Published : 06 Sep 2020 09:46 am

Updated : 06 Sep 2020 09:46 am

 

Published : 06 Sep 2020 09:46 AM
Last Updated : 06 Sep 2020 09:46 AM

உரையாடலின் வலிமையை உணர்கிறேன்!

the-strength-of-the-conversation

சுதா ரகுநாதன்

கரோனா ஊரடங்குக் காலத்தில் வேலை இழந்தவர்கள், உறவுகளை இழந்த வர்கள், வருமானத்தை இழந்தவர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனாலும், இதுவும் கடந்து போகும் என்னும் நம்பிக்கையுடன் இவர்களில் எதிர்நீச்சல் போடுகிற பலரும் உண்டு. ஆறுதலான வார்த்தைகளால், உரையாடல்களால் தங்களின் மனப்புண்ணுக்கு மருந்து போட்டுக்கொள்பவர்கள் ஏராளம். தாய், மகள், கணவன், மனைவி, அண்ணன், தங்கை இப்படி எந்த உறவு நிலையில் இருப்ப வர்களையும், கடவுள், பக்தன், கலைஞன், ரசிகன் என்கிற உணர்வு நிலையில் இருப்பவர்களையும் ஆசுவாசப்படுத்துவது உரையாடல்.


கரோனா ஊரடங்குக் காலத்தில் இணைய வழிச் சந்திப்பு மூலம் பல துறை சார்ந்த பிரபலங்களுடன் கர்னாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உரையாடும் நிகழ்வுகள் ‘எக்ஸ்பிரஷன் அண்டு எக்ஸ்பிரஸ்ஸோ’ எனும் தலைப்பின்கீழ் யூடியூபில் பதிவேற்றப்படுகின்றன. உரையாடலில் பங்கேற்கும் பிரபலங்கள் முதல் அதைக் காண்பவர்கள் பலரையும் புத்துணர்வு பெற வைக்கும் சுவாரசியத்துடன் இந்த நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.

மாற்றி யோசிப்போம்!

நிகழ்ச்சியைப் பற்றி சுதா ரகுநாதன் பகிர்ந்துகொண்டவை:

“காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்பார்கள். இந்த முதுமொழியே Expressions & Espresso மலரக் காரணம். ஊரடங்கு, தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி, அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியம்கூட நிறைவேறாமை போன்றவை உலகளாவிய அளவில் பேசப்பட்டுவரும் நிலையில், இவற்றை எப்படி எதிர்கொண்டு மீள்வது என என் மனத்தில் கேள்வி, வந்தவண்ணம் இருந்தது.

வள்ளுவர் கூறியதுபோல் ‘இடும்பைக்கு இடும்பையையே’பதிலாக அளிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்தது. அதையும் மகிழ்ச்சியாக்கி அனைவருக்கும் பலவிதமான கலைச் சுவையுடன் அளிக்க வேண்டும் என்ற வைராக்கியம் எழுந்தது. கலங்கி நின்றால் காலம் ஓடுமே தவிர, காரியம் நடக்காது என்றுணர்ந்து, மக்கள் உற்சாகத்துடன் திகழ Expressions & Espresso நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நான் பள்ளியில் படித்தபோது ‘Wealth from waste’ என்ற போட்டியில் கலந்துகொண்டது என் மனத்தில் நிழலாடியது. அன்று என் ஆசிரியர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. பயனற்ற ஒன்றைப் பயனுள்ளதாக ஆக்குவது தான், எல்லாவற்றுக்கும் தீர்வு என்பதே அது. காலத்தைக் கலைநயமாக்க விழைந்தேன். இப்படியாகத் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று பலதரப்பட்ட கலைஞர்கள் 21 பேரைப் பேட்டி கண்ட மகிழ்ச்சியில் திளைப்பதற்குக் காரணம், அவற்றின் சிறப்பம்சங்கள்!

கலைச் சங்கமம்

கலை வல்லுநர்கள் பலரது சங்கமமே இந்த நிகழ்ச்சி வெற்றிபெற காரணம். இசைத் துறை என்று எடுத்துக்கொண்டால் டாக்டர் ஆர். வேதவல்லி, சௌம்யா, அபே, சோனு நிகம், தாளவாத்தியக் கலைஞர்கள் உமையாள்புரம் சிவராமன், ஜாஹிர் உசைன் ஆகியோரும், நடனக் கலைஞர்கள் சித்ரா விஸ்வேஸ்வரன், மாளவிகா சருக்கை, அலர்மேல்வள்ளி, தொழிலதிபர்கள் வரிசையில் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி, இந்திரா நூயி, திரையுலகில் வித்யா பாலன், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், ‘சின்னக் குயில்’ சித்ரா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் பேசினேன்.

தமிழ்ப் பேராசிரியர் சாலமன் பாப்பையா, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், சிதார் இசைக்கலைஞர் அனுஷ்கா ரவிசங்கர் எனப் பட்டியல் நீள்கிறது. இதனால் பலதரப்பட்டோரும் பார்க்கும் வகையில் இந்நிகழ்வு மாறியிருக்கிறது. மேலும், இக்கலைஞர்கள் மனம் திறந்து பேசுவதற்கு, இந்த ஊரடங்கு கைகொடுத்தது. அவசர யுகத்தில் இருந்தவர்களை (என்னையும் சேர்த்து) அமைதி உலகத்தில் நுழைய வைத்தது.

கலைஞர்களின் அனுபவங்கள், திறந்தவெளிப் புத்தகமாக மாறின. ஒவ்வொருவரிடமும் பேசும்போதும் புதுப்புது தகவல்களைக் கண்டுணர முடிந்தது. இப்படி எண்ணற்ற கருத்துக்குவியல் வந்தவண்ணம் இருப்பதால், இந்நிகழ்வு வரவேற்கத்தக்கதாக இருப்பதுடன், தொடர்ச்சியும் தேவை என்பதை அறிந்தேன். இனி இந்தப் பயணம் இனிதே தொடரும்.”

நிகழ்ச்சியைப் பற்றி சுதா ரகுநாதன் பகிர்ந்துகொண்டவை: https://bit.ly/322RYOiஉரையாடல்வலிமைசுதா ரகுநாதன்கரோனா ஊரடங்குஊரடங்குக் காலம்உறவுகள்கலைச் சங்கமம்இணைய வழிச் சந்திப்புயூடியூப்YoutubeCorona virusLockdown

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x