Last Updated : 02 Sep, 2020 09:13 AM

 

Published : 02 Sep 2020 09:13 AM
Last Updated : 02 Sep 2020 09:13 AM

இளம் திறமையாளர்கள்: யூடியூபில் கலக்கும் சுட்டிகள்!

எதிர்பாராமல் கிடைத்த நீண்ட கரோனா விடுமுறையில் என்ன செய்வது என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் புத்திசாலித்தனமாகத் தங்கள் திறமையை உலகத்துக்குக் காட்டும் விதமாகவும் பிறருக்குப் பயன்படும் விதமாகவும் விடுமுறையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சென்னையைச் சேர்ந்த ஹாசினியும் ப்ரீதாவும் சொந்தமாக யூடியூப் சானல்களை ஆரம்பித்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

ஹாசினி

செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் ஹாசினிக்குப் பேசுவது என்றால் அவ்வளவு பிடிக்குமாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் ரசனையோடு பேசக்கூடியவர். பட்டிமன்றங்களில் தன்னுடைய பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவர்.

”அப்பாவின் அலுவலகத்தில் தந்தையர் தினத்தைக் கொண்டாடுவதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்காகச் சிலரைப் பேட்டி எடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலையில் என் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி, ஒரு யூடியூப் சானல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அப்பாவும் அம்மாவும் உற்சாகப்படுத்தினார்கள்.

ஹாசினி

என்னைப் போன்ற மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய பயனுள்ள சானலாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். படிக்கும் காலத்திலேயே சாதனையாளர்களாக இருப்பவர்களைப் பேட்டி எடுக்கத் தீர்மானித்தேன். விருப்பமான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்தால், வெற்றி நிச்சயம் என்பதைச் சொல்லும் விதத்தில் என் சானலுக்கு First Step என்று பெயரிட்டேன். உத்வேகம் கொடுக்கக்கூடிய ஓர் அறிமுகம் கொடுத்துவிட்டு, சாதனையாளரின் பேட்டியை ஆரம்பிப்பேன். இறுதியில் நம்பிக்கை தரும் பொன்மொழியைச் சொல்லி முடிப்பேன். இதுதான் என்னுடைய பாணி.

ஒரு சாதனையாளரைப் பேட்டி எடுப்பதற்கு முன்பு கேள்விகளைத் தயார் செய்து, அப்பாவிடம் கலந்து ஆலோசிப்பேன். ஒரு முறை பேசிப் பார்த்துக்கொள்வேன். பிறகுதான் கேமராவுக்குள் வருவேன். 15 நிமிட வீடியோவைப் பார்க்கும் மாணவர்களுக்குத் தங்களாலும் ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்துவிடும்.

எனக்குப் பேச்சைப் போலவே ஓவியம், சாப்பாடு, சமைப்பது எல்லாம் ரொம்பப் பிடிக்கும். இவற்றில் பேச்சு என்ற ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, ஆர்வத்துடன் உழைத்தேன். அதுக்கு ஏற்ற பலனை அனுபவித்து வருகிறேன். இதுவரை 21 சாதனையாளர்களைப் பேட்டி எடுத்திருக்கிறேன். 7 சாதனையாளர்களின் பேட்டிகள் வெளிவந்துவிட்டன. எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது என்னை மேலும் உழைக்கத் தூண்டுகிறது. எதிர்காலத்தில் தன்னம்பிக்கைப் பயிற்சி வகுப்புகளுக்கான யூடியூப் சானலும் ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது’’ என்கிற ஹாசினி உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லி முடிக்கிறார்.

``என்னால் ஒரு விஷயத்தைச் செய்ய முடியும் என்றால், உங்களாலும் நிச்சயம் முடியும். அதற்கு ஓர் அடி எடுத்து வையுங்கள்!”

இந்தக் காணொலி காண இணையச் சுட்டி: https://youtu.be/KxSPhl5oof8

ப்ரீதா

அண்ணாநகர் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் ப்ரீதாவுக்கு ஓவியத்தில் அதிக ஈடுபாடு. இணையத்திலேயே ஓவிய நுணுக்கங்களைக் கற்றுத் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டார். இவர் வரைந்துள்ள உருவப் படங்கள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கின்றன. தன்னுடைய ஓவியத் திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு யூடியூப் சானலை ஆரம்பித்திருக்கிறார்.

ப்ரீதா

“என் பிறந்த நாளுக்குப் பரிசாகக் கிடைத்த வண்ணங்களும் தூரிகைகளும்தாம் என்னைப் படம் வரையத் தூண்டின. ஆறாம் வகுப்பிலிருந்து வரைய ஆரம்பித்தேன். போட்டிகளுக்குச் செல்லும்போது, `உன்னால் எல்லாம் வரைய முடியுமா’ என்று சக நண்பர்கள் சந்தேகத்தோடு கேட்பார்கள். அந்தக் கேள்விதான் நானும் ஓவியராக வேண்டும் என்ற லட்சியத்தை எனக்குள் விதைத்தது. ஐந்தே ஆண்டுகளில் நான் யார் என்று நிரூபித்துவிட்டேன். இப்போது அவர்கள், `இதெல்லாம் நீ வரைந்த ஓவியங்களா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஓவியங்களுக்கான அடிப்படைகளை மட்டுமே மூன்று மாதங்கள் கற்றுக்கொண்டேன். மற்றபடி நானே மீண்டும் மீண்டும் வரைந்து பார்த்து, தவறுகளில் இருந்து பாடம் கற்று, என்னை முன்னேற்றிக்கொண்டேன். எட்டாம் வகுப்பில் படித்தபோது ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றேன். பிறகு உருவப் படங்கள் வரைவதில் கவனம் செலுத்தினேன். நான் வரைந்தவற்றில் ரொனால்டோ, இயக்குநர் வசந்த், நடிகை சமந்தா, என் அம்மா ஆகியவர்களின் உருவப் படங்களைப் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். அவர்களே யூடியூப் சானல் ஆரம்பிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தினார்கள்.

ஒரு படத்தை வரைய எட்டு மணி நேரமாகும். நான்கு நாட்களில் வரைந்து, வீடியோ எடுப்பேன். என் சானல் ‘Laxy Arts' ஆரம்பித்து ஒரு வாரமே ஆகிறது. நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஓராண்டுக்குப் பிறகு ஓவியம் கற்றுக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறேன்’’ என்கிற ப்ரீதாவுக்கு வித்தியாசமான ஓர் ஆசையும் உண்டாம். ``குப்பை என்று தூக்கி எறியும் பொருட்களில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்வதற்கான யூடியூப் சானல் தொடங்கும் ஆசைதான் அது!”

இந்தக் காணொலி காண இணையச் சுட்டி: https://youtu.be/NcA0vTC67cg

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x