Last Updated : 15 Aug, 2020 09:50 AM

 

Published : 15 Aug 2020 09:50 AM
Last Updated : 15 Aug 2020 09:50 AM

உடற்பயிற்சியின்போது முகக் கவசம் ஆபத்தா?

ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அதற்கு நம்மை அடிமைப்படுத்தும் வசிய ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. தினமும் உடற்பயிற்சி செய்து பழகியவர்களுக்கு இந்தக் கூற்றிலிருக்கும் உண்மை புரியும். கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்காப்பு நடவடிக்கையாகப் பூங்காக்கள், கடற்கரைகள் போன்றவற்றுடன் உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. உலகெங்கும் மக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

உடற்பயிற்சியை அன்றாட வாழ்க்கையின் அங்கமாகக் கொண்டவர்களுக்கு, திடீரென்று அதை நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது ஒருவிதக் குற்றவுணர்வை ஏற்படுத்துவதுடன், மனச்சோர்வையும் உண்டாக்கும். வீட்டுக்குள்ளேயே யோகா போன்ற எளிய உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு இந்த முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. திறந்தவெளியில் நடைப்பயிற்சியோ ஓட்டப் பயிற்சியோ செய்பவர்களுக்கும் உடற்பயிற்சிக் கூடமே கதியென இருக்கும் சிக்ஸ்பேக் ஆர்வலர்களுக்கும் இந்த முடக்கம் ஏற்படுத்திய பாதிப்பு மிக அதிகம்.

முகக்கவசம் நல்லதா?

பொது முடக்கத்தில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிந்தபடி சாலையோரமாக நடைப்பயிற்சி யிலோ ஓட்டப்பயிற்சியிலோ ஈடுபடுவோரை அதிகம் காண முடிகிறது. அது மட்டுமல்லாமல்; பல கட்டுப்பாடு களை உள்ளடக்கிய வழிகாட்டு தல்களுடன் உடற்பயிற்சிக் கூடங்களும் திறக்கப்பட்டுவிட்டன. அங்கும் முகக்கவசம் அணிந்தே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டிய சூழல் நிலவுகிறது. முகக்கவசம் அணிந்தபடியே உடற்பயிற்சியில் ஈடுபடுவது நம்முடைய நலனுக்கு உகந்ததா என்ற கேள்வியை சீனாவில் ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட மோசமான பாதிப்பு எழுப்பியுள்ளது.

சீனாவில் நேர்ந்த துயரம்

சீனாவின் வூகான் நகரத்தில் முகக்கவசம் அணிந்துகொண்டு ஜாக்கிங் சென்ற 26 வயது நபருக்கு திடீரென்று மார்பு வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜாக்கிங் செல்லும்போது அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிகுறிகளையும் அதனால் ஏற்பட்ட அசௌகரியங்களையும் புறந்தள்ளி அவர் தொடர்ந்து ஜாக்கிங் சென்றுள்ளார். அதுவும், பொது முடக்கத்தால் ஏற்பட்ட இரண்டு மாத இழப்பை ஈடுகட்டும் நோக்கில், வழக்கமாகச் செல்லும் மூன்று கிலோ மீட்டருக்குப் பதிலாக அன்று ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடியுள்ளார். வீட்டுக்கு வந்த பிறகு, மார்பு வலி தீவிரமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். முகக்கவசம் அணிந்தபடி, தீவிரமான உடற்பயிற்சி செய்ததால் அந்த நபரின் நுரையீரல் நிலைகுலைந்து முடங்கிப் போனதைப் பரிசோதனை முடிவுகள் உணர்த்தின.

சுவாசத் தடையை ஏற்படுத்தும் முகக்கவசம்

அதிகபட்சத் திறனுடன் உடல் செயல் படுவதற்குத் தேவைப்படும் காற்றை உள்ளிழுப்பதற்கு முகக்கவசம் எப்போதும் ஒரு தடையே. முகக்கவசம், காற்றோட்டத்துக்கான தடையை அதிகரிக்கும் என்பது நமக்குத் தெரியும். உடற்பயிற்சியின்போது நம்முடைய உடல் உச்சக்கட்ட திறனுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும். அப்போது நம்முடைய உடலுக்குக் காற்றின் தேவை அதிகம் என்பதால், சுவாசம் வேகமாகவும் ஆழமாகவும் தீவிரமாகவும் இருக்கும். இந்தச் சூழலில், முகச்கவசம் அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது, காற்றோட்டத்துக்குத் தடையை ஏற்படுத்தி, சுவாச செயல்பாட்டைக் கூடுதல் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.

மிதமான உடற் பயிற்சியின்போது, முகக்கவசம் பெரிய அளவில் சிரமத்தை ஏற்படுத்துவதில்லை. தீவிர / கடுமையான உடற்பயிற்சியின்போதே முகக்கவசம் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தீங்கானதாகவும் ஆபத்தானதாகவும் மாறுகிறது. எடுத்துக் காட்டுக்கு, கால்பந்து விளையாடும்போது ஒரு நிமிடத்துக்கு சுமார் 40 முதல் 100 லிட்டர் காற்றை உள்ளிழுக்க வேண்டிய தேவை ஏற்படும். இந்தத் தேவையை முகக்கவசம் தடைசெய்யும்போது, சுவாசிப்பதே சவாலானதாகவும் ஆபத்தான தாகவும் மாறிவிடும்.

பாதிப்புக்கு உள்ளாகும் மூளை

“உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, நம்முடைய தசைகள் லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன, இந்த அமிலமே கார்பன் டை ஆக்சைடாக மாற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இந்த கார்பன் டை ஆக்சைடு, வெளியேற வழியின்றி முகக்கவசத்துக்குள் அகப்பட்டுக்கொண்டால் என்ன ஆகும்? நாம் மிதமான நிலையிலிருந்து தீவிர உடற்பயிற்சி நிலைக்குச் செல்லும்போது, அதிகப்படியான காற்றின் தேவையாலும், வேகமான சுவாசத்தாலும், முகக்கவசத்துக்குள் சுழன்றுகொண்டிருக்கும் கார்பன் டை ஆக்சைடையே உள்ளிழுக்க நேர்கிறது, இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும். சுயநினைவையும் தன்னுணர்வையும் நாம் இழக்க நேரிடும். உடலின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையில், மூளை தனது செயல்திறனை முற்றிலும் நிறுத்திக்கொள்ளும் ஆபத்தான சூழல் உருவாகும்” என்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் நர்த்தனன்.

“இந்தப் பாதிப்பு அனைவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தனிப்பட்ட நபரின் உடல்திறனின் அடிப்படையிலேயே இந்தப் பாதிப்பு ஏற்படும். மலைவாழிடங்களில் வசிக்கும் மக்களுக்கு, குறைந்த அளவு ஆக்ஸிஜனில் தீவிர உடல் செயல்பாட்டில் ஈடுபடும் திறன் இயற்கையாகவே உண்டு. ஆனால், இது அனைவருக்கும் கைகூடுவதில்லை. பொதுவாக, முகக்கவசம் அணிந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது மிகுந்த ஆபத்தானது. அதுவும் என்95 போன்ற முகக்கவசத்தை அணிந்து தீவிர உடற்பயிற்சி யில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தானதாக முடியக்கூடும். என்95 முகக்கவசத்துடன் ஒப்பிடும்போது, அறுவைசிகிச்சை முகக்கவசம் சற்றுப் பாதுகாப்பானது. ஏனென்றால், அதில் தடையற்ற காற்றோட்டம் இருக்கும். அதேநேரம் எந்த முகக்கவசத்தை அணிவதாக இருந்தாலும், உடற்பயிற்சியை மிதமாக வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது” என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இதயத்துக்கு ஏற்படும் பாதிப்பு

மாரத்தானைப் போன்று நீண்ட தூரமும் அதிக நேரமும் ஓடுபவர்கள், முகக்கவசம் அணிந்துகொண்டு ஓட நேர்ந்தால், உடலில் ஆக்ஸிஜன் அளவு வெகுவாகக் குறைந்து, கார்பன் டை ஆக்சைடின் அளவு அபரிமிதமாக அதிகரிக்கும். இது ஆக்சிஜன் குறைந்த உயரமான மலைப்பகுதியில் உடற்பயிற்சி செய்வதற்கு இணையானது. இதனால், இதயத்தின் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இதயம் முடங்கிப்போகும் நிலையும் ஏற்படலாம். முந்தைய தலைமுறை நடிகரும், நடிகர் கார்த்திக்கின் தந்தையுமான முத்துராமன், ஊட்டியில் ஜாக்கிங் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தைத் தழுவியதற்கான காரணமும் இதுவே.

உயிரைக் காக்கவே கவசம்

உடற்பயிற்சி உடலுக்கு நல்லது. நோய்த் தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதால், முகக்கவசமும் நம்முடைய நலனுக்கு அவசியமே. இருப்பினும், இரண்டையும் ஒன்றாகச் செய்வது, நமக்கு ஆபத்தானதாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், முகக்கவசம் அணிந்தபடி உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திறந்தவெளியில் உடற்பயிற்சி செய்யும்போது, சமூக இடைவெளி விதிமுறைகளை நாம் பின்பற்றுகிறோம் என்றால், முகக்கவசம் அணியத் தேவையில்லை. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து வெளிப்படும் சிறிய நீர்த்திவலைகளால் மட்டுமே இந்த வைரஸ் பரவுகிறது.

நாம் சரியான இடைவெளியைப் பராமரித்தால், தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாகக் குறையும். பூங்காவில் ஓடும்போதோ ஜாகிங் செய்யும்போதோ, நாம் மற்றவர்களிடமிருந்து ஆறு அடி தூரம் இடைவெளி விட்டு இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்றால், முகக்கவசம் தேவையில்லை. முகக்கவசம் உயிரைக் காப்பதாக இருக்க வேண்டும், உயிரைப் பறிப்பதாக எப்போதும் இருந்துவிடக் கூடாது.

நுரையீரல் செயல்பாட்டைக் கண்டறிவது எப்படி?

நமது நுரையீரல் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட் அல்லது பி.எஃப்.டி
என்றழைக்கப்படுகின்றன. நுரையீரல் சோதனை களில் பல வகைகள் உள்ளன. அதில், ஸ்பைரோ மெட்ரியே மிகவும் பொதுவானது; எளிமையானது. நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு இலகுவாகவும் விரைவாகவும் காற்று சென்று வருகிறது என்பதை அளவிட இது உதவும்.

Body plethysmography எனும் நுரையீரல் கொள்ளளவுச் சோதனை, நுரையீரல் தக்கவைக்கும் காற்றின் அளவையும், மூச்சை வெளியேற்றிய பின் எஞ்சியிருக்கும் காற்றின் அளவையும் அளவிடுகிறது. Gas diffusion test, நுரையீரலிலிருந்து ரத்த ஓட்டத்துக்குக் கடத்தப்படும் ஆக்ஸிஜனையும் பிற வாயுக்களையும் அளவிடுகிறது. Exercise stress test, நுரையீரல் செயல்பாட்டை உடற்பயிற்சி எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிகிறது.

ஸ்பைரோமெட்ரி சோதனைகளை மட்டுமே வீட்டிலேயே செய்துகொள்ள முடியும். பீக் ஃப்ளோ மீட்டர், ஸ்மார்ட் பீக் ஃப்ளோ மீட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ஸ்பைரோ மீட்டர் போன்ற கருவிகள் அதற்கு உதவும். பீக் ஃப்ளோ மீட்டர் ரூபாய் 250-லிருந்து இணைய சந்தைகளில் கிடைக்கிறது. தற்போது பரவலாகப் பயன்பாட்டில் உள்ள பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ரூபாய் 1,100-லிருந்து கிடைக்கிறது. மற்ற கருவிகளின் விலை மிக அதிகம்.

இதையெல்லாம்விட, மூன்று மாடி ஏறிய பிறகும் நமக்கு மூச்சு வாங்கவில்லை என்றால், நம்முடைய நுரையீரல் நல்ல முறையில் செயலாற்றுகிறது என்பது உறுதி.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x