எந்த நரம்பும் இல்லை. ரத்தத்தின் சிவப்பு வண்ணத்துக்கு ஹீமோகுளோபின் காரணம். இது நுரையீரலில் இருந்து அனைத்து ரத்த அணுக்களுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது. ரத்தத் திசுக்களில் இருந்து கார்பன் டையாக்ஸைடை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் ஆக்சிஜனேற்றம் அடையும்போது வண்ணத்தில் மாற்றம் உண்டாகிறது. ரத்தம் அதிக அளவில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும்போது சிவப்பாகவும் அதிக அளவில் கார்பன் டையாக்ஸைடை எடுத்துச் செல்லும்போது நீல நிறமாகவும் மாறுகிறது. சிவப்பும் நீலமும் மஞ்சள் கொழுப்புடன் கலக்கும்போது பச்சை நிறமாகத் தோன்றுகிறது, ஜெரூசா.

மேஜிக் என்பது உண்மையா?

- ஐ. நித்திலேஷ், 5-ம் வகுப்பு, எஸ்பிஜெ மெட்ரிக். பள்ளி, மதுரை.

உங்களைப் போன்ற மாணவர்களுக்கு இந்தச் சந்தேகம் அதிகமாக இருக்கிறது. மேஜிக் என்பது ஒரு கலை.நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டக்கூடிய கலை. முடியாது என்று நினைக்கும் விஷயங்களைச் செய்துகாட்டி, இது மந்திரமா தந்திரமா என்று புரியாமல் பார்வையாளர்களை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவதே இந்தக் கலையின் சிறப்பு. மேஜிக் கலைஞர் நிகழ்ச்சியில் நூறு ரூபாயை ஒரு லட்ச ரூபாயாக மாற்றிக் காட்டலாம். நிஜத்திலும் அப்படிச் செய்ய முடிந்தால், அவர் மேஜிக் மூலமே உட்கார்ந்த இடத்திலிருந்து கோடீஸ்வரராகிவிடலாம். ஆனால், நிஜத்தில் அப்படிச் செய்ய முடியாது. எல்லோரையும் போலவே மேஜிக் கலைஞர்களும் கடினமாக உழைத்துதான் புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள், நித்திலேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x