Published : 19 Jul 2020 09:53 AM
Last Updated : 19 Jul 2020 09:53 AM

முகம் நூறு: மாடிவீட்டு வன்முறை வெளியே தெரிவதில்லை - ‘கிரிமினாலஜிஸ்ட்’ பிரசன்னா கெட்டு

வா.ரவிக்குமார்

சென்னையில் செயல்படும் ‘இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் கிரைம் பிரிவென்ஷன் அண்ட் விக்டிம் கேர்’ (PCVC) அறக்கட்டளையைத் தொடங்கியவர்களில் ஒருவர் டாக்டர் பிரசன்னா கெட்டு. இந்தியா முழுவதும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநர் - பால்புதுமையர் ஆகியோர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவுவதற்காக அளிக்கப் பட்டிருக்கும் இலவசத் தொலைபேசி எண் 18001027282, இந்த அமைப்புடையது.

இந்த அமைப்பு தொடங்கியிருக்கும் ‘த்வனி’ ஹாட்லைனில் தங்களுக்கு நிகழும் வன்முறைகளை பெண்கள் பதிவுசெய்ய முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் காப்பகத்தையும் இந்த அமைப்பு நடத்திவருகிறது. தீப்புண் - அமில வீச்சுக்கு ஆளான பெண்களுக்கும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பால்புதுமையருக்கும் உதவுதல், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பணியிடங்களில் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடத்துவது எனப் பல பணிகளில் இந்த அமைப்பு கவனம் செலுத்திவருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில், பெண்ணியச் செயற்பாட்டாளர்களைக் கவுரவிக்கும் ஜெர்மனியின் ‘ஹெய்ன்ரிச் போல்’ அறக்கட்டளையின் ‘ஆன்னி க்ளெய்ன்’ விருதுக்காக இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் பெண் டாக்டர் பிரசன்னா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் பிரசன்னா, நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருக்கும் ‘கிரிமினாலஜிஸ்ட்’களில் முக்கியமானவர். அவரிடம் பேசியதிலிருந்து:

PCVC அமைப்பைத் தொடங்கும் எண்ணம் எப்படி வந்தது?

சென்னைப் பல்கலைக்கழகத்தி லிருந்து ஜப்பானிலுள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ‘விக்டிமாலஜி அண்ட் விக்டிம் அசிஸ்டென்ட்’ துறையில் மேற்படிப்பு படிப்பதற்காகச் சென்றிருந்தோம். குடும்ப வன்முறை யால் பாதிக்கப் பட்டவர்களுக்காக அங்கே செயல்படும் மையங்களைப் பார்த்தோம். அந்த உத்வேகத்தில் என்னுடன் வந்திருந்த பேராசிரியர் உஷா ராணி, என்னுடன் படித்த ஹேமா ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து PCVC அமைப்பை இங்கே தொடங்கினோம்.

அரசின் காப்பகங்களிலிருந்து உங் களுடைய காப்பகங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

பாதிக்கப்படும் பெண்களுக் காக அரசுக் காப்பகங்கள் பல்வேறு வகையில் செயல்படு கின்றன. எங்களுடையவை குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கானவை மட்டுமே. தற்போது சென்னையில் காப்பகம் செயல்பட்டுவருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் எங்களது தொடர்புகளைக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடங்களை ஏற்பாடுசெய்து தருகிறோம்.

சமூகத்தில் குறைந்த வருவாய் ஈட்டும், படிப்பறிவில்லாத குடும்பங் களில்தான் பெண்களுக்குக் கொடுமை கள் நடக்கும் என்பது மக்களிடையே நிலவும் தவறான கற்பிதம். நன்கு படித்த, பொருளாதார வசதி படைத்த குடும்பங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் மறைக்கப்படுகின்றன. குடும்ப வன் முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எங்களிடம் கேட்கும் முதல் கேள்வியே, “பல விதங்களில் எங்களைக் காயப்படுத்தும் குடும்பங்களிலிருந்து, நாங்கள் வெளியேறினால் எங்கே தங்குவது?” என்பதுதான்.

இந்தப் புரிதலுடன்தான் பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் (16 வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளுக்கும்கூட) தங்குவதற்கு எங்களது காப்பகங்களில் இலவசமாக இடம் அளிக்கிறோம்.

எங்களின் காப்பகங்களில் தங்குபவர்களுக்கு மட்டும்தான் பொருளாதாரரீதியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளை அளிப்போம் என்றில்லை. எங்களை அணுகும் எந்தப் பெண்ணும் அவர்களின் தேவைக்கேற்ப, விருப்பம் சார்ந்த தொழிற்பயிற்சி பெறுவதற்கு உதவுகிறோம்.

குடும்ப வன்முறைகளைக் கையாள் வதில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை மீட்கும் பணிகளை நாங்கள் நேரடியாகச் செய்வதில்லை. அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் உதவியோடு இந்தப் பணிகளை செய்கிறோம். அரசின் இலவசத் தொலைபேசி எண் 181, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக் கும் அரசின் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ மூலமாகவும் எங்களைப் பெண்கள் தொடர்புகொள்வார்கள். பெண்கள் தங்களுடைய குழந்தைகளோடு வந்தாலும், அவர்களின் கணவருக்கோ வீட்டில் இருப்பவர்களுக்கோ தகவல் கொடுத்துவிடுவோம். மிரட்டல், பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை போன்றவை உள்பட நிறைய சவால்களைத் தொடக்கக் காலத்தில் சந்தித்திருக்கிறோம்.

குடும்ப வன்முறை என்றாலே ஆண்களால் பெண்ணுக்கு நேர்வது மட்டும்தான் என்று நினைக்கிறார்களே?

இதற்கு மாறாகவும் நடக்கிறது. எல்லா பாலினங்கள் மூலமாகவும் வன்முறை வெளிப்படுவதுண்டு. ஆனால், பெரும்பாலான வன்முறைகள் ஆண்களால் பெண்ணுக்கு நிகழ்பவை தான். அதனால், அவர்களைப் பாதுகாப் பதையே எங்களது அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

குடும்ப வன்முறையில் ஈடுபட்டதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் ஆண் களுக்கு மன்னிப்பு கிடைக்குமா அல்லது சட்டப்படி தண்டனை கிடைக்குமா?

பாதிக்கப்பட்ட பெண்ணின் முடிவை ஒட்டித்தான் எங்களின் நடவடிக்கைகள் இருக்கும். எப்போதும் ஒரு காரணத்துக்காக மட்டுமே எந்தவொரு வன்முறையும் நடப்பதில்லை. அதைத் தூண்டும் சம்பவங்கள். அதற்கு முன்பே நடந்திருக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு முதலில் தேவைப்படுவது அன்பும் ஆதரவும். அவர்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் இருக்கிறோம் என்னும் மன உறுதியை அளிப்பதே, அவர்களுக்கான முதல் ஆதரவாக இருக்கும்.

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித் திருக்கிறதா?

ஊரடங்கில் எல்லாவற்றுக் குமே ஆண்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை பெண்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்தக் காலத்தில் எத்தனை பேர் குடும்ப வன்முறைகளால் வெளியே வந்து பேசுகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாது. குடும்ப வன்முறை அதிகமாகியிருக்கிறது, ஆனால் வெளியே தெரியாது. ஆண்களுடைய பணி நிரந்தரமற்ற சூழல், புகை, மது முதலிய பழக்கவழக்கங்கள் போன்றவை குடும்ப வன்முறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதல்கட்ட ஊரடங்கில் வாரத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்புதான் வந்தது. இரண்டாம்கட்ட ஊரடங்கில், பாத்ரூமில் இருந்து கூப்பிட்டார்கள், இரவு நேரத்தில் கூப்பிட்டார்கள். போனில் பேச முடியாத சூழலில் தங்களுக்குக் குடும்பத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்துக் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். சில பெண்களுக்கு அவர்களின் போனுக்கு ரீசார்ஜ் செய்யக்கூட முடியாத நிலையில், நாங்கள் ரீசார்ஜ் செய்திருக்கிறோம்.

ஊரடங்கு சிறிது காலம் தளர்த்தப்பட்டபின், வெளியே போகலாம் என்று கூறப்பட்டபோது, சிலர் வந்தார்கள். அல்லது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஒரு வீட்டில் தன்னுடைய அம்மா பாதிக்கப்படலாம் என்ற முன்தீர்மானத்துடன் ஒரு கணவன் தன்னுடைய மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறார்.

இந்த 20 ஆண்டுகளில் இந்தத் துறையில் உங்களுக்கு எத்தகைய அனுபவம் கிடைத்திருக்கிறது?

ஒரு வழக்கு இன்னொரு வழக்கு மாதிரி இருக்காது. பணியிடத்தில் நடக்கும் வன்முறை, சமூக வலைத் தளங்களில் நடக்கும் வன்முறை எனப் பலவிதங்களில் நடக்கும் வன்முறைகளை வைத்தே 20 முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளைச் செய்யலாம். அந்த அளவுக்கு வன்முறை வேரோடியிருக்கிறது.

தற்போது சூழல் மாறியிருக்கிறதா? தங்கள் வாழ்க்கை குறித்துப் பெண்கள் முடிவெடுக்கும் சாத்தியம் அதிகரித் திருக்கிறதா?

பெரும்பாலான பெண்களின் மனநிலை மாறியிருக்கிறது. “பிள்ளைகள் எல்லாம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டுமே என்று பொறுத்துக்கொண்டிருந்தேன். இனிமே அந்த மனுஷனோட கொடுமையைத் தாங்க முடியாது” என்று கணவரை விட்டுவிட்டு, வயதான பெண்களும்கூட வருகிறார்கள். முன்பைவிட இப்போது வெளிப்படைத் தன்மை அதிகரித்திருக்கிறது.

குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டம் இருப்பது பெண்களுக்குத் தெரிந்திருக்கிறது. சமூகத்தின் ஆதரவு, குடும்பத்தின் ஆதரவு, காவல்துறையின் ஆதரவு எல்லாமே பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைப்ப தற்கான வாய்ப்பு இன்றைக்கு அதிகம். இதனால், பெண்களின் முடிவெடுக்கும் திறனும் மேம்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x