Published : 16 Aug 2020 10:06 AM
Last Updated : 16 Aug 2020 10:06 AM

கரோனா காலம்: அன்பும் பகிர்தலுமே இன்றைய முதன்மைத் தேவை

என் தோழி மிகவும் பொறுமைசாலி. கல்லூரிப் படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே அவளுக்குத் திருமணமாகிவிட்டது. அவளுடைய கணவர் படித்தவர், உயர் பதவியில் இருப்பவர், மிகவும் அமைதியானவர் எனப் பெயரெடுத்தவர். ஒரு நாள் கணவன், மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின்போது அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த குழம்பை எடுத்துத் தோழி மீது ஊற்றிவிட்டார் அவருடைய கணவர். தோழி துடித்துடித்துப்போனார்.

அதற்கு அடுத்த நாள் இரு குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள் என் தோழியின் வீட்டுக்குச் சென்றார்கள். மணிக்கணக்கில் பேசினார்கள். என் தோழியோ, “அவரு ஏதோ கோபத்தில் செஞ்சிட்டாரு. இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க” எனச் சொல்லிவிட்டு சென்றார். ஏன் இப்படி அவர் சொன்னார் என்பது பலரும் அறிந்த உண்மைதான். “வீட்டுக்காரரைப் பத்தி சொல்றதால என்ன நடக்கப்போகிறது? நானும் குழந்தையும் அதன் பிறகு தனியா தானே இருக்கணும்? பொம்பளைங்க தனியா இருந்தா எவ்வளவு பிரச்சினை வரும்னு தெரியும். அதான் அப்படியே விட்டுட்டேன்” என்று பெரும்பாலான இல்லத்தரசிகளின் குமுறலைத்தான் என் தோழியும் வெளிப்படுத்தினார்.

திணிக்கப்படும் நிர்பந்தம்

கரோனா தொற்றிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்கலாம்தான். ஆனால், கொடூரக் கணவர்களிடமிருந்து தப்பிக்கப் பெண்கள் எங்கே செல்வது? வீடும் குடும்பமும் பெண்கள் பலருக்கு எவ்வளவு கொடுமையானதாக உள்ளன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தேசிய குற்றப் பதிவேடு. நாட்டில் பெண்களுக்கு எதிராகக் கண்ணுக்குத் தெரிந்து நடைபெறும் குற்றங்களைவிட வீட்டிக்குள் நடக்கும் வன்முறையே அதிகம். அதிலும் ‘குடும்பத் தலைவி’ என்கிற கீரிடத்தை அணிவித்துவிட்டுத் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமையிலிருந்து வெளிவர முடியாத பெண்கள், கடைசியில் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தற்கொலை என்பதே ஒரு வகையில் கொலைதான். யாரும் விரும்பித் தற்கொலை செய்துகொள்வதில்லை. எந்த நிர்பந்தமும் இல்லையெனில் தற்கொலைகள் நிகழாது. ஆனால், நம் சமூக அமைப்போ பல்வேறு வகையி லும் நிர்பந்தங்களைப் பெண்கள் மீது திணிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட என் தோழிக்கு நிகழ்ந்ததைப் போன்ற உடல்ரீதியான கொடுமைகளும் மனரீதியான அச்சுறுத்தல்களும் எல்லை கடக்கும்போது, இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்கிற கட்டத்தில்தான் பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

தேசிய குற்றப் பதிவேடு, 2018-ம் ஆண்டுக்கான பட்டியல் சில மாதங்க ளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 2018-ல்மட்டும் 42,391 பெண்கள் தற்கொலை செய்து இறந்திருக்கின்றனர். அதில் குடும்பத் தலைவிகள் 22,937 பேர். தற்கொலை செய்துகொண்ட பெண்களில் சரிபாதிக்கும் மேல், அதாவது 54 சதவீதத்தினர் குடும்பத் தலைவிகள் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல் தற்கொலை செய்துகொண்ட 1,34,516 இருபாலினரில் தினக்கூலித் தொழிலாளர்கள் 22 சதவீதம் எனவும் அதற்கு அடுத்தபடியாக குடும்பத் தலைவிகளே அதிக எண்ணிக்கையில் (17 சதவீதம்) இறந்திருப்பதாகவும் அந்தப் பட்டியல் சொல்கிறது.

மௌனத்தை உடையுங்கள்

குடும்பம்தான் எல்லோருக்குமான அடைக்கலம் என்று சொல்லப்படும் நிலையில் அந்த அமைப்பின் ஆணி வேரான பெண்கள் இவ்வாறு நடத்தப் படுவது ஏன்? இதற்கு ஆணாதிக்கம், புரிதலின்மை, பரஸ்பர அன்பு இல்லாத நிலை, போதையின் தாக்கம் என எவ்வளவோ காரணங்கள் சொல்லப் பட்டாலும், அவை அத்தனைக்கும் பலியாவது என்னவோ ‘குடும்பத் தலைவி’கள்தாம்.

மன அழுத்தமே ஒருவரைத் தற்கொலைக்குத் தள்ளுகிறது. தொடர் மனச்சோர்வே கடுமையான மன அழுத்தத்துக்கு வித்திடுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு அப்படியான மனச்சோர்வை ஏற்படுத்துவது குடும்பச் சூழல்தான். நாம் பேசுவதைக் கேட்கவோ கேட்டதைப் புரிந்துகொள்ளவோ நம் திறமையை அங்கீகரிக்கவோ யாரும் இல்லாத சூழலில்தான் மன அழுத்தம் தோன்றுகிறது.

கோயில்களில் குவியும் பெண்கள் கூட்டத்துடன் இதைப் பொருத்திப் பார்க்கலாம். தங்கள் மனத்தில் இருக்கும் வலிகளையும் ஏக்கங்களையும் குறைகளையும் செவிகொடுத்துக் கேட்க மனிதர்கள் இல்லாதபோது, அவர்கள் வழிபாட்டுத் தலங்களில் குவிகிறார்கள். ஆனால், இதை அறிவியல்பூர்வமாக அணுக வேண்டியதன் அவசியம் பலருக்குப் புரிவதில்லை. மன நல ஆலோசகரைச் சந்திப்பதை தகுதிக்குறைவாக நினைக்கிறவர்களும் உண்டு. உடலுக்கு மருத்துவர் இருப்பதுபோல் மனத்துக்கு முடியவில்லை என்றால், அதற்கேற்ற மருத்துவரைச் சந்திப்பதில் தவறென்ன?

கணவன், குழந்தைகளின் பங்கு

வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் தேவை களையும் எதிர்பார்ப்புகளையும் ஓடியோடி பூர்த்திசெய்யும் குடும்பத் தலைவிகள், தங்களின் குறைந்தபட்சத் தேவைகளைக் கூடக் கண்டு கொள்வதில்லை. நாள் முழுவதும் நீடிக்கும் குடும்பத் தலைவி களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டியவர் யார்? முதலில் கணவர் அவருக்குத் துணையாக நிற்க வேண்டும். வீட்டு வேலைகள் உட்பட சுகதுக்கம் அனைத்தையும் இருவரும் பகிர்ந்துகொள்ளும் சமநிலை உருவாக வேண்டும்.

அடுத்து, குழந்தைகள். தங்கள் தேவைகளை பூர்த்திசெய்யும் தாயின் குறைந்தபட்ச வலிகளைக்கூட உணராத வகையில் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதால் என்ன பயன்? தாயின் வலியைக் காலம் கடந்த பிறகு குழந்தைகள் புரிந்துகொள்வதால் என்ன மாறிவிடப் போகிறது? பெற்றோரின் சிரமங்களே தெரியாமல், குழந்தைகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் செய்து கொடுப்பதே அவர்களைப் பலவீனப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கைப்பாடுகளை உரிய முறையில் கூறி வளர்ப்பதோ, அவர்களின் சிறகு களுக்கு வலுப்படுத்தும். கணவனும் குழந்தைகளும் துணையாக நின்றால்தான் குடும்பத்தலைவியும் குன்றுபோல் உயர்ந்து நிற்க முடியும்.

தனித்திருப்பது துணிவின் வெளிப்பாடு

சவால்களை எதிர்த்து நிற்பதுதான் வாழ்க்கை. சிலருக்குக் குடும்பச் சூழல் வலிநிறைந்ததாக மாறியபோதும், துணிந்து நிற்கும் தனிமனித ஆற்றலே அப்பெண்களின் வெற்றிகரமான வாழ்வுக்கு அச்சாரம். வாழ்க்கை அனுபவங்களே புதிய சிந்தனைகளைத் தருகின்றன. அவையே நம்மை முன்னோக்கி நகர்த்துகின்றன. துவண்டு போகாமல் துணிந்து நிற்பதே எல்லாவற்றுக்கும் உண்மையான தீர்வாகும். அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் பல தடைகளை கடந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

அன்பும் பகிர்தலுமே வாழ்க்கைக்கு அழகூட்டும். அதுவே, குடும்பத் தலைவிகளின் மனச்சோர்வை, மன அழுத்தத்தைக் குறைக்கும். ‘அன்பின் அடிப்படையில் செயல்கள் புரிவதையும் கட்டளைகளை நிறைவேற்றுவதையும் ஒன்றிணைப்பது என்பது இயலாத காரியம்’ என்று புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறவுகளும் அதன் செயல்பாடுகளும் கட்டளைகளை நிறை வேற்றும் வடிவமாக இல்லாமல், அன்பின் அடிப்படையில் இருப்பதே குடும்பத் தலைவிகளின் தற்கொலை களைத் தடுக்கும். குடும்ப உறவையும் வலுப்படுத்தும்.

வாழ நினைத்தால் வாசல் திறக்கும்

இணையவழி கலந்துரையாடல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்குத் தீர்வு காணும் வகையில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பாக இணையவழி கலந்துரையாடல் ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கிறது. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்., வழக்கறிஞர் அஜிதா ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள், காவல்துறையின் செயல்பாடுகள் சார்ந்த விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். வாசகியரின் கேள்வி களுக்கும் இவர்கள் பதில் அளிப்பார்கள்.

நிகழ்ச்சியில் பங்குபெற https://connect.hindutamil.in/women.php இந்த இணைப்புக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: renugadevi.l@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x