Published : 28 Aug 2020 09:46 AM
Last Updated : 28 Aug 2020 09:46 AM

மிகை அவருக்குப் பகை! - எஸ்.பி.ஜனநாதன் நேர்காணல்

எஸ்.பி.ஜனநாதனுடைய படங்களுக்கு வேண்டுமானால் கால இடைவெளி இருக்கலாம். ஆனால், அவருடைய படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும் ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் இடைவெளி என்பதே கிடையாது. ‘இடது சாரி இயக்குநர்’ என்று அவரை விமர்சகர்கள் குறிப்பிட்டாலும் அவர் தேர்வு செய்யும் கதைக் களங்கள் அனைத்து உயிர்களுக்குமான அரசியலைப் பேசுபவை. எழுதும் கதாபாத்திரங்கள் எளிய, சாமானிய, விளிம்பு நிலை மக்களிடமிருந்து எழுந்து வருபவை.

எத்தனை ஆழமாக கருத்துகளையும் விவாதங்களையும் அவரது படங்கள் முன்னெடுத்தாலும் அவை ரசிகர்களை ‘என்கேஜிங்’ செய்யும் கமர்ஷியல் பொழுதுபோக்குப் படங்கள் என்ற அடிப்படையில் வசூல் களத்திலும் ‘லாபம்’ ஈட்டுபவை. இம்முறை அவர் தனது படத்துக்கே ‘லாபம்’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறார். அதிலிருந்தே அவரது படம் கூற வரும் அரசியல் பிடிபட்டிருக்கும். விஜய்சேதுபதி - ஸ்ருதிஹாசன் ஜோடியுடன் ஜெகபதிபாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் சூழ்நிலையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

ஒரு சூதாட்ட இயந்திரத்தில், ‘பாவம்’, ‘சாபம்’ என்றெல்லாம் மாறி, இறுதியில் ‘லாபம்’ என்ற படத்தின் தலைப்பில் நிலைகுத்தி நிற்பதுபோல ‘டைட்டில் கிராஃபிக்ஸ்’ செய்திருக்கிறீர்கள். அதுவே படத்தின் அரசியலைச் சொல்லிவிடுகிறதே...

முதலாளி முதலீடு செய்கிறார், அதற்குக் கிடைக்கும் வட்டிதான் லாபம் என்று ஒருவர் சொல்கிறார். இன்னொருவர், முதலாளி தைரியமாக முதலீடு செய்கிறார், அந்தத் தைரியத்துக்கான பரிசுதான் லாபம் என்கிறார். ஆனால், லாபம் என்றால் என்ன என்பது யாருக்கும் பிடிபடவே இல்லை. ‘ஒருவன் பொருளை உற்பத்தி செய்கிறான் அல்லவா, அவனுக்குச் சேர வேண்டியதே லாபம்’ என்று காரல் மார்க்ஸ் சொல்கிறார்.‘லாபம் என்ற ஒன்று இல்லவே இல்லை’ என்கிறார்.

முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு பண்டமாற்று முறை நடந்தது. பொருள்கள் கொடுத்து, வாங்குவதில் அளவுகள் குறைந்தாலும் ஒரே மதிப்பு இருந்தது. இப்போது என்ன செய்கிறார்கள் என்றால் விலை குறையும் போது வாங்கி வைத்துக்கொண்டு, விலை ஏறும்போது விற்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் பணம் வேறொரு வழிக்கு அனைவரையும் கடத்திவிட்டது. அனைத்து நிபுணர்களுமே மார்க்கெட்டில் தான் லாபம் உருவாகிறது என நினைத்தார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், உற்பத்தி செய்யும் இடத்திலேயே லாபம் இருக்கிறது என்கிறேன். உற்பத்தி என்ற இடத்தில் முதன்மையானவன் விவசாயி என்ற நாம் மறந்துபோன உண்மையை வெளிச்சம்போட்டுச் சொல்கிறேன்.

கதாநாயகன் இந்தக் களத்தில் என்ன செய்கிறார், அவர் ஒரு விவசாயியா?

இங்கு விவசாயி என்பவருக்கு ஓர் அசலான பிம்பம் இருக்கிறது. ‘நாம் சோற்றில் கை வைக்க வேண்டுமென்றால், விவசாயி சேற்றில் கால் வைக்க வேண்டும்’ என்கிறோம். உண்மைதான், நெருங்கிப்போய்ப் பார்த்தால் உலகம் இயங்குவதே விவசாயத்தால்தான் என்பது தெரிகிறது. விவசாயம் - தொழிற்சாலைகள் இரண்டுமே தனித்தனி கிடையாது. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு விவசாயம் வேண்டும். விவசாயம் நின்று போய்விட்டால் கரும்பு, கயிறு, நூல், பஞ்சு, ஆயத்த ஆடைகள் என எந்தவொரு தொழிற்சாலையும் இயங்காது. தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை விளைவித்துக் கொடுக்கும் செழிப்பான ஊர் அது. ஆனால், செழிப்பற்றுப் போயிருக்கிறது. அப்போது அங்கு வரும் ‘பக்கிரி’என்ற கதாபாத்திரம் எப்படி மக்களோடு மக்களாக மாறிப் போராடுகிறார் என்பதே கதை.

எஸ்.பி.ஜனநாதன்

‘லாபம்’ படத்தின் ட்ரைலரில் சர்க்கரை ஆலை, நூற்பு ஆலைகள் வருகின்றன. இந்த இரண்டு தொழில்களும் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றனவா?

ஒரு விவசாயி கரும்பு உற்பத்தி செய்கிறார். அந்தக் கரும்பைத் தொழிற்சாலைக்குக் கொடுக்கிறார். அது முதலில் கொதிக்க வைக்கப்படுகிறது. அதில் வரும் நீராவி மூலமாக மின்சாரம் தயாரிக்கிறார்கள். அந்த மின்சாரத்தை வைத்தே தொழிற்சாலை இயங்குகிறது. மீதமிருக்கும் மின்சாரத்தை விற்றுவிடுகிறார்கள். பின்னர் கரும்புச் சாற்றைக் கொதிக்க வைத்துச் சர்க்கரை எடுக்கிறார்கள். சர்க்கரைக் கழிவிலிருந்து பீர், பிராந்தி, ரம், ஜின், ஆல்கஹால், ஸ்பிரிட் ‘பை-புராடெக்’ தயாரிக்கிறார்கள். நமது கரும்பிலிருந்து தான் இந்த மதுபானம் உருவாகியுள்ளது என்பது விவசாயிக்கே தெரியாது. அது தெரியாமல் இரவானால் அரசு மதுக்கடையின் வாசலில் நிற்கிறான். இந்த விஷயங்களை எல்லாம் படத்தின் கதையோட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.

விஜய் சேதுபதியை ‘பக்கிரி’ ஆக்க என்ன காரணம்?

சினிமாவை நான் வாழ்க்கையின் லட்சியமாக நினைக்கவில்லை. என்னைவிடச் சிறந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த சில விஷயங்களைச் சொல்லப் படம் எடுக்கிறேன். அதில் அப்படியே ரொம்பவே ஃபீல் பண்ணி நடிக்கிற நடிகர்கள் எனக்கு வேண்டாம். சொல்லும் விஷயம் மக்களிடையே எளிமையாகப் போய்ச் சேர வேண்டும். நடிகர் சொல்லும் விஷயம் சரியாக இருக்கிறதே என்று மக்கள் நினைக்க வேண்டும். அதற்கு எனக்கு விஜய் சேதுபதி கிடைத்தார். ஊர் ஊராகச் சுற்றுபவர்களை பக்கிரி என்பார்கள். அதை விஜய் சேதுபதி கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மிகத் தெளிவானவர். ஒரு காட்சியைச் சொன்னால், அதில் பேசும் வசனங்கள், ஏன் பேசுகிறோம், என்ன பிரச்சினை, என்ன சூழல் என்பதெல்லாம் கேட்டு உள்வாங்கி எவ்வளவு தேவையோ அவ்வளவு நடிப்பார். மிகை அவருக்குப் பகை.

ஸ்ருதிஹாசன், தன்ஷிகா என இரண்டு கதாநாயகிகள்?

கிளாரா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் வருகிறார். சமூக வலைத்தளத்தில் என்னை எத்தனை லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் தெரியுமா என்றெல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் நாயகனுக்கு உதவியாக இருப்பார். முதலில் இந்தக் கதாபாத்திரத்தை ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நினைத்தே கதை சொன்னேன். எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லாமல் பேசும் பெண்ணாக இருக்கிறார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்ஷிகாவுக்கு வில்லனுடன் வரும் கதாபாத்திரம். முதலில் அதற்கு யாரும் பொருந்தவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய நாள் இரவு போன் செய்து, ‘நீதான்மா நடிக்க வேண்டும் என்று கேட்டேன். அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வந்துவிட்டார். இதற்கு அவர் என் மீது வைத்திருக்கும் மரியாதையே காரணம்.

ஒவ்வொரு படத்துக்கும் நிறைய இடைவெளி விடுகிறீர்களே?

என்னைப் படம் இயக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். சென்னையில் பிறந்து வளர்ந்ததில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. ஒரு படம் முடிந்தவுடன், அடுத்த படம் தொடங்கினால் தான் செலவுக்குப் பணம் கிடைக்கும். எனக்குத் திருமணமாகவில்லை என்பதால் உடனுக்குடன் படம் பண்ண வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. எனக்குத் தேவை இருந்திருந்தால் உடனுக்குடன் படம் பண்ணியிருப்பேன் என நினைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x