Last Updated : 05 Sep, 2020 09:20 AM

 

Published : 05 Sep 2020 09:20 AM
Last Updated : 05 Sep 2020 09:20 AM

பாறுக் கழுகும் கரோனாவும்

காதில் விழுந்தவுடன் அச்சத்தைத் தரும் சொல்லாக கரோனா என்ற சொல் நம் செவிப்பறையில் மோதுகிறது. கரோனா போன்ற நுண்மிகளை (virus) மனித குலம் காலங்காலமாகச் சந்தித்து, அவற்றிலிருந்து மீண்டுகொண்டுதான் இருக்கிறது. இதிலிருந்தும் நாம் மீண்டு விடுவோம். அதற்கு மருத்துவம் துணை நிற்கும், சந்தேகம் தேவையில்லை. அதேவேளையில், இதற்கு இயற்கையும் அதன் பிரிக்க முடியாத அங்கமான பல்லுயிர்களும் மறைமுகமாகத் துணைபுரிந்து புவிப்பந்திலுள்ள உயிரினங்கள் முற்றிலும் அழியவிடாமல் காக்க முயலும் என்பதை நம்புவோம்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளோ சுத்தம்பேணும் மக்களோ இந்தியாவில் இல்லை என்ற குறை அடிக்கடி சுட்டிக்காட்டப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். ஆனால், இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் எப்படி நோய்த்தொற்று கிருமிகளிலிருந்து தப்பித்தது? அதிலும் உடல்நலம், சுற்றுப்புறத் தூய்மை என்பன பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத நம் மக்களை எது பாதுகாக்கிறது? நம்மிடம் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் இதற்கு உதவி யிருக்கக்கூடும் என்பது ஒருபக்கம் உண்மை. இதற்கு மறைமுகமான மறுபக்கம் ஒன்றும் உண்டு.

பல்லுயிர்களின் பங்கு

கொடிய நோய்த்தொற்றுக் கிருமிகளைக் கட்டுக்குள் வைத்ததில், இந்தியாவிலுள்ள பல்லுயிர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலும், இறந்தவற்றை உண்டு வாழும் பாறுக் கழுகு போன்ற உயிரினங்களுக்குச் சிறப்பான பங்கு உண்டு. காட்டில் உயிரினங்கள் நீர்நிலைகளுக்கு அருகில் இறக்க நேர்ந்தால், அவற்றிலிருந்து நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் தண்ணீரில் கலக்கலாம். அங்கே தாகம் தணிக்க வரும் மான்கள், யானைகள், இதர உயிரினங்களுக்கு இந்த நுண்ணுயிர்கள் பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. அப்படிப்பட்ட சூழலில் பாறுக் கழுகுக் கூட்டம் வந்து இறங்கினால், இறந்த உயிரினத்தின் சடலம் இருந்த அடையாளமே தெரியாமல் தின்று, தூய்மைப்படுத்திவிடும். இதனால், நீர்மூலம் பரவும் நோய்களும் இயற்கையாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தவிர, கொடிய தொற்றுநோய்களான அடைப்பான் (Anthrax), கழிச்சல் (Cholera), கோமாரி நோய் (அ) காணை நோய் (Foot and Mouth Disease), வெறி நோய் (Rabies), நச்சுயிரித் தொற்று (Distemper) உள்ளிட்டவற்றால் காட்டுயிர்கள் மடிவது உண்டு. இப்படி மடிந்த உயிரினங்களை உண்டாலும் பாறுக் கழுகுகளுக்கு ஏதும் ஆவதில்லை என்பது வியப்பான உண்மை. அந்த நச்சு நுண்ணுயிரிகளை பாறுக் கழுகின் வயிற்றில் சுரக்கும் வீரியமான அமிலம் செயலிழக்க வைத்துவிடுகிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள். இதனால், பாறுக் கழுகுகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இறந்த உயிரினத்திடமிருந்து தொற்றுநோயும் பரவுவதில்லை. அதேபோல், இவற்றிடமிருந்தும் எந்த நோயும் மற்ற உயிரினங்களுக்குத் தொற்றுவதில்லை. இவ்வாறு அவை காட்டின் பாதுகாவலர்களாக இருந்து பெருமளவு உயிரினங்களைக் காக்கின்றன.

அருமை தெரிவதில்லை

இருந்தபோதும், பாறு வகைப் பறவைகளால் நமக்கு என்ன பயன் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. எதற்கெடுத்தாலும் வட்டிக் கணக்குப் போட்டும், பொருளாதாரக் கண்ணோட்டத்துடனும் எல்லாவற்றையும் நோக்குவதால், மற்ற உயிரினங்களின் அருமை தெரிவதில்லை. இவை ஆற்றும் சேவையை இயந்திரத்தைக் கொண்டு செய்தால் எவ்வளவு செலவாகும் என்று பொருளாதாரக் கணக்குப் போட்டுப்பார்த்தால், அது அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளை விஞ்சக்கூடும்.

இது போன்ற உயிரினங்கள் இல்லாது போனால், உணவுச் சங்கிலியில் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அது உடனடியாக எதிரொலிக்காது. பாறுக் கழுகுகள் இல்லாத வெற்றிடத்தை நாய்களும் எலிகளும் எடுத்துக்கொள்ளக்கூடும். நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தால் வெறிநோயின் (ரேபிஸ்) தாக்கமும் கூடுதலாகச் சாத்தியம் உண்டு. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிக்கட்டும்’ என்று சொல்லப்படுவதுபோல், இப்படி ஒன்றுக்கொன்று மறைமுகத் தொடர்பு உண்டு. இவை எல்லாம் நேராதவண்ணம் இயற்கையாகவே ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. ஆனால், அதில் மனிதர்களின் தலையீடு அதிகரிக்க அதிகரிக்க, அந்த ஒழுங்கு சீர்குலையத் தொடங்கியது. இதனால், பாதிக்கப்பட்ட உயிரினங்கள் ஏராளம்.

அப்படி ஒரு பேரழிவைத்தான் பாறுக் கழுகுகளும் சந்தித்தன. அவை பெருமளவு மடிந்ததில், மாடு களுக்குத் தரப்படும் வலிநிவாரண மருந்தான டைக்ளோபினாக் பெரும் பங்கு வகித்தது. இந்தச் செய்தியை உலகம் நம்ப மறுத்தது. ஆனால், அசைக்க முடியாத ஆய்வுகளால் பின்னர் அது நிரூபிக்கப்பட்டது. இதை அறிந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்துவரும் நாடுகளும், அது சார்ந்த மருந்துகளுக்குத் தடை விதித்தன.

மறுதலித்து வளர்ந்த நாடுகள்

சுகாதாரத்தில் முன்னிலை வகிக்கும் வளர்ந்த நாடான இத்தாலி யும் ஸ்பெயினும் இந்த மருந்துக்குத் தடை விதித்தன. ஆனால், அந்தத் தடையை ஓரிரு ஆண்டுகளில் இத்தாலியும், தொடர்ச்சியாக ஸ்பெயினும் விலக்கிக்கொண்டன. பறவை ஆராய்ச்சியாளர்கள் முறையிட்டும் அந்நாடுகள் கடைசிவரை செவிசாய்க்கவில்லை. ‘எங்கள் நாட்டில் சுகாதாரச் சீர்கேடே கிடையாது; வளர்ந்துவரும் நாடுகளைப்போல் இறந்த கால்நடைகளைத் திறந்தவெளியில் நாங்கள் வீசுவதில்லை’ என்று மறுதலித்தன. ஆனால், அப்படி மேம்பட்ட சுகாதாரம் பேணப்பட்ட நாடுகளில்தான் கரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாறுக் கழுகுகளுக்கும் கரோனாவுக்கும் நேரடியாகத் தொடர்பில்லை. என்றாலும், கரோனா போன்ற நுண்மிகளின் ஆபத்தில் மனிதக்குலம் சிக்கியுள்ள இவ்வேளையில், இதுபோன்ற நுண்மிகளை இயற்கையாகக் கட்டுக்குள் வைக்கும் பாறுக் கழுகு போன்ற உயிரினத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அவற்றைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர், பாறுக் கழுகு பாதுகாப்பு செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: arulagamindia@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x