Last Updated : 22 Aug, 2020 08:38 AM

 

Published : 22 Aug 2020 08:38 AM
Last Updated : 22 Aug 2020 08:38 AM

கரோனா தொற்று குழந்தைகளைத் தாக்குமா?

தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும்… ஏன், உலக அளவிலும் கரோனா தொற்று பெரியவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. சமீபத்தில் தமிழகத்திலும் திரிபுராவிலும் பச்சிளம் குழந்தைகள் கரோனாவில் இறந்துள்ள செய்தி, ஊடகங்களில் இடம்பெற்றதும் ‘கரோனா குழந்தைகளையும் தாக்குமோ’ எனும் அச்சம் பொதுவெளியில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

பெரியவர்களோடு ஒப்பிடும்போது கரோனா தொற்று குழந்தைகளுக்குக் குறைவாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் கரோனாவால் இறந்தவர்கள் விகிதம் 0.2 மட்டுமே! அதற்குப் பலதரப்பட்ட காரணங்கள்...

குறைவான கரோனா ஏற்பிகள்

ஊரடங்கின்போது ஒன்பது வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்ப தால், அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் சாத்தியம் இயல்பாகவே குறைந்துவிடுகிறது. கரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்கு வதற்கு மூக்கு, தொண்டை, நுரையீரல் செல்களில் ACE2 புரத ஏற்பிகள் போதுமான அளவுக்கு இருக்க வேண்டும். வழக்கத்தில் இந்த ஏற்பிகள் சிறுகுழந்தைகளுக்குக் குறைவாகவே இருப்பதால், கரோனா தொற்றுவதற்கான சாத்தியமும் குறைந்துவிடுகிறது. அப்படியே தொற்றினாலும், அதன் தாக்கம் மிதமாகவே இருக்கிறது.

குழந்தைகளுக்கு நுரையீரல்கள் சிறிதாக இருப்பதால், கடுமையாக இரும மாட்டார்கள். இருமலில் வெளிப் படும் நீர்த்திவலைகளும் குறைவு. அவை பரவும் வேகமும் தொலைவும் குறைவு. இதனால் குழந்தைகளுக்குத் தொற்று இருந்தாலும் அது அருகில் உள்ள குழந்தைக்கோ மற்றவர்களுக்கோ பெரியவர்களைப் போல வேகமாகப் பரவுவதில்லை. மேலும், குழந்தைகளுக்குப் போடப்படும் பிசிஜி, எம்.எம்.ஆர். ஆகிய தடுப்பூசிகளும் கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலைத் தருகின்றன.

மற்றொன்று, குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பரிசோதனை செய்வதில்லை. அதனால், பாதிப்பு இருந்தாலும் அது அரசின் கணக்குக்கு வருவதில்லை. அதேநேரம் பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடலின் அமைப்பும் செயல்பாடுகளும் பெரியவர்களைப் போலவே இருப்பதால், கரோனாவின் பாதிப்பும் பெரியவர்களுக்கு இணையாகவே இருக்கிறது.

குறைவான ஆபத்து ஏன்?

கரோனா தொற்று குழந்தைகளைத் தாக்கினாலும் பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுவதில்லை. என்ன காரணம்? குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் வளர்ச்சி நிலையில் இருக்கிறது. அதனால், பெரியவர்களுக்கு உயிர் ஆபத்தை உண்டாக்கும் ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ (Cytokine storm) எனும் தடுப்பு மண்டல மிகைச் செயல்பாடு குழந்தைகளுக்கு நிகழ்வது குறைவு; அடுத்ததாக, பெரியவர்களைப் போல் குழந்தைகளுக்கு வேறு துணைநோய்கள் (Comorbidities) காணப்படுவதும் வெகு குறைவு. பலதரப்பட்ட உறுப்புகளைத் தாக்கி அழிக்கும் புரதங்களும் குறைவாகவே சுரக்கின்றன. உயிர்ப் பலியை ஏற்படுத்தும் ‘செப்சிஸ்’ (Sepsis) எனும் நச்சுத்தன்மை அவ்வளவாக உண்டாவதில்லை.

ஆபத்து யாருக்கு?

இதுவரை கரோனாவால் பலியான குழந்தைகளை ஆய்வுசெய்ததில் ரத்தசோகை, உடற்பருமன் உள்ளவர்கள், நோய்த் தடுப்பாற்றல் இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, சிறுவயது நீரிழிவு (Childhood diabetes), பிறவி இதயக் கோளாறு, பிறவி சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் உள்ளவர்கள்தாம் கரோனா ஆபத்து மிகுந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், இவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் மிகவும் குறைவு.

தொற்று எப்படி ஏற்படுகிறது?

சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தாலும், குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்றுவரும்போது கரோனாவைக் கொண்டு வந்துவிடுகின்றனர். பெரிய குழந்தைகள் என்றால் பக்கத்து வீடுகளில் விளையாடச் செல்லும்போது கரோனா தொற்றும் சாத்தியம் உண்டாகிறது. வீட்டில் யாருக்காவது அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறி இல்லாமலோ கரோனா தொற்று இருந்து தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காதபோது, குழந்தைகளுக்கும் அது தொற்றி விடலாம். கரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகள் பிரசவம் ஆனதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றாவிட்டால், அவரிடமிருந்து பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்றிவிடலாம்.

கு. கணேசன்

அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகளுக்குப் பெரும்பாலும் சாதாரண ஃபுளூ காய்ச்சலைப் போலவே கரோனா தொற்றும் இருக்கிறது. மூக்கு ஒழுகல், காய்ச்சல், இருமல், தும்மல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், சோர்வு ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளுக்காகப் பயப்படத் தேவையில்லை. மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு வீட்டிலேயே குழந்தையைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். சாதாரண சிகிச்சையிலேயே ஒரு வாரத்தில் அறிகுறிகள் மறைந்துவிடும்; அடுத்த வாரத்தில் தொற்று குணமாகிவிடும். சோர்வு மட்டும் சில நாட்களுக்கு இருக்கலாம். ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுத்துவந்தால், அதுவும் சரியாகிவிடும்.

எப்போது கவனமாக இருக்க வேண்டும்?

குழந்தைக்குக் காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் நீடிக்கிறது, வேகவேகமாக மூச்சுவிடுகிறது, நீலம் பூத்த உதடுகள், கடுமையான சோர்வு, எதையும் சாப்பிட முடியவில்லை, படுத்த படுக்கையாக இருக்கிறது, சுயநினவை இழக்கிறது…. பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு 95%-க்கும் குறைவாக இருக்கிறது… இந்த அறிகுறிகள் தோன்றுமானால் உடனடியாகக் குழந்தை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற வேண்டும்.

அலட்சியம் வேண்டாம்!

அரிதாகக் குழந்தைகளில் சிலர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, கண்கள் சிவப்பது, உடலில் சிவப்புநிறத் தடிப்புகள், வெடிப்புடன் சிவந்த உதடுகள் போன்ற வேறுபட்ட அறிகுறிகளுடனும் (Paediatric Inflammatory Multisystem Syndrome - PIMS) காணப்படு கின்றனர். இவையும் கரோனா தொற்றின் வெளிப்பாடுதான். பெற்றோர் இவற்றை அலட்சியப்படுத்தாமல், மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்ள வேண்டும்.

தொற்றைத் தடுப்பது எப்படி?

வீட்டில் யாருக்காவது கரோனா தொற்று இருந்தால், குழந்தைக்குத் தொற்றுவதைத் தவிர்க்க அவர்களுக்கு அருகில் குழந்தையை விடக்கூடாது. தொற்றுள்ளவர்களும் சரி, குழந்தையும் சரி முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டும். குழந்தையை வெளியிலோ பக்கத்து வீடுகளிலோ விளையாட அனுமதிக்கக் கூடாது. கைகளைச் சோப்புப் போட்டு அடிக்கடி கழுவச் சொல்ல வேண்டும். திருமணம், பிறந்தநாள் விழா போன்ற கூட்டம் கூடும் இடங்களுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லக் கூடாது.

தொற்றுள்ள குழந்தையைக் கவனிப்பது எப்படி?

தொற்றுள்ள குழந்தையை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். இது நடைமுறையில் சிரமம்தான். இதில் பெற்றோர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மருத்துவர் கூறும் மருந்துகளுடன் நிறைய தண்ணீர் அருந்த வைக்க வேண்டும். பழங்களும் பழச்சாறுகளும் கொடுக்கப்பட வேண்டும். பால், பருப்பு, முட்டை, மீன், சுண்டல் போன்ற புரதச் சத்துள்ள உணவு வகைகள் தரப்பட வேண்டியது முக்கியம்.

குழந்தைக்குப் போதிய ஓய்வு அவசியம். விளையாடவிடக் கூடாது. சிறு குழந்தைகள் வீட்டில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. ஆனாலும், குழந்தைகள் அடிக்கடி வாய், மூக்கு, கண், முகத்தைத் தொடக் கூடாது என்பதைப் புரிய வைக்க வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் முகத்தைக் கைக்குட்டையால்/மென்தாளால் மூடிக்கொள்வதையும் பழக்கப்படுத்த வேண்டும். இதைப் பின்பற்றக் குழந்தைகள் சோம்பல்பட்டால், சிறு சிறு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.

தொற்றுள்ள பெரிய குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். குழந்தையைக் கவனிக்கும் பெற்றோரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். குழந்தையும் பெற்றோரும் அடிக்கடி கை கழுவிக்கொள்ள வேண்டும். வீட்டில் தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டும். குழந்தைகளை முதியவர்களுக்கு அருகில் விட வேண்டாம். குழந்தைகள் அதிகம் தொடும் கதவு, தாழ்ப்பாள், தண்ணீர்க் குழாய் மற்றும் தரைதளத்தையும் செல்போன்கள், விளையாட்டுப் பொருள்கள், ரிமோட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றையும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துங்கள்.

குழந்தையின் அறை காற்றோட்டமாக இருக்க சன்னல்களைத் திறந்து வையுங்கள். ஏ.சி. போட வேண்டாம். அடுத்த வீட்டுக் குழந்தைகள் விளையாட வருவதைத் தவிருங்கள். உறவினர் களையும் விருந்தினர்களையும் அனுமதிக்கக் கூடாது. குழந்தைக்குத் தனியாகச் சாப்பாட்டுத் தட்டு, டம்ளர்களைப் பயன்படுத்துங்கள். அவற்றைக் கொதிக்கும் நீரில் கழுவுங்கள்.

குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கரோனா தொற்றால் பெற்றோர் அச்சப்படத் தேவை யில்லை; குழந்தையையும் அச்சப்படுத்த வேண்டியதில்லை; பெரும்பாலும் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கரோனா அடங்கி விடும்.

டாக்டர் கு. கணேசன்

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x