Last Updated : 07 Sep, 2015 10:06 AM

 

Published : 07 Sep 2015 10:06 AM
Last Updated : 07 Sep 2015 10:06 AM

டாடா நானோ ஆலையில் உருவாகிறது புதிய மாடல் கார்: விரைவில் வருகிறது `கைட் ’, `பெலிகன்’

டாடா நானோ கார் என்றாலே மிகவும் பரிச்சயம். நடுத்தர மக்களும் கார் வாங்க வேண்டும் என்ற ரத்தன் டாடாவின் நினைவில் உருவானதுதான் நானோ. இன்று சாலைகளில் மிகவும் அழகாகா ஓடிக் கொண்டிருக்கும் நானோ கார்கள் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

2003-ம் ஆண்டுதான் குறைந்த விலையில் காரை அறிமுகம் செய்வது என்ற யோசனைக்கு உத்வேகம் கொடுத்தார் ரத்தன் டாடா.

ஆனால் இது செயல்வடிவம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. 2006-ம் ஆண்டில் நானோ கார் தயாரிப்புக்கென புதிய ஆலையைத் தொடங்க முடிவு செய்து அதை மேற்கு வங்கத்தில் நிறுவ முடிவு செய்தார் டாடா. ஆனால் மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் ஆலை தொடங்குவதென முடிவு செய்ததிலிருந்து பிரச்சினை உருவானது.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்தபோது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தியது. 2008-ம் ஆண்டு அக்டோபரில் போராட்டம் வெடித்து சிங்குரிலிருந்து வெளியேறும் நிலைக்கு டாடா தள்ளப்பட்டது.

ஏறக்குறைய 90 சதவீத ஆலைப் பணிகள் பூர்த்தியான நிலையில் சிங்குரிலிருந்து வெளியேறியது டாடா.

இந்நிலையில் 2009-ம் ஆண்டு நானோ காரை தனது மும்பை ஆலையில் தயாரித்து அறிமுகப்படுத்தியது டாடா. இரண்டு சிலிண்டர், 624 சிசி திறன் கொண்ட இந்த கார் முன் பதிவு செய்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் விலையில் வழங்கப்பட்டது.

2006-ல் ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட விலை பின்னர் உதிரிபாகங்களின் விலையேற்றத்தால் அதிகரித்த போதிலும் முன் பதிவு செய்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் விலையில் வழங்கப்பட்டது. பின்னர் அதன் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டது.

நானோ காருக்கு இருந்த வரவேற்பையடுத்து இதற்கு தனி ஆலை அமைக்க வேண்டிய தேவை டாடா நிறுவனத்துக்கு இருந்தது. இதையடுத்து குஜராத் மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி, டாடா நிறுவனத்துக்கு சனந்த் எனுமிடத்தில் 1,100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தர முன்வந்தார். இதையடுத்து சனந்த் எனுமிடத்தில் ஆலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தியது டாடா. 2010-ம் ஆண்டு இந்த ஆலை தனது உற்பத்தியைத் தொடங்கியது.

ஆனால் நானோ பெரிய வெற்றியை பெறவில்லை. கார் வாங்குவதே சொகுசாக இருப்பதற்காகதான். ஆனால் விலை மலிவு கார் என்று விளம்பரம் செய்ததினால் நானோ வைத்திருப்பவர்கள் மிடில் கிளாஸ் என்ற பொதுபிம்பம் உருவானது. அதனால் அந்த கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

குறைந்த விலை கார் என்பதால் பாதிக்கப்பட்ட பிராண்ட் இமேஜை சரிக்கட்டும் முயற்சியில் கடந்த மே மாதம் ஜென்எக்ஸ் நானோவை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஹாட்ச்பேக் மாடலில் பின்புறமும் திறந்து மூடும் வகையில் புதுப் பொலிவுடன் வந்தது நானோ.

குறைந்த விலை கார் என்று நானோவை அறிமுகப்படுத்தியதுதான் தவறு என்று ரத்தன் டாடாவே ஒப்புக் கொண்டார். பல்வேறு மார்கெட்டிங் வல்லுநர்களும் நானோவை விளம் பரப்படுத்திய முறை தவறு என்றே விமர்சித்தனர்.

2013-ல் சிஎன்ஜி-யில் இயங்கும் நானோ காரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. கடந்த ஆண்டு நானோ ட்விஸ்ட் அறிமுகமானது.

பல்வேறு மாடல்கள், மேம்படுத்தப்பட்ட ரகங்களை டாடா அறிமுகப்படுத்திய போதிலும் நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு இதன் விற்பனை அமையவில்லை என்பதுதான் யதார்த்த நிலை.

இந்நிலையில் இப்போது மீண்டும் பரபரப்படைந்துள்ளது சனந்த் ஆலை.

நானோ கார் உற்பத்தியின்போது சுறுசுறுப்பாக இயங்கியதைப் போல இப்போது மீண்டும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

இதே ஆலையில் புதிய ரகக் காரை தயாரிக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 1,200 சிசி திறன் கொண்ட கார் தயாரிப்புப் பணிகள் இப்போது இங்கு தீவிரமடைந்துள்ளன.

புதிய தயாரிப்புக்கு இன்னமும் நாமகரணம் சூட்டப்படவில்லை. இருந்தாலும் கைட் (Kite) என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் புதிய மாடல் கார் விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.

ஸோ என்ற தயாரிப்புப் பிரிவில் புதிய கார்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர மற்றொரு கார் தயாரிப்புப் பணியிலும் டாடா தீவிரமாக உள்ளது. `பெலிகன்’ என்ற சங்கேத பெயரில் புதிய கார் உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கார் நானோ கார் தயாரிப்புப் பிரிவிலேயே உருவாக்கப்படுகிறது. இந்த கார் அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது 900 சிசி முதல் 1,000 சிசி திறன் கொண்டதாக இருக்கும். ஹாட்ச்பேக் மாடலாக இது வெளிவரும். இவ்விரு கார்களுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மாருதி ஆல்டோ மற்றும் ஹூண்டாய் ஐ10 வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு போட்டியாக புதிய காரை களமிறக்க முடிவு செய்துள்ளது டாடா.

மாருதி ஸ்விப்ட் காரும் இதே என்ஜின் திறனுடன் உள்ளது. இருந்தாலும் புதிய காரின் விலை நிச்சயம் பிற நிறுவனத் தயாரிப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சிங்குரிலிருந்து சனந்த் நகருக்கு டாடா ஆலை மாற்றப்பட்டபோது அங்கிருந்து உதிரிபாக சப்ளை நிறுவனங்களும் இடம்மாறின. அந்த நிறுவனங்களில் பெயரை வெளியிட விரும்பாத நிறுவனத்தின் நிறுவனர், எத்தகைய சூழலிலும் தாக்குப்பிடித்து நிர்ணயித்த இலக்கை எட்டும் உறுதி டாடா குழுமத்துக்கு உண்டு. சிங்குரிலிருந்து சனந்த் நகர் இடம் மாறியபோது இதைத்தான் பார்த்தேன். அதேபோல இந்த ஆண்டு டிசம்பரில் நிச்சயம் புதிய கார் சாலைகளில் சீறிப் பாயும் என்று குறிப்பிட்டார்.

மாதத்துக்கு 2 ஆயிரம் முதல் 2,500 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக மற்றொரு சப்ளையர் தெரிவித்தார். சனந்த் நகரில் உள்ள ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதாவது இங்கு மாதத்துக்கு 20 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யலாம். இருப்பினும் நானோ காருக்கான தேவை போதிய அளவு இல்லாததால் இந்த ஆலை தனது முழு செயல் திறனை எட்டவே யில்லை.

புதிய கார்கள் வரவேற்பைப் பெறும் பட்சத்தில் கைட், பெலிக்கன் கார்களின் உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x