Published : 08 Aug 2020 09:35 AM
Last Updated : 08 Aug 2020 09:35 AM

கோவிட்-19 பின்னணியில் மனநலப் பாதுகாப்பு

மதுமிதா பாலாஜி, விக்ரம் படேல்

கோவிட்-19 சூழலில் இந்தியர்கள் சந்தித்துவரும் மனநல நெருக்கடியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு மனநலம் தொடர்பாக நிலவிய கடுமையான சூழலையும் நாம் புரிந்துகொண்டாக வேண்டும். 18 வயதைக் கடந்த இந்தியர்களில் 10 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு மனநலப் பிரச்சினை நிலையில் இருப்பதாக மத்திய அரசின் தேசிய மனநலக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உலகளாவிய நோய்ச் சுமை தொடர்பான ஆய்வு ஒன்றின்படி இந்தியாவில் 20 கோடிப் பேர் ஏதேனும் ஒரு மனநலக் கோளாறுடன் வாழ்கின்றனர்.

உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல், ஆண்களில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கினர் இந்தியர்கள். இளம் இந்தியர்களின் மரணத்துக்கான காரணங்களில் தற்கொலையே முதன்மையானது. சூழல் இப்படி இருக்க நம்முடைய அரசு சுகாதாரத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளில் மனநல சிகிச்சைக்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ஒதுக்குகிறது.

மனநலத்தில் கோவிட்-19 இன் தாக்கம்

கோவிட்-19 மனநலத்தின் மீது செலுத்தும் தாக்கம் இரண்டு கட்டங்களைக் கொண்டது. பெருந்தொற்றைத் தடுப்பதற்கான ஊரடங்கு காலகட்டத்தில் நிகழும் முதல் கட்டம் கடுமை யானது. தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுப் பெருந்தொற்று விளைவித்த பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் ஆழமாக உணரப் படும்போது இரண்டாம் கட்டம் தொடங்கும்.

தற்போது கடுமையான முதல் கட்டத்தில் வைரஸ், அதனால் ஏற்படும் மரணம், அன்புக்குரியவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது ஆகியவை குறித்த அச்சத்தால் மக்கள் பீடிக்கப்பட்டுள்ளனர். தனிமைக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனிமைப்படுத்தப்படுதல். ஆகியவை தொடர்பாகவும் மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள். ஏற்கெனவே வாழ்வாதாரம் சார்ந்த கவலைகளில் ஆழ்ந்திருக்கும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த அச்சங்கள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் காரணிகளுடன் அதிகரிக்கும் குடும்ப வன்முறை, பொதுப் போக்குவரத்துத் தடை, வழக்கமான மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் கிடைக்காமல் இருப்பது ஆகியவையும் மன அழுத்தத்தை மோசமாக்குவதில் பங்களிக்கின்றன. சமூகத்தில் பல்வேறு தரப்பினரை இந்தப் பெருந்தொற்று தனிப்பட்ட வழிகளில் பாதித்துள்ளது.

பெண்கள்: பொதுவாகவே பெண்கள் பலர் மனச்சோர்வு, பதற்றத்துக்கு ஆளாகியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கு காலத்தில் அதிகரித்துவிட்ட வீட்டு வேலைகள், குடும்ப வன்முறை ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

குழந்தைகள்: 1,102 பெற்றோர் - குழந்தை வளர்ப்புப் பணியாளர்களிடம் பேசியதிலிருந்து ஊரடங்கு காலத்தில் 50 சதவீதக் குழந்தைகள் நிலைகொள்ளாமை, பதற்றம் ஆகியவற்றுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. வைரஸ் குறித்த அச்சம், இணையவழிக் கல்வி கற்பதற்கான சாத்தியம் குறித்த கவலை, வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் - எரிச்சல் ஆகியவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஊடக செய்திகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. பலர், வீட்டில் வன்முறைச் சூழலில் வாழ்கிறார்கள் அல்லது இணையவழித் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இளைஞர்கள்: 18-லிருந்து 32 வயதுக்குட்பட்ட 6,000 இளைஞர்களில் 65 சதவீதத்தினர் ஊரடங்கு காலத்தில் தனிமையின் வெம்மையை உணர்ந்த தாகவும் 37 சதவீதத்தினர் தமது மனநலத்தில் ‘கடுமையான தாக்கம்’ ஏற்பட்டிருப்பதாக உணர்ந்ததாகவும் ஓர் ஆய்வு கூறுகிறது. 2020 ஏப்ரலில் 2.7 கோடி இளைஞர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டது, தேர்வுகள் தள்ளிப்போனதால் 32 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தரவுகள் ஆச்சரியம் தருபவை அல்ல.

புலம்பெயர் தொழிலாளர்கள், தினக் கூலித் தொழிலாளர்கள்: புலம்பெயர் தொழிலாளர்களிடம் தனிப்பட்ட ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. ஆனால், பல லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தமது கிராமப்புற வீடுகளுக்கு நடந்து சென்றது உள்ளிட்ட செயல்கள் மூலம், அவர்கள் அடைந்திருக்கும் பதற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். தினக் கூலித் தொழிலாளர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,200 ஆட்டோ ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு, அவர்களில் 75 சதவீதத்தினர் தமது வேலை நிதி நிலைமை குறித்துக் கவலை கொண்டிருப்பதாகக் கூறியது.

மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள்: 152 மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மூன்றில் ஒரு பங்கினர் பெருந்தொற்றால் விளைந்த மனச்சோர்வையும் பதற்றத்தையும் எதிர்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். முன்களப் பணியாளர்கள் கடும் பணிச்சுமையோடு வைரஸ் தொற்றுக்கு ஆளாவது குறித்த அச்சத்துடன் பணியாற்றிவருகின்றனர்.

பாலினச் சிறுபான்மைக் குழுக்கள்: ஓர் ஆய்வில், பாலினச் சிறுபான்மையினரின் கவலைகள் அதிகரித்திருப்பதாக 282 பேர் கூறினர். கொள்கை வகுப்பாளர்கள் சுகாதாரம் சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது, விளிம்புநிலைச் சமூகத்தினரின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு இவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

ஏற்கெனவே மனநலப் பிரச்சினைகளுடன் வாழ்பவர்கள்: ஏற்கெனவே மனநலப் பிரச்சினையுடன் இருப்பவர்கள் மேற்கூறிய பிரச்சினைகளை மிக மோசமாக அனுபவிக்கிறார்கள். மனநல சிகிச்சை தடைபட்டிருப்பது, பயணம் தொடர்பான கட்டுப்பாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் குறைவாகவே மருந்துகளை உட்கொள்ள முடியும் என்பதால், இந்தப் பிரிவினரின் நிலை தீவிரமாக உள்ளது.

போதைப்பொருள், மதுபானம் தொடர்பான நோய்களுடன் வாழ்பவர்கள்: மதுபானக் கடைகள் திடீரென்று மூடப்பட்டதாலும், மருந்து கிடைப்பது தடைபட்டதாலும் பலர் விலகல் அறிகுறி (Withdrawal symptoms) நிலைக்குத் தள்ளப்பட்டனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கிருமிநாசினி உள்ளிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த திரவங்களைக் குடித்து இறந்தனர் அல்லது தற்கொலை செய்துகொண்டனர்.

நெருக்கடிக்கு எதிர்வினையாற்றுதல்

பேரலைபோல் பெருகிவரும் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

தொலைத்தொடர்பு சேவை: மும்பை பெருநகர மாநகராட்சியின் தொலைபேசிவழி மருத்துவ சிகிச்சை திட்டம், எம்.பவர் (MPower) தொலைபேசி உதவி மையம் ஆகியவற்றுக்கு ஒரு நாளைக்கு 750-க்கும் மேற்பட்ட அழைப்புகளும் இரண்டு மாத காலத்தில் 45,000 அழைப்புகளும் வந்துள்ளன.

மத்திய அரசு நடவடிக்கைகள்: மனநலப் பிரச்சினைகளுக்கான மருந்துப் பரிந்துரைகளை மின்வழி பெறுவதற்கான தொலைத்தொடர்பு மருத்துவ ஏற்பாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை மக்கள் இதனால் அதிகப் பயனை அடைய முடியவில்லை. மருந்துக் கடைகள் பரிந்துரைக் குறிப்பு இல்லாமல் மருந்துகளைத் தர மறுத்தன. தொடக்க நிலை, நிபுணத்துவ சுகாதார மையங்களில் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான வழிகாட்டல் விவரங்களை உள்ளடக்கிய தகவல்தொகுப்பையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

மாநில அளவில், கேரள அரசு உருவாக்கி யிருந்த ‘உளவியல் ஆதரவுக் குழு’, மத்தியப் பிரதேச அரசு மருத்துவமனைகளில் ‘மகிழ்ச்சி மேம்பாடு’ திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது, பஞ்சாப் அரசின் போதைப்பொருள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

தனியார் அமைப்புகள்: நெப்ட்யூன் அறக் கட்டளை, சமாரிடன்ஸ், ஜாமியா இஸ்லாமியா உள்ளிட்ட லாபநோக்கற்ற நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை தொலைபேசி உதவி, இணையவழி ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன

வருங்கால அச்சுறுத்தல்களும் வாய்ப்புகளும்

வருங்காலத்தில் கடுமையான பெருந் தொற்றுக் கட்டத்துக்குப் பிறகு, இவ்வுலகம் இதுவரை எதிர்கொண்டிராத பொருளாதாரச் சரிவிலிருந்து மீள வேண்டியிருக்கும். இந்தப் பொருளாதாரச் சரிவு, நாடுகளுக்கிடையிலான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பது, தனிநபர் இடைவெளி, இந்தப் பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகள் குறித்த நிச்சயமின்மை ஆகியவற்றின் விளைவாக மனநலப் பிரச்சினைகளும் அதிகரிக்கும். நம்மிடம் இருக்கும் மனநல சிகிச்சை வசதிகளைக் கொண்டு, இந்தத் திடீர் அதிகரிப்பைக் கையாள முடியாது.

ஆனால், புதுமையான உத்திகளைக் கையாளும் சமூக சிகிச்சைப் பணியா ளர்கள் உளவியல் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான அமைப்புசார்ந்த தடை களுக்குத் தீர்வளிக்க முடியும். உளவியல் மருத்துவ முறைகளில் குறைத்து மதிப்பிடப்படும் ‘சிகிச்சைப் பிரிவுகள்’, தரப்படுத்தப்பட்ட சிகிச்சை வழிமுறைகளுக்கு இணையான பயனைத் தர முடியும். சமூக நலப் பணியாளர்களைப் போன்ற முறைசார்ந்த நிபுணத்துவம் பெறாத ‘சிகிச்சையாளர்கள்’ பயனுள்ள வகையில் செயல்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் தேசிய அளவிலான அரசு எதிர்வினை, தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் உடனடியாக நிகழ வேண்டும். கல்வியை எடுத்துக்கொண்டால், பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கும் சூழலில் கற்றல் தடையில்லாமல் தொடர்வதை உறுதிசெய்யும்போது குழந்தைகள், இளைஞர்கள் (குழந்தைகளின் பெற்றோர்) ஆகியோரின் மனநலத் தேவைகளைத் தீர்ப்பது குறித்தும் யோசிக்க வேண்டும். குடும்ப வன்முறை உள்பட அதிகரித்துவரும் மனநலத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய காரணிகளுக்குச் செயல்திறனுடன் எதிர்வினையாற்றுவதற்கான உத்திகள் நமக்குத் தேவை.

எடுத்துக்காட்டாக, சமூகத்தில் பிணைப்பை யும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். ஊடகங்கள் மக்கள் மீது செலுத்தும் தாக்கத்தை உணர்ந்து (ஒரு கணக்கெடுப்பில் 44.7 சதவீதத்தினர் சமூக ஊடகப் பதிவுகளால் மன உளைச்சல் அடைவதாகக் கூறியுள்ளனர்) பெருந்தொற்று தொடர்பான தகவல்களைப் பகிரும்போது பொறுப்புடனும் கவனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

மனநல மருத்துவ நிபுணர்கள் முதல் குடிமைச் சமூக ஆர்வலர்கள்வரை மனநலத்துடன் தொடர்புள்ள அனைவருக்கும் இது ஒரு முக்கியமான தருணம். கோவிட்-19க்கான எதிர்வினையானது பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் அதேநேரத்தில், மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மனநல மருத்துவம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்வதற்கான வரலாற்று வாய்ப்பு இது. மனநலப் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படும் பன்மை வழிகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளவும், மனநல மருத்துவத்தின் குறுகலான நோய்-சார் வழிமுறைகளைத் தாண்டிச் செல்வதற்கும் சமூகத்தில் நிலவும் மனநலம் சார்ந்த வெவ்வேறு தன்மைகளையும் பன்மைத்துவத்தையும் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்க வேண்டும்.

‘idronline.org’ இணையதளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் வடிவம் இது: https://bit.ly/33Cnwvs​​​​​​​

தமிழாக்கம்: ச. கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x