Published : 15 Aug 2020 09:50 AM
Last Updated : 15 Aug 2020 09:50 AM

தன்னுயிர்போல் காக்கும் மனிதர்கள் நம்மிலும் உண்டு!

ப. ஜெகநாதன்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்.

- பாரதியார்

இயற்கை ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அதைத் தொழி லாகவோ பொழுதுபோக்காகவோ மேற்கொண்டு பலரும் செயல்படுகிறார்கள். ஆனால், இது போன்ற எந்த அடையாளமும் இல்லாமல், இயற்கை ஆர்வலர்கல் சிலரின் செயல்பாடுகளுக்கு இணையான, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விஞ்சிவிடக்கூடிய ஒரு காரியத்தைச் செய்துள்ளனர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பொத்தக்குடி ஊர் மக்கள்.

தெருவிளக்கு ஸ்விட்ச் பெட்டியில் ஒரு பறவை கூடுகட்டியிருந்ததைப் பார்த்து, நாள்தோறும் அதைத் திறந்தால் அவற்றுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால், சுமார் 45 நாட்கள் இருளில் மூழ்கியிருந்தி ருக்கிறது அந்த ஊர். அந்தக் கிராமத்தில் 100 வீடுகள் இருக்கின்றன. மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் இருந்த கூட்டில் குண்டுகரிச்சானின் (Oriental Magpie Robin) முட்டைகளைக் கண்டவுடன் நாள்தோறும் மாலையில் விளக்கைப் போடும் இளைஞர் கருப்புராஜா, அவ்வூர் மக்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார். ஊர்மக்களும், இனிமேல் அந்தப் பெட்டிக்கு அருகில் செல்ல வேண்டாம் எனக் கூட்டாக முடிவுசெய்தனர். சிலர் தொடக்கத்தில் எதிர்த்தாலும், பின்னர் புரிந்துகொண்டு ஆமோதித்துள்ளனர்.

முரண்பட்ட செயல்பாடுகள்

இயற்கையைப் பாதுகாப்பதற்கென்றே உள்ள துறையும், அமைச்சகமும் நம் நாட்டில் இருந்தாலும் பல வேளைகளில் அவையே இயற்கைக்கு எதிரான (தொழிற்சாலைகளுக்காகச் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்தல், வளர்ச்சி எனும் பெயரில் அணைகளைக் கட்ட காடுகளை அழித்தல், இதற்கெல்லாம் ஏதுவாகச் சட்டங்களைத் திருத்துதல், தொல்லை உயிரினம் எனப் பெயரிட்டு உயிர்களைக் கொல்லுதல் போன்ற) செயல்பாடுகளில் ஈடுபடு வதைக் காண்கிறோம். பறவை ஆர்வலர்கள் எனச் சொல்லிக்கொண்டு, பறவைகளுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் (அருகில் சென்று விரட்டிப் படமெடுத்தல், அவற்றின் குரலோசையை ஒலிபரப்பி, உணவிட்டு வரவழைத்துப் பார்த்தல், படமெடுத்தல் போன்ற) பாதிப்பை ஏற்படுத்தும் சிலரையும் காண்கிறோம்.

இன்னொரு புறம் மற்ற உயிர்களுக்காகப் பல தியாகங்களைச் செய்பவர்களையும் காண்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தங்குளம் கிராமத்தில் ஊருக்குள் உள்ள மரங்களின் மீது சங்குவளை நாரைகளும், கூழைக்கடாக்களும் கூடுவைத்துக் குஞ்சு பொரிக்கின்றன. இதுபோலவே கர்நாடகத்தில் உள்ள கொக்ரேபேலூர் கிராமத்திலும், ஆந்திரத்தில் உள்ள வெதுருப்பட்டுக் கிராமத்திலும் காணலாம். கேரளத்தில் உள்ள திருச்சூர் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்துக்குச் சென்ற வர்கள், அப்பகுதில் சாலை ஓரத்தில் நடைபாதை யெங்கும் வெள்ளைத் திட்டுக்களாகக் கிடக்கும் பறவை எச்சங்களைக் காணலாம்.

கூடமைக்கும் காலங்களில் அந்த இடமெங்கும் பறவைகளின் எச்ச மணம் வீசுவதையும், குஞ்சுகள் உணவுக்காக இடைவிடாமல் கத்துவதையும் கேட்கலாம். இவை அனைத்தும் நீர்க்காகங்கள், ராக்கொக்கு போன்ற பறவைகளின் கூடுகளே. இந்தக் கூடுகள் அமைந்துள்ள பகுதிகளில் குடியிருப்புகளும் கடைகளும் இருக்கின்றன. இந்தப் பறவைகளின் மணமும் குரலொலிகளும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அவர்கள் முகம் சுளிப்பதில்லை.

சமூகப் பாதுகாப்பு

இது போலவே, உத்தராகண்ட் மாநிலத்தில் நான் பார்த்த சில காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. தென்னிந்தியாவுக்கு ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் வலசை வரும் தகைவிலான்கள் (Barn swallow) இனப்பெருக்கம் செய்ய மார்ச் மாத இறுதியில் இமயமலைப் பகுதிகளுக்கு வலசை போகத் தொடங்கும். ஏப்ரல்-மே மாதங்களில் அவை கூடுகட்டுவது எங்கு தெரியுமா? அங்குள்ள வீடுகளிலும் கடைகளிலும்தாம்! மசூரி, டேராடூன், கோபேஷ்வர், தார்ச்சுலா முதலிய பகுதிகளில் 2016-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பயணம் மேற்கொண்டபோது, அங்கே கடைகளின் உள்ளே சுவரின் மூலைகளிலும், எரியும் பல்புகளின் மேலும் இவை கூடுகட்டியிருந்தன.

தமது சிறிய அலகால் ஈரமான மண்ணைச் சேகரித்து இவை கூடுகட்டுகின்றன. ஒரு துணிக்கடையின் உள்ளே அந்தக் கடை முதலாளி அமரும் இடத்துக்கு மேலேயே இரண்டு தகைவிலான் கூடுகள் இருந்தன. ஒரு கூடு அவரது கல்லாவுக்கு நேர் மேலே அமைந்திருந்தது. எச்சம் கீழே விழும் இடத்தில் தெறிக்காமல் இருப்பதற்காக, ஒரு அட்டையை வைத்திருந்தார்.

நாள்தோறும் அதை மாற்ற வேண்டும். தொடர்ந்து 3-4 மாதங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும். நாங்கள் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, எங்களைப் பொருட்படுத்தாமல் குஞ்சுகளுக்குத் தாய்ப்பறவை உணவூட்டிக்கொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் அவர் கடையை மூடி விட்டால் என்னவாகும் எனக் கேட்டேன். இப்பறவை கூடு வைக்கும் காலத்தில் கடைக்கு விடுமுறையே கிடையாது என்றார்! இவர் மட்டுமல்ல, உத்தராகண்ட் மாநிலத்தின் பல இடங்களில் இப்பறவைகளின் கூடுகளைப் பாதுகாக்கும் மனத்தை நெகிழ வைக்கும் மனிதர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது.

வௌவாலுக்குத் தனியறை

கரோனா வைரஸ் வௌவால்கள் மூலமாகப் பரவுகின்றன என்ற தவறான புரிதலுடன், அண்மையில் சிலர் அவை வந்தடையும் இடங்களைச் சேதப்படுத்தியும் அவை தங்கிய மரங்களை வெட்டவும் செய்தனர். காலங்காலமாக நாம் வழிபடும் இடங்களில் வௌவால்கள் பறந்து செல்வதையும், அவற்றின் எச்சங்களை மிதித்துக்கொண்டும், எச்ச மணத்தை முகர்ந்துகொண்டும்தான் சென்று வந்துகொண்டிருக்கிறோம்.

இதைப் பற்றி எழுத்தாளர் தஞ்சாவூர்க் கவிராயரிடம் பேசிக்கொண்டி ருந்தபோது, வீட்டில் வௌவால்களுக்குத் தனி அறையையே ஒதுக்கிய அவரது நண்பரைப் பற்றிய சுவாரசியமான சங்கதியைச் சொன்னார். திருவையாற்றில் வசிக்கும் அந்தக் குடும்பத்தினர், அவற்றுக்குத் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாதென வௌவால்கள் வந்தடையும் வீட்டின் அறையில் புழங்குவதையே குறைத்துக்கொண்டார்களாம். வீட்டை விற்கும் நிலைவந்தால் இந்த வௌவால்களைக் காப்பாற்றுபவர்களிடம் மட்டுமே விற்க வேண்டும் என்றாராம் குடும்பத்தின் முதியவர். இப்படி உயிர் நேயத்துடன் செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காப்பது எனும் உணர்வு

ஒரு சக உயிரினம் வாழ்வதற்காக நம்மால் என்ன வெல்லாம் செய்ய முடியும்? நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்மை அறிந்தோ அறியாமலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ, மற்ற உயிரினங்களையும் அவற்றின் வாழிடங்களையும் காக்கவே செய்கிறோம். நம் வீட்டில் ஒட்டடை அடிக்கும்போது எட்டுக்கால் பூச்சிகளை விளக்குமாறால் அடிக்காமல் விட்டிருப்போம், யானைகள் வழித்தடம் என அறிந்த பின் அப்பகுதியில் வீட்டு மனை வாங்காமல் இருந்திருப்போம், சில காட்டுயிர்களையும் அவற்றின் உடல் பாகங்களையும் உண்பதால் நோய் குணமாகும் என நம்பாமல், அவற்றை உண்பதைத் தவிர்த்திருப்போம் அல்லது அவற்றின் வாழிடங்களைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டிருப்போம்...

இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். இதுபோன்ற செயல்பாடுகள் தனி மனிதராகவோ ஒரு அமைப்பின் மூலமாகவோ செய்யப்படுபவை. ஆனால், ஒரு சமூகமே பல்லுயிர்ப் பாதுகாப்பை இயல்பாக, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வதும், அந்தப் பாதுகாப்புச் செயல்பாட்டில் தமது இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் பொறுத்துக்கொண்டு மற்ற உயிரினங்களை வாழவைப்பதும் ஒத்துவாழ்வதும் (coexisting) அரிதே.

இயற்கையுடன் இணக்கமானதொரு வாழ்க்கையை இந்தியாவின் காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பலரும் இயல்பாகவே கடைப்பிடித்துவருகின்றனர். எடுத்துக்காட்டாக, ராஜஸ்தானில் உள்ள பிஷ்னாய் இன மக்களைக் கூறலாம். இப்படி உயிரினங்களை மதித்துப் போற்ற இவர்களுக்கெல்லாம் உந்துசக்தியாக இருப்பது எது? உலக மதங்கள், நீதி நூல்கள், மற்ற உயிர்களைக் கொல்லாமை, துன்புறுத்தாமல் இருத்தலை - அதாவது அகிம்சையை போதிக்கின்றன. ஆனால், அவை மட்டுமே உயிரினப் பாதுகாப்புக்கு உதவுவதில்லை. உளவியல் நோக்கில் பார்த்தால், ஓர் உயிரினத்தைக் கொல்லாமல் இருக்க, ஒத்துவாழ நம்மைத் தூண்டுவது கருணை, கரிசனம், பச்சாதாபம், சகிப்புத்தன்மை போன்ற உணர்வுகளே.

பல்லுயிர் பாதுகாக்கும் பண்பு

பொத்தக்குடி மக்களின் செயலை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனாலும், இவை அனைத்தும் எல்லா நேரத்திலும் எல்லாரிடத்திலும் இருப்பது அரிதே. மேற்சொன்ன திருச்சூர், வெதுருப்பட்டு, கூந்தங்குளம் எடுத்துக்காட்டுகளில் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இவை அனைத்தும் கூடமைக்கும் பறவைகள். கூட்டைக் கலைப்பதும், குஞ்சுகளுடன் இருக்கும் உயிரினங்களுக்குக் கேடுசெய்வதும் உணர்வுபூர்வமாக மனிதர்களை பாதிக்கும் என்ற காரணத்தால், அப்படிச் செய்யாமல் கருணை, அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள். நம்மையும் அறியாமல், அந்த உயிரினங்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்க்கிறோம். அதாவது அவற்றுக்கு ஏற்படும் அல்லது ஏற்படப்போகும் வலியை நாம் உணர்கிறோம். இதுவே ஒத்துணர்தல் (Empathy) (காண்க திருக்குறள் 315). சிந்திக்கும் திறனைப் போலவே மற்றவர்களின் புலனை அறியும் திறனையும் கொண்டுள்ளதால், (Sentience) புலனறி ஜீவிகள் அல்லது புலனறிவுயிரிகள் (Sentient beings) என்றும் மனிதர்களைக் கூறலாம்.

இந்தப் பண்புகளை கொண்டிருப்பதும், வளர்த்துக்கொள்வதும் பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு (Biodiversity Conservation) இன்றியமையாதவை. இங்கு ஒன்றைக் கவனமாகப் பார்க்க வேண்டும். விலங்கு உரிமை, விலங்கு நலன் சார்ந்த கருத்தாக்கத்துக்கும் மேற்சொன்ன பண்புகள் அடிப்படைத் தேவையாக இருந்தாலும், காட்டுயிர்ப் பாதுகாப்பு அறிவியலின் (Conservation Biology) பின்னணியிலேயே இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த விரிவான விளக்கங்களை சு. தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலாச்சார அரசியலும்’, ‘கீழே விழுந்த குயில் குஞ்சு’ முதலிய (‘கையிலிருக்கும் பூமி’, 20௦18 உயிர்மை பதிப்பகம்) கட்டுரைகளில் காணலாம்.

கூட்டைக் கலைக்கக் கூடாது எனும் எண்ணம் ஏற்பட்டு, அதற்காகப் பல தியாகங்களைச் செய்யும்போது அங்கே சகிப்புத்தன்மையைக் காண முடிகிறது. இதுவும் நாம் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பண்பு. ஆனால், கூட்டைக் காப்பாற்றும்போது இருக்கும் இந்தச் சகிப்புத்தன்மை பாம்பைக் கண்ட வுடன் அடிக்கும்போதும், யானையும் காட்டுப்பன்றியும் நமது விளைநிலங்களைச் சேதப்படுத்தும்போதும் காணாமல் போய்விடுகின்றன. அதாவது நமது உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு ஏற்படும் என நாம் நினைக்கத் தொடங்கும்போது மேற்சொன்ன பண்புகள் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன. அதனால், சட்டத்துக்குப் புறம்பான செயல்களையும் செய்யத் துணிகிறோம்.

முன்மாதிரி மக்கள்

வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், அதற்காக இயற்கை வளங்களைக் குன்றவைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இவ்வேளையில் மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மென்மேலும் அதிகரிக்கவே செய்யும். இயற்கைப் பாதுகாப்புக்கு அறிவியல் அவசியம், அதற்கு இணையாக மக்களின் ஆதரவும் அவசியம். இயற்கையின்பால் இயல்பாகவே மனிதர்களுக்கு உள்ள நல்லுணர்வுகளைப் போற்றியும், எவ்வேளையிலும் அவை குன்றாமல் இருக்க ஆவன செய்ய வேண்டியதும் அவசியம்.

இதை இயற்கை ஆர்வலர்களும் இயற்கைக் கல்வியாளர்களும் புரிந்துகொண்டு, அறிவியல் தரவுகளையும், முடிவுகளையும் மட்டுமே எடுத்துச்சொல்லாமல், இயற்கையின்மேல் மக்களுக்கு இருக்கும் உணர்வுபூர்வமான ஈர்ப்பையும் பிடிப்பையும் மேம்படுத்தப் பாடுபட வேண்டும். குறிப்பாக ஆட்சியில் இருப்போர், தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்தப் பண்புகளைப் பற்றிச் சரியான தருணங்களில் நினைவுபடுத்த வேண்டும். விட்டுக்கொடுத்தலும், அனுசரித்துப்போவதும் மனிதர்களிடையே மட்டும் இல்லாமல் இயற்கையுடனும் அவசியம் என்பதை உணர்த்த வேண்டும். இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளுக்கான அடித்தளம் கருணையுடன் கூடிய மனிதப் புலன் உணர்வுகள் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். பொத்தக்குடி மக்கள் காட்டிய உயிர் நேயம் நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x