Published : 06 Sep 2020 09:23 AM
Last Updated : 06 Sep 2020 09:23 AM

நல்ல சேதி: மனைவிக்குப் பங்கு உண்டு

பெண்களுக்குப் பூர்விகச் சொத்தில் பங்கு உண்டு என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இந்தியப் பெண்களின் சொத்துரிமையை உறுதிசெய்திருக்கிறது. தற்போது வங்கதேசத்தில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு அங்கிருக்கும் பெண்களுக்கு ஆசுவாசத்தை அளித்திருக்கிறது.

கணவனை இழந்த இந்துப் பெண்களுக்குக் கணவனின் வீட்டில் மட்டுமே உரிமை என்றிருந்த நிலையை மாற்றியிருக்கிறது செப்டம்பர் 2 அன்று வங்கதேச உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு. கணவனின் சொத்தில் வீட்டு நிலம், விவசாய நிலம் என எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையில் கணவனை இழந்த இந்துப் பெண்களுக்குக் கணவனின் எல்லா சொத்துகளிலும் உரிமை இருக்கிறது. தேவைப்பட்டால் அதைச் சட்டப்பூர்வமாக விற்கும் உரிமையும் மனைவிக்கு உண்டு எனவும் தீர்ப்பு சொல்கிறது.

கெட்ட சேதி: வறுமைக்குள் தள்ளப்படும் பெண்கள்

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்கேட்டால் 4 கோடியே 70 லட்சம் பெண்களும் சிறுமிகளும் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. ஐ.நா. பெண்கள் அமைப்பும் ஐ.நா.வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்திய பகுப்பாய்வில் இது தெரியவந்திருக்கிறது. அதன்படி பெண்கள் அதிக எண்ணிக்கையில் வறுமைக்குத் தள்ளப்படும் சதவீதம் அதிகரித்து ஆண்களுக்கும் பெண்களுக்குமான பொருளாதார இடைவெளி மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்தப் பகுப்பாய்வு சொல்கிறது.

பெண்களின் வறுமை வீதம் 2019 முதல் 2021 வரை 2.7 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கரோனா ஊரடங்கு ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரச் சீர்கேட்டால் இது 9.1 சதவீதமாக உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுடன் ஆண்களும் அதிக எண்ணிக்கையில் வறுமைக்குத் தள்ளப்படுவதால் ஏற்கெனவே வறுமையில் வாடுகிறவர்களுடன் இந்தத் திடீர் உயர்வும் சேரும்.

இதனால், உலகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்களின் எண்ணிக்கை 43 கோடியே 50 லட்சத்தைத் தாண்டும் எனவும் ஐ.நா.வின் பகுப்பாய்வு கூறுகிறது. கரோனா தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்ட எவ்வளவு முயன்றாலும் 2030-க்குள் அதை அடைந்துவிட முடியாது. “சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மிக மோசமாக நாம் வடிவமைத்திருப்பதன் வெளிப்பாடு இது” என்று ஐ.நா.பெண்கள் அமைப்பின் செயல் இயக்குநர் ஃபும்சிலே ம்லாம்போ தெரிவித்திருக்கிறார்.

வெல்லும் சொல்: இயல்பாக இருக்க முயல வேண்டாம்

சொல்லப்படாத ஒரு கதையைச் சுமந்திருப்பதைவிடப் பெருந்துயர் எதுவுமில்லை. நீங்கள் தலைகீழ் கொள்கையைப் புரிந்துகொண்டால், உங்களுக்கு எதிராகச் செயல்படும் எதுவும் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படும். நீங்கள் விரும்புகிற வேலையை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எப்படியென்றால் அந்த வேலையில் உங்கள் நேர்த்தியைப் பார்க்கிறவர்கள் அதிலிருந்து கண்களை அகற்ற முடியாத அளவுக்குக் கச்சிதமாகச் செய்ய வேண்டும். நாம் எதைத் தருகிறோமோ அதைத்தான் வாழ்க்கையும் நமக்குத் திருப்பித் தரும். அதனால், எதையுமே முழு மனத்துடன் செய்துவிட்டுக் காத்திருங்கள்.

எப்போதும் இயல்பாக இருக்க முயன்றுகொண்டிருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியகரமானவராக இருக்கக்கூடும் என்பதை உணராமலேயே போய்விடுவீர்கள். நீங்கள் செய்ததையும் சொன்னதையும் மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால், அவர்களை நீங்கள் எப்படி உணரவைத்தீர்கள் என்பதை எப்போதும் மறக்க மாட்டார்கள். வண்ணத்துப்பூச்சியின் அழகில் நாம் மகிழ்ந்து திளைப்போம். ஆனால், அது அந்த நிலையை அடைய எதிர்கொண்ட மாற்றங்களை மிக அரிதாகத்தான் ஒப்புக்கொள்வோம்.


- மாயா ஏஞ்சலோ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x