Last Updated : 04 Sep, 2015 12:54 PM

 

Published : 04 Sep 2015 12:54 PM
Last Updated : 04 Sep 2015 12:54 PM

எல்லை தாண்டும் செல்ஃபி மோகம்

செல்ஃபி... இன்றைய தலைமுறைக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம்; அதுவே சாபமாகவும் ஆகிவிடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. அண்மைக் கால உதாரணங்கள் சில, செல்ஃபி மோகத்தின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தங்களைத் தாங்களே ஒளிப்படம் எடுத்துக்கொள்ளும் வசதி செல்போன்களில் வந்தவுடன் எல்லோரும் நினைத்த நேரங்களில், நினைத்த இடங்களில் ஒளிப்படங்களை எடுத்துத் தள்ளுகிறார்கள். பெட்டிக் கடையில் தொடங்கி ஷாப்பிங் மால்வரை இது தொடர்கிறது. குல்பி முகத்துடன் செல்ஃபி எடுப்பது, அதைச் சுடச்சுட சமூக இணையதளங்களில் உலவவிடுவது இந்தக் கால இளைஞர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்று எங்கு சென்றாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும், துக்க வீட்டில் பிணத்துடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு ‘செல்ஃபி மேனியா’ இன்று வேகமாகவே பரவிவருகிறது.

இது ஒரு புறம் இருக்க, இன்று செல்ஃபி மோகம் உயிரைப் பறிக்கும் எமனாகவும் மாறி அதிர்ச்சி அளித்துக்கொண்டிருக்கிறது. மயிர்க்கூச்செறியும் வகையில் ஆபத்தான செல்ஃபிகளை எடுப்பது பலருக்கும் விருப்பமான விஷயமாகிவிட்டது. கடந்த வாரம் ஒகேனெக்கலில் பரிசல் பயணம் மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று நீரில் மூழ்கி இறந்ததற்கு செல்ஃபி எடுக்க முயன்றேதே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது செல்ஃபி குறித்த அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்காவில் பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞரைப் பாம்பு கொத்தியதில் இப்போதுவரை மருத்துவமனையில் கோடிக்கணக்கில் செலவு செய்துகொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார் (மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டாரா என்று தெரியவில்லை).

சென்ற ஆண்டு போலந்து நாட்டில் மலை உச்சியில் செல்ஃபி எடுத்த ஒரு தம்பதி கால் தவறி மலையில் இருந்து விழுந்து இறந்துபோனார்கள். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், தவறுதலாகத் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார். இப்படி செல்ஃபிகளின் விபரீதத்தைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலம்.

இன்று செல்ஃபி மோகம் வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும் இருக்கிறது. என்றாலும் இடம், பொருள் பார்க்காமல், வித்தியாசமான, ஆபத்தான செல்ஃபி எடுப்பதில் இளைஞர்களுக்கே முதலிடம். அண்மையில் டெல்லியில் அமிதாப் பச்சன், தன் நண்பர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் ஓடிவந்து அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இறந்துபோன மனிதருக்குக் கொஞ்சம்கூட மரியாதை தராமல் செல்ஃபி எடுத்தவர்களைப் பார்க்கும்போது வெறுப்பாக உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார். துக்கம் கேட்க வந்த வீட்டில் செல்ஃபி எடுக்க ஆசை என்றால், அது எப்படிப்பட்ட மனநிலை என்பதை இளைஞர்கள் யோசிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் செல்ஃபி உங்கள் முகத்தை மட்டுமல்ல. உங்கள் அகத்தையும் காட்டுகிறது.

கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி; சோகமாக இருந்தாலும் சரி, குழப்பமாக இருந்தாலும் சரி; சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி - செல்ஃபிகளால் நிரம்பி வழிகிறது இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை.

காலையில் பல் துலக்குவது தொடங்கி இரவு கொசுவர்த்தி கொளுத்துவதுவரை அனைத்து விஷயங்களையும் செல்ஃபியாகப் பதிவு செய்வதைக்கூட நம் அன்றாடப் பதிவுகள் என்ற வகையில் நல்ல விஷயமாக உளவியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு ரிஸ்க்கான செல்ஃபி எடுப்பது, மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் மரண வீட்டில் செல்ஃபி எடுப்பது என்னும் அளவுக்குப் போக வேண்டுமா என்பதை செல்ஃபி விரும்பிகள்தான் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x