Last Updated : 01 Aug, 2020 02:05 PM

 

Published : 01 Aug 2020 02:05 PM
Last Updated : 01 Aug 2020 02:05 PM

கரோனாவைக் கட்டுப்படுத்தும் ஆயுர்வேதம்: டாக்டர் மகாதேவனின் சிகிச்சை முறை வெளியீடு

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்திய மருத்துவ முறை சார்ந்த சிகிச்சைகளும் ஆராய்ச்சிகளும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் திருவனந்தபுரம் பங்கஜகஸ்தூரி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் துணைப் பேராசிரியருமான டாக்டர் எல்.மகாதேவன் தலைமையிலான குழுவும் கரோனா நோயாளர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்தது. அந்த அனுபவத்தை டாக்டர் எல். மகாதேவன் வெளியிட்டுள்ளார்.

நாடி வந்த குடும்பம்

இந்தக் குழுவினர் சிகிச்சையளித்த குடும்பத்தில் நான்கு பெரியவர்களும் ஒரு குழந்தையும் இருந்திருக்கிறார்கள். அதற்கு முன்பே அந்த வீட்டின் மூத்த உறுப்பினரான பாட்டி கரோனாவுக்குப் பலியாகி இருந்தார். குடும்பத்தில் எஞ்சியிருந்த நான்கு பெரியவர்களுக்கும் கரோனா தொற்று இருந்தது. நால்வரில் இருவர் முதியவர்கள். ஆயுர்வேத சிகிச்சை பெறுவதை அந்தக் குடும்பத்தினர் விரும்பினார்கள்.

அவர்களுக்குத் தலைவலி, காய்ச்சல், தொண்டைவலி ஆகிய அறிகுறிகள் இருந்தன. தலைவலி அதிகமாகவும் காய்ச்சல் 101-102 டிகிரி வரையும் இருந்தன. கரோனா நோயாளர்களுக்கு இருக்கும் மூச்சுத்திணறல் அவர்களிடமும் காணப்பட்டது. அவர்களால் மூச்சுப்பயிற்சி செய்ய முடியவில்லை. அதனால் மெதுவாக மூச்சுவிட, அவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டது.

நோய் அறிகுறிகள் பெரும்பாலும் கபம் சார்ந்தவையாகவே இருந்தன. குளிர்ந்த உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்க்கவும் எண்ணெய் சேர்த்த உணவு வகைகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 3.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும், நிறைய வெந்நீர் குடிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. வெந்நீரில் இஞ்சி, பதிமுகம், குருவேர், சுக்கு, கொத்தமல்லி, பற்படப்புல், மஞ்சள் போன்றவற்றை இட்டுக் காய்ச்சிக் குடித்தார்கள்.

டாக்டர் மகாதேவன்

மருந்துகள்

நோயாளர்கள் மிகவும் பயத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள், மனப்பதற்றத்துடன் இருந்தார்கள். அவர்களுடைய பயத்தைக் கட்டுப்படுத்துவது சற்று கஷ்டமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சலிப்பு உணர்வு, நம்பிக்கைக் குறைவு போன்றவையும் அவர்களிடம் அதிகமிருந்தன.

அவர்களுக்கு பத்தியகுஸ்தும்பராதி கஷாயம், வியாக்ராதி கஷாயம், கோராசனாதி வடி, சுதர்சன சூரணம், அமிர்தாரிஷ்டம் ஆகியவை சிகிச்சையளிக்கும் மருந்துகளாகப் பயன்படுத்தப்பட்டன. காய்ச்சல் மட்டுப்பட்டபின் கற்பூராதி தைலம், லாக்ஷாதி தைலம் ஆகியவற்றை சிறிது சூடுபடுத்தி மார்பில் தடவிக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

சிகிச்சைக்கு முன்பு 'பல்ஸ் ஆக்சி மீட்ட'ரில் 90 ஆக இருந்த அளவீடு, சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே 98 ஆக, நல்ல நிலைக்கு மாறியது. சிறிய வீட்டில் இருந்தாலும், நோயாளர்கள் சுகாதாரத்தைக் கடைப்பிடித்தார்கள். வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அணிந்தே இருந்தார்கள். 10 நாள் ஆயுர்வேத சிகிச்சைக்குப் பிறகு கரோனா நெகட்டிவ் ஆனது.

ஆரோக்கியம் உறுதிப்படுத்துதல்

கரோனா நெகட்டிவ் வந்த பிறகு ஷட்பல கிருதம், சியவனபிராசம் ஆகியவற்றை உட்கொள்ளவும் பத்தியத்தைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சிகிச்சை பெற்று குணமான பின்பும் தனிமையில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

கரோனா தொற்று கண்டறியப்பட்ட பிறகும், கரோனா நெகட்டிவ் ஆன பிறகும் நான்கு நோயாளர்களுக்கும் நவீன மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உடல்நிலை சார்ந்த அனைத்து அளவீடுகளும் நல்ல நிலையில் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கு டாக்டர் ஜி. ஐஸ்வர்யா, டாக்டர் பா. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்களித்துள்ளனர்.

ஆயுர்வேத சிகிச்சை மூலம் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்பது இந்த முதல்கட்ட சிகிச்சை அனுபவம் உணர்த்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x