Published : 31 Jul 2020 09:46 AM
Last Updated : 31 Jul 2020 09:46 AM

திரைக்குப் பின்னால்: கனவுலகின் ‘அரங்க’த் தொழிற்சாலை!

டெஸ்லா கணேஷ்

திரையுலகைக் கனவுத் தொழிற்சாலை என்று மிகச் சரியாகத்தான் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா. அந்தக் கனவுலம் திரையில் விரியும்போது, கதாநாயகனும் கதாநாயகியும் தங்களின் காதலைக் கொண்டாட ஆடிப்பாடும் கனவுப் பாடல் காட்சிகளை அமைத்தனர் பல இயக்குநர்கள். திரைப்படங்களின் கறுப்பு - வெள்ளைக் காலத்தில் அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைக் கொத்தளம், அங்காடித் தெரு என அனைத்தையும் ஸ்டுடியோ அரங்கத்துக்கு உள்ளேயே அமைத்து அசத்தினார்கள், கனவுகளுக்கு ‘செட்’ வடிவம் கொடுத்த கலை இயக்குநர்கள்.

‘சந்திரலேகா’ படத்தில் முரசு நடனம், ‘ஔவையார்’ படத்தில் கோட்டையை உடைக்க முயலும் யானைகள் எனக் காட்சியமைப்பிலும் தயாரிப்பிலும் அசாத்தியத் துணிச்சல்காட்டி, ‘கலை இயக்கம்’ மீது தனிக் கவனம் செலுத்தக் காரணமாக இருந்தவர் அமரர் எஸ்.எஸ்.வாசன்.

வண்ணத்தில் எடுக்கப்பட்ட புராணப்படங்களில் தேவலோகத்தையே திரையில் காட்டியவர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அவர் அரங்கங்கள் நிறுவச் செய்தசெலவுத் தொகை இன்றைய மதிப்பில் பல கோடிகளாக இருக்கும். ‘திருவருட்செல்வர்’ படத்தில் இடம்பெற்ற ‘மன்னவன் வந்தானடி தோழி…’ பாடலுக்கு அமைக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்டமான நடராஜர் அரங்கமும் பத்மினியின் அற்புதமான நடனமும் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கற்பனைக்கெட்டாத கூட்டுமுயற்சி. இன்றைக்கு ஒரு ‘கிரீன்மேட்’ போட்டு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் எடுக்க முயன்றால்கூட முடிப்பதற்குள் விழி பிதுங்கிவிடும்.

ஓவியம், அரங்கப் பொருட்கள், அரங்க வடிவமைப்பு, அரங்க நிர்மாணம் எனப் பல பெயர்களில் டைட்டில் கார்டுகளில் வந்த இந்தத் துறை பின்னாட்களில் கலை இயக்குநர் என்ற தனித் திறமையாளரின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டது. ஒரு அரங்கத்தை நிறுவுவதற்கு முன்பாக இயக்குநர், ஒளிப்பதிவாளர், உடையலங்கார நிபுணர் எனப் பல திறமையாளர்கள் ஒன்றுகூடி பலமணி நேரம் நடத்தும் ஆலோசனைகளை யோசித்துப் பாருங்கள். குளிரூட்டப்பட்ட அரங்கங்கள் இல்லாத அந்தக் காலத்தில் அனல் கக்கும் விளக்குகளுக்கு மத்தியில் ஆடிப்பாடி நடித்த கலைஞர்களையும் கண்டினியூட்டி கெடாமல் கண்காணித்த மேக்-அப் கலைஞர்களையும் எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.

வண்ணத் திரைப்படங்களின் விஸ்வரூபக் காலத்தில் சமூகக் கதைகளுக்கு இதுபோன்ற ஸ்டுடியோ அரங்கங்கள் ஒரு செயற்கைத் தனத்தைத் தந்ததால் திரைப்படங்கள் ஸ்டுடியோ அரங்குகளை விட்டுவெளியேறி இயற்கைச் சூழலில் நிஜமான லொகேஷன்களைத் தேடத் தொடங்கின. ஆனாலும், திரைத்துறையினர் ஸ்டுடியோக்களோடு தாங்கள் கொண்டிருந்த தொப்புள்கொடி உறவை அறுத்து எறிய மனமில்லாமல் சில பாடல்களுக்கு மட்டும் ஸ்டுடியோக்களில் பல புதுமையான வடிவங்களில் அசத்தலான செட்போட்டுப் படம்பிடித்து வந்தனர்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம்

தனது மாஸ் கமர்சியல் ஹீரோ பிம்பத்துக்குப் பிரம்மாண்ட அரங்கங்களில் பாடல் காட்சிகள் படம் பிடிக்கப்பட வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை காட்டினார். ‘பறக்கும் பாவை’யில் ‘முத்தமோ மோகமோ’ பாடல், ‘நீரும் நெருப்பும்’ படத்தில் ‘மாலைநேரத் தென்றல்’, ‘நேற்று இன்று நாளை’யில் ‘இன்னொரு வானம்’, ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தில் ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’ பாடல், ‘உரிமைக்குரல்’ ‘மீனவ நண்பன்’ எனப் பல படங்களில் பிரம்மாண்ட செட்டிங்ஸ் பாடல்களில் அசத்தினார் எம்.ஜி.ஆர்.

நடிப்புக்கு இலக்கணம் வகுத்த சிவாஜி கணேசனும் செட்டிங்ஸ் அரங்கங்களில் ஆடிப் பாடுவதைத் தவிர்த்து விடவில்லை. பல காலன் லிட்டர் தண்ணீர் நிரப்பி ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட செயற்கை ஆறு, எகிப்திய பிரமிடு பின்னணியில் மயிர்க்கூச்செறியும் பாடல் எனத் திரையைத் தெறிக்கவிட்ட புதுமை இயக்குநர் தரின் ‘சிவந்தமண்’, ‘கௌரவம்’ படத்துக்காக அரங்கத்தில் அமைக்கப்பட்ட சதுரங்க விளையாட்டு, ‘சொர்க்கம்’ படத்தில் பொற்காசுகள் நவரத்தினங்களோடு பணமும் காய்க்கும் தங்க மரங்கள் நிறைந்த ‘பொன்மகள் வந்தாள்’ பாடல் காட்சி அரங்கம், ‘எங்க மாமா’, ‘பாட்டும் பரதமும், ‘ராஜபார்ட் ரங்கதுரை’ என நடிகர் திலகம் பிரமிப்பூட்டும் செட்டிங்ஸ் பின்னணியில் கம்பீரமாக ஜொலித்தார்.

கமல் - ரஜினியின் காலம்

கமர்சியல் அவதாரமெடுத்த கமல்ஹாசன் ‘சகலகலா வல்லவ’னில் ‘இளமை இதோ இதோ’ பாடலுக்குக் கண்கவர் அரங்கில் ஓடும் பைக்கின் மீது ஆடி அசத்தினார். ‘எனக்குள் ஒருவன்’, ‘உயர்ந்த உள்ளம்’ ‘காக்கிச் சட்டை’ எனப் பல படங்களில் செட்டிங்ஸ் பாடல்களில் கலக்கிய கமல், ‘தூங்காதே தம்பி தூங்காதே’யில் வானில் தொங்கும் வண்ணச்சர விளக்குகளில் வழுக்கி விளையாடி வியப்பூட்டினார்.

சூப்பர் ஸ்டார் படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கிய ரஜினிகாந்துக்குப் படத்துக்குப் படம் விதவிதமாகப் பாடல் அரங்கங்கள் அமைக்கப்பட்டன. ‘கர்ஜனை’, ‘போக்கிரி ராஜா’, ‘அடுத்த வாரிசு’, ‘படிக்காதவன்’, ‘மனிதன்’, ‘மாப்பிள்ளை’ என செட்டிங்ஸ் பாடல்களில் ரவுண்ட் கட்டிய ரஜினிக்காக ‘பாயும் புலி’யில் ‘மழை அரங்கம், ‘நல்லவனுக்கு நல்லவ’னில் ‘ஒளிவிளக்கு பந்தலில் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிகள் அரங்கம், ‘பணக்கார’னில் ‘கடிகார அரங்கம்’ என அரங்க வடிவமைப்புத் துறையே அதகளப்பட்டது.

திரைத்துறை அஷ்டாவதானி டிராஜேந்தரின் படங்களில் மிகப் பிரம்மாண்டமான அரங்கங்களில் பாடல் காட்சிகளை அமைத்து ரசிகர்களைப் பரபரப்பாகப் பேசவைத்தார். ‘உறவைக் காத்த கிளி’, ‘மைதிலி என்னை காதலி’, ‘ஒரு தாயின் சபதம்’, ‘என் தங்கை கல்யாணி’ என அவரது படங்கள் இன்றும் பாடல் காட்சிகளுக்காகப் பேசப்படுகின்றன. இந்தியாவின் திரைக்கதைச் சக்கரவர்த்தி பாக்யராஜும் ‘அந்த ஏழு நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘தாவணிக் கனவுகள்’, ‘சின்னவீடு’, ‘இது நம்ம ஆளு’ போன்ற தனது பல படங்களில் பிரம்மாண்ட செட்டிங்ஸ் பின்னணியில் பாடல் காட்சிகளைப் படமாக்கத் தவறவில்லை.

முரளி, மோகன், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் என அன்று ஜொலித்த அத்தனை நட்சத்திரங்களும் பல படங்களில் அசத்தலான ஸ்டுடியோ அரங்கப் பின்னணியில் ஆடிப்பாடிக் கலக்கியுள்ளார்கள். இந்தத்துறையின் நவீன அடையாளமான கலை இயக்குநர் ‘தோட்டா’ தரணி, ‘நாயகன்’ படத்துக்காக சென்னை கொக்கோகோலா மைதானத்தில் மும்பையின் தாராவி குடியிருப்பையே தத்ரூபமாக உருவாக்கிப் பெரும் பாராட்டுகளைப் பெற்றார். இப்படி நீளும் கனவுலகின் அரங்க உலகம் சுவாரசியமான ஆய்வுக்குரியது.

படங்கள் உதவி:ஞானம்

தொடர்புக்கு: teslaganesh@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x