Published : 11 Aug 2020 09:40 AM
Last Updated : 11 Aug 2020 09:40 AM

கரோனா வைரல்கள்: டெலிவரி நாய்!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா பீதி கொலம்பியாவையும் ஒரு கை பார்த்துவருகிறது. கரோனா தடுப்புக்கான விதிமுறைகள் அங்கே கட்டாயமாக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைக் கடைபிடித்தால்தான் வெளியே வர முடியும் என்ற நிலை. இதுபோன்ற விதிமுறைகளால் வெளியே வரவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டின் டெலிவரி செய்பவரின் வேலை இணையத்தில் வைரலானது.

மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பிய அந்த டெலிவரி பாய் வேறு யாருமல்ல, ஒரு நாய்! ஏரோஸ் என்ற அந்த நாய்தான் டெலிவரி வேலை பார்த்துவருகிறது. வாடிக்கையாளரின் பெயரை வைத்து வீட்டைக் கண்டறியும் அளவுக்கு, அதற்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கரோனா காலத்தில் அது பேருதவியாக மாறியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்குத் தேடித் தேடி பொருள்களை டெலிவரி செய்கிறது இந்த நாய்!

16 வயது ஆசிரியர்!

கரோனா அச்சத்தால் நம் நாட்டைப் போலவே ஈக்வடார் நாட்டிலும் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இணையம் வழியாகத்தான் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கிராமப்புற குழந்தைகளால் இதைப் பின்பற்ற முடியவில்லை. இதைக் கண்டு காயாகில் நகரத்தைச் சேர்ந்த 16 வயது டெனிஷா டோலா மனம் வருந்தினார். இதன் அடிப்படையில் அதிரடியாக அவர் எடுத்த முடிவு ஈக்வடாரில் வைரலாக்கியுள்ளது.

காயாகில் நகரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்துக்கு சென்ற டெனிஷா, நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கற்றுத்தர தொடங்கிவிட்டார். அக்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளின் இணையதளத்துக்கு சென்று என்னென்ன பாடங்கள் நடத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அதை இந்தக் குழந்தைகளுக்குத் நாள்தோறும் வகுப்பெடுக்கிறார். இந்த 16 வயது ஆசிரியையை ஈக்வடாரில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

பிஸியான தாத்தா!

இன்றையத் தேதியில் யூடியூபில் சமையல் செய்வது எப்படி என்ற அலைவரிசைகளுக்குத்தான் கிராக்கி அதிகம். அதைக் கச்சிதமாகப் பிடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறார் 79 வயதுத் தாத்தா. மெக்சிகோவில் கரோனா பீதி காரணமாக வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதனால், கார்லோஸ் எலிஜோண்டோ என்ற அந்தத் தாத்தா மளிகைக் கடையில் பார்த்துவந்த வேலையை இழந்தார்.

கரோனா வைரல்கள்எப்போதும் பரபரப்பாக வேலை பார்த்த அவரால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. உடனே மகளின் உதவியுடன் யூடியூப் அலைவரிசை ஒன்றைத் தொடங்கினார். தனக்குத் தெரிந்த சமையல் வித்தைகளை யூடியூப் அலைவரிசையில் இறக்கினார். சமையலுக்கு டிப்ஸ்களையும் அள்ளிவீசினார். நாள்தோறும் அவருடைய சமையல் வீடியோவுக்கு வரவேற்பு கூடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தாத்தாவின் யூடியூப் அலைவரிசைக்கு 4 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துவிட்டார்கள் என்றால் பாருங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x