Published : 08 Jul 2020 08:37 AM
Last Updated : 08 Jul 2020 08:37 AM

வானொலி செய்தித்தாள்

அருண் குமார் நரசிம்மன்

செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் மூலம் செய்திகளை அறிந்துகொள்கிறோம். செயற்கைக்கோள்களும் இணையமும் இல்லாத காலகட்டத்தில் தொலைதூரக் கிராமங்களில் இருப்பவர்களும் ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கப்பலில் செல்பவர்களும் எப்படிச் செய்திகளை அறிந்திருப்பார்கள்?

செய்தித்தாள்கள் சென்று சேராத இடங்களில், செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்தது வானொலி செய்தித்தாள்தான்.

ரேடியோஃபாக்சிமைல் என்பது அதிக அதிர்வெண்களைக் கொண்ட வானொலி அலைகள் மூலம் படங்களைத் தொலைதூரத்துக்கு அனுப்பும் வழிமுறை. படங்களுடன் செய்திகளையும் சேர்த்து அனுப்பினால், தொலைவில் உள்ளவர்கள் வானொலியுடன் இணைக்கப்பட்ட தெர்மல் பிரின்ட்டர் மூலம் அச்சிடப்பட்டு, செய்தித்தாளாக எடுத்துக்கொள்ள முடியும்.

அமெரிக்க ரேடியோ கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்த மின்பொறியாளர் ரிச்சர்ட் எச். ரேஞ்சர், கம்பியில்லா போட்டோரேடியோகிராம் மூலம் படங்களை அனுப்பினார். 1924-ம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் படம் அனுப்பி வைக்கப்பட்டது.

1930-களில் வானொலி செய்தித்தாள் வீடுகளுக்கு வர ஆரம்பித்தது. செய்தித்தாள்களுக்குப் போட்டியாக வந்த வானொலி செய்தித்தாள் மீது செய்தித்தாள் நிறுவனங்கள் சண்டையிட்டன. வானொலி செய்திகளையும் நிகழ்ச்சி அட்டவணைகளையும் செய்தித்தாளில் அச்சிட மறுத்தன. எனினும், காலப்போக்கில் வானொலி செய்தித்தாள்கள் அங்கீகாரம் பெற்றன.

வானொலி ஒலிபரப்பு மெதுவாகவும் இயற்கைவானிலையால் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருந்ததால், இந்தச் செய்தித்தாள் சேவை பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை.இன்றும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி ஜப்பானின் க்யோடோ (Kyodo) செய்தி நிறுவனம் செய்திகளை அனுப்பி வருகிறது. பல நாடுகள் தங்கள் நாட்டுக் கடல்படை கப்பல்களுக்கு வானிலை வரைபடங்களை ரேடியோஃபாக்சிமைல் மூலம் அனுப்பி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x