Last Updated : 01 Sep, 2020 08:28 AM

 

Published : 01 Sep 2020 08:28 AM
Last Updated : 01 Sep 2020 08:28 AM

இணையவழி வகுப்புகள்: கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, இன்னும் சில மாதங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இணைய வகுப்புகள் வழியாகவே இயங்கப்போகின்றன. வீட்டிலிருந்தே இணையவழி வகுப்புகள் மூலம் படிப்பது இந்தச் சூழலுக்கான நல்லதேர்வுதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இந்த இணையவழி வகுப்புகள் வழியாக மாணவர்கள் படிப்பது நாம் நினைக்கும் அளவுக்கு எளிமையான விஷயமில்லை.

ஆசிரியர் நேரடியாக மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வகுப்பு எடுக்கும்போது கவனிப்பதற்கும், இணையவழியாகவோ, தொலைக்காட்சியிலோ ஆசிரியர் வகுப்பு எடுப்பதைக் கவனிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு நாளில் நான்கு மணி நேரம் இணையவழி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எளிமையாக கவனச் சிதறலுக்கு உள்ளாவதற்கு நிறைய சாத்தியம் இருக்கிறது. இணையவழி வகுப்புகள்தாம் தற்போதைய நிதர்சனம் என்ற நிலையில், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இணைய வகுப்பறைகளுக்கு முழுமையாகத் தங்களை தயார்படுத்திக்கொள்வதுதான் சிறந்தது. இணையவழி வகுப்புகளில் கவனச்சிதறல் இல்லாமல் படிப்பதற்கான சில ஆலோசனைகள்…

வகுப்புகளுக்கான நடைமுறை

பள்ளி, கல்லூரியில் வகுப்புகளை எப்படி அணுகுவீர்களோ, அதே சிரத்தையுடன்தான் இணையவழி வகுப்புகளையும் அணுக வேண்டும். வீட்டில்தானே இருக்கிறோம் என்று எந்த முன்னேற்பாடும் இல்லாமல், அலட்சியமாக இணையவழி வகுப்புகளை அணுகக்கூடாது. பள்ளி, கல்லூரியில் வகுப்புகளுக்கு எந்த முன்னேற்பாடுகளுடன் கலந்துகொள்வீர்களோ, அதே முன்னேற்பாடுகளுடன்தான் இணையவழி வகுப்புகளிலும் கலந்துகொள்ள வேண்டும். நீங்கள் அணிந்திருக்கும் உடை, அமர்ந்திருக்கும் இடம், நடவடிக்கை என வழக்கமான வகுப்புகளுக்குப் பொருந்தும் அனைத்துமே இணையவழி வகுப்புகளுக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

இடம் முக்கியம்

இணையவழி வகுப்புகளை கட்டில், சாப்பாட்டு மேசை போன்ற இடங்களில் அமர்ந்து கவனிப்பது சரியாக இருக்காது. இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கென தனியாக ஓர் இடத்தை வீட்டில் தேர்ந்தெடுத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும். வரவேற்பறையில் பெற்றோர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது, அதே அறையில் அமர்ந்து கவனச்சிதறல்

இல்லாமல் இணையவழி வகுப்புகளை கவனிக்க முடியாது. வீட்டில் கவனச்சிதறல் இல்லாமல் அமைதியாகவும் ஊக்கத்துடனும் வகுப்பைக் கவனிக்க ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை, நீங்கள் படிக்கும் இடம் படுக்கையறையிலிருந்து தள்ளியிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

கைபேசிப் பயன்பாடு

வீட்டில் கணினி, மடிக்கணினி, இணையவசதி இருக்கும் மாணவர்கள், கைபேசி மூலம் இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்வததைத் தவிர்க்க வேண்டும். ஸ்மார்ட்போனில் நீங்கள் வகுப்புகளைக் கவனித்துகொண்டிருக்கும்போது வரும் சமூக ஊடக அறிவிப்புகள், வாட்ஸ்அப் செய்திகள் போன்றவற்றால் எளிமையாக உங்கள் கவனம் சிதறுவதற்கு சாத்தியமுள்ளது. அதனால் வாய்ப்புள்ள மாணவர்கள் ஸ்மார்ட் போனை இணையவழி வகுப்புகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். வாய்ப்பில்லாத மாணவர்கள் சமூக ஊடக, வாட்ஸ்அப் அறிவிப்புகளை ‘மியூட்’ செய்துகொள்வது அவசியம். இதன்மூலம் தேவையற்ற கவனச் சிதறலைத் தவிர்க்கலாம்.

இலக்குகள் தேவை

இணையவழி வகுப்புகளில் படித்தாலும், எப்போதும்போல் உங்கள் படிப்புக்கான அன்றாட இலக்குகளை வகுத்துக்கொள்வதுதான் சிறந்தது. சரியான இலக்குகள் இல்லாவிட்டால், எளிதில் நீங்கள் ஊக்கத்தை இழக்க நேரிடும். அதனால், உங்களுடைய பாடங்களைப் பொறுத்து, அதற்கான இலக்குகளை வகுத்துக்கொண்டு அவற்றை அடைய முயற்சிப்பது இந்தச் சூழலுக்கு அவசியம்.

குறிப்பு எடுக்கும் முறை

வகுப்பில் பாடங்களை கவனிக்கும்போது எப்படிக் குறிப்புகள் எடுப்பீர்களோ, அதே மாதிரி இணையவழி வகுப்புகளின்போதும் குறிப்பு எடுப்பது அவசியம். வகுப்பு முடிந்த பிறகு, பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதற்கு குறிப்பெடுப்பது மிகவும் உதவியாக இருக்கும். வகுப்பில் நீங்கள் கவனித்த விஷயம் ஒருவேளை மறந்துபோனாலும், நீங்கள் எடுத்த குறிப்புகள் எளிமையாக உங்களுக்கு அதை நினைவுப்படுத்திவிடும்.

நண்பர்கள் குழு

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத சூழலில், நண்பர்களை அன்றாடம் சந்திக்க முடியாது. இணையவழி வகுப்புகள் மூலம் கல்வியைத் தொடரும் இந்தச் சூழலில் நண்பர்களுடன் வகுப்புகள், பாடங்கள் குறித்துக் கலந்துபேசுவது உதவியாக அமையும். அதனால் உங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழு அமைத்து அவர்களுடன் இணையவழியாகவோ, தொலைபேசி வழியாகவோ வகுப்புகள், பாடங்கள், இலக்குகள் குறித்து அன்றாடம் கலந்துரையாடலாம். உங்களுடைய இந்தக் குழு உரையாடல், நண்பர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற வருத்தத்தைப் போக்குவதற்கான வாய்ப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x