பொழுது போக்க மட்டுமா செல்போன்?

பொழுது போக்க மட்டுமா செல்போன்?
Updated on
1 min read

சமீபத்தில் இந்திய அரசு மைக்ரோ வங்கித் திட்டத்தைச் செல்போன்கள் மூலமாக நிறைவேற்றத் திட்டமிடுவதாக அறிவித்தது. அதென்ன மைக்ரோ வங்கி திட்டம்? கிராமங்களில் ஒரு வங்கிக் கிளையையோ, ஏ.டி.எம்.மையோ திறக்கச் செலவு பிடிக்கும்.

அதற்குப் பதிலாகக் கிராமத்திலுள்ள மளிகைக் கடைகள், ரேஷன் கடைகளில் ஒரு செல்போன் அப்ளிகேஷனைக் கொடுத்து யாருக்கெல்லாம் வங்கியிலிருந்து பணம் எடுக்க வேண்டுமோ, பணம் கொடுக்க வேண்டுமோ அவர்களை எல்லாம் பரிவர்த்தனைகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கும் திட்டம்தான் இது.

இதன் மூலம் மக்களுக்கு வங்கிச் சேவையும் கிடைக்கும். கிராமப்புற மக்களின் சேமிப்புப் பழக்கமும் உயரும். சிறிதளவு வருமானமும், வேலை வாய்ப்பும் வணிகர்களுக்குக் கிடைக்கும்.

சந்தை அறிய

நம்மூர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றது வங்காளத் தேசத்தின் கிராமீன் வங்கித் திட்டம். இது செயல்படுவதற்கு மிகவும் உதவியவை செல்போன்கள்தான்.

கிராமீன் வங்கியும் டேரோ ஒர்க்ஸ் எனும் அப்ளிகேஷன் மூலம் கள அளவில் விவசாயிகள், தொழில் புரிவோர்களின் மாதாந்திர தகவல்களைத் தங்களிடம் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. ஒரு விவசாயியோ, சிறு தொழில் செய்பவரோ சந்தை நிலவரங்களை அறிந்து கொள்ள இது உதவுகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன்னால் ஜெஃப்ரி சாச்ஸ் எனும் பொருளியல் அறிஞர் ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டி உடல் நலம் தொடர்பான விழிப்புணர்வு இயக்கத்தில் ஈடுபடுத்தினார். இதற்குப் பின்னணியாக இருந்தது செல்போன்களே!

பாடம் படிக்க

உடல் நலம் மட்டுமின்றி கல்வியறிவைப் பரப்பவும் கூடச் செல்போன்கள் உதவுகின்றன. உலகில் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் செல்போன்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை 2014-ல் கணக்கிட்டது. செல்போனில் கதைகளையும், கல்விப் பாடங்களையும் படிப்பது புத்தகங்களைப் படிப்பதை விடச் சுவாரஸ்யமானதாக இருப்பதாகப் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறார்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒரு பத்திரிகையாளர் எழுதினார்; “நான் சோமாலியா நாட்டுக்குச் சென்று மீண்டும் லண்டன் திரும்பும் வரை செல்போனை வைத்தே கார் பார்க்கிங் கட்டணம் முதல் ஹோட்டல் பில் வரை பணம் செலுத்தினேன், ஏனெனில் சோமாலியாவில் அரசாங்கமும் இல்லை; அதிகாரபூர்வ நாணயமும் இல்லை!”

யாராவது “ஏன் போனையே நோண்டிக்கிட்டு இருக்கே”ன்னு கேட்டா இந்தப் பயன்பாடுகளையும் எடுத்துச் சொல்லுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in