Published : 31 Jul 2020 09:38 AM
Last Updated : 31 Jul 2020 09:38 AM

அஞ்சலி: ஒரு நட்சத்திர நிருபர்! - மேஜர்தாசன்

கே.ஆர்.ராமகிருஷ்ணன்

சினிமா நட்சத்திரங்களுடன் தொழில்முறை தாண்டியும் தோழமையுடன் பழகிவிடக் கூடியவர்கள் சினிமா செய்தியாளர்கள். சிவாஜி - எம்.ஜி.ஆர். தொடங்கி, இன்றைய சிவகார்த்திகேயன் வரை பேட்டி கண்டு எழுதி, ஊடகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் பாலமாக விளங்கியவர் மேஜர்தாசன்.

பத்திரிகை வாழ்வில் 40 ஆண்டுகளைக் கண்ட சாதனைக்குரியவர். சமீபத்தில் 64-ம் வயதில் அவர் மறைந்தபோது, “மண்ணுக்குச் செல்லும் உடம்பு மாணவர்களுக்குப் பயன்படட்டும் என்று என் உடலைத் தானம் செய்ய முடிவெடுத்து அறிவித்தேன். அப்போது தன் உடலையும் தானம் செய்ய முன்வந்த மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசனின் மறைவு, என் தனிப்பட்ட இழப்பும்கூட’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நெருக்கத்தைக் காட்டும் இரங்கல் குறிப்பை எழுதியிருந்தார் கமல்ஹாசன்.

ஈரோட்டில் உள்ள சேஷசாயி காகித ஆலையில் மேஜர்தாசன் தனது 24 வயதில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். வாசிப்பில் கொள்ளைப் பிரியம். ஊதியத்தின் ஒருபகுதியில் அனைத்துப் பருவ இதழ்களையும் வாங்கிப் படித்து வாசகர் கடிதங்கள் எழுதத் தொடங்கியிருக்கிறார். அது அவரைத் துணுக்கு எழுத்தாளராக மாற்ற, அதற்குக் கிடைத்த பாராட்டுகளைக் கண்டு வியந்து, இனி நாம் இருக்க வேண்டிய இடம் காகித ஆலை அல்ல; அதில் எழுத்துக்களைத் தாங்கி வரும் பத்திரிகைத் துறை என்று முடிவெடுத்திருக்கிறார். இதனால் அந்த வேலையிலிருந்து வெளியேறி, சுயாதீனப் பத்திரிகையாளராகத் தனது வழியைத் தேர்ந்துகொண்டிருக்கிறார்.

பருவ இதழ்களின் தன்மைக்கு ஏற்ப, பேட்டிகள், கட்டுரைகள் எழுதி அனுப்ப அவை உடனுக்குடன் பிரசுரம் கண்டிருக்கின்றன. நடிகர் ‘மேஜர்’ சுந்தர் ராஜன் மீது இருந்த அபிமானத்தால், தேவாதி ராஜன் என்ற தனது இயற்பெயரை மேஜர்தாசன் என மாற்றிக்கொண்டு எழுதி வந்தபோது, இவரைக் கவனித்துவந்த ‘குமுதம்’ வார இதழ், பணியில் சேர சென்னைக்கு வரும்படி அழைத்திருக்கிறது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மேஜர்தாசன், அடுத்து வந்த 20 ஆண்டுகள் சென்னையில் ஒரு நட்சத்திர நிருபராக முத்திரை பதித்தவர்.

எந்த முன்னணி நடிகரின் படப்பிடிப்பாக இருந்தாலும் தயக்கமின்றி அங்கே சென்று, யாருக்கும் இடையூறு செய்யாமல், தனது இனிய அணுகுமுறையால் செய்திகளைச் சேகரித்துக் கட்டுரைகளும் பேட்டிகளும் எழுதி வாசகர்களை வசியம் செய்யக்கூடியவராக இருந்தார். மறந்தும்

திரையுலகினரைக் குறித்துத் தனிப்பட்ட தகவல்களையோ ஊகச் செய்திகளையோ எழுதுவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்தார். பத்திரிகையாளர் என்ற அடையாளத்தைத் தாண்டி, திரைப்பட மக்கள் தொடர்பாளராகப் பல படங்களுக்குப் பணியாற்றியவர்.

இன்றைய செய்தியாளர் நவீனமானவர்கள். ஆனால், நேற்றைய சினிமா செய்தியாளரின் தோற்றத்தை மேஜர்தாசனிடம் காணமுடியும். தோளில் ஒரு ஜோல்னா பை, ஒரு பெரிய குடை எப்போதும் இருக்கும். இவரது பையில் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பவுடர் அனைத்தும் இருக்கும். குறித்துக்கொள்ளப் பத்திரிகை காகிதத்தில் தானே தைத்துத் தயாரித்துக்கொண்ட ஒரு நோட்டுப் புத்தகம், நான்கு, ஐந்து பால் பாயிண்ட் பேனாக்களோடு ஒரு மினி டார்ச் லைட்டும் இருக்கும்.

‘இது எதற்கு?’ என்றால் “புதுப்பட விமர்சனம் எழுதத் திரையரங்கில் படத்தைப் பார்த்தபடியே மனதில் தோன்றும் குறிப்புகளை எழுதிக்கொள்ள டார்ச் லைட் உதவியாக இருக்கும்” என்றார். ‘அது சரி ஓடோமாஸ் எதற்கு?” என்றபோது “பேட்டி எடுக்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

பல தோட்டங்களில், இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடக்கும். சில திரையரங்குகளில் படம் பார்க்கும்போது கொசுத் தொல்லையும் இருக்கும். அதைச் சமாளிக்கத்தான். படத்தைவிடக் கொசுக்கடி மேல் என்று தோன்றினால் இடைவேளையில் காணாமல் போய்விடுவேன்” என்றார். இந்த எள்ளலும் நகைச்சுவையும் யாரைக் கண்டாலும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்திப் பாராட்டிப் பேசும் பண்பும்தாம் அவரைத் தனித்து அடையாளம் காட்டின. நட்சத்திரங்களின் நிருபராக இருந்த மேஜர்தாசன், உண்மையில் எளிமையின் தாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x