Published : 07 Jul 2020 09:31 AM
Last Updated : 07 Jul 2020 09:31 AM

கரோனா காலம்: தனிமையின் பிடியில் இளைஞர்கள்!

கனி

கரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, தனிமை. இந்தத் தனிமை பெரியவர்களைவிட இளைஞர்களை அதிகமாகப் பாதிப்பதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆய்விதழ் ஒன்றில் வெளியாகியிருக்கும் இந்த முடிவுகள், இளைஞர்கள் தனிமையால் கூடுதலாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. 237 உலக நாடுகளைச் சேர்ந்த 16 வயது முதல் 99 வயது வரையுள்ள 46,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வயது அதிகரிக்க அதிகரிக்க தனிநபர்களின் தனிமை குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், இளைஞர்கள் கூடுதலாகத் தனிமையால் அவதிப்படுவதாக இந்த ஆய்வுத் தெரிவிக்கிறது. அத்துடன், இளைஞர்களுக்குத் தங்களைத் தாங்களே ஏற்றுக்கொள்வது கடினமாக இருப்பதாகவும், தனிமையில் நேரத்தைக் கழிப்பதால் அவர்கள் முழுமையாக ஆசுவாசமடைவதில்லை என்றும் இந்த ஆய்வுத் தெரிவிக்கிறது. சீனா, பிரேசில் போன்ற கூட்டுச் சமூகங்களில் வாழும் இளைஞர்களைவிட பிரிட்டன், அமெரிக்கா போன்ற தனிநபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகத்தில் வாழும் இளைஞர்கள் தனிமையால் கூடுதலாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

“தனிமை என்பது முதுமையடைந்தவர்களையே அதிகமாகப் பாதிக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் அதற்கு நேரெதிரான கருத்தை வெளிப்படுத்தியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், இளைஞர்களே அதிகமான தனிமையை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் விரும்பும்படியான சமூகத்தொடர்புகள் கிடைக்காதபட்சத்தில், முதுமையானவர்களைவிட இளைஞர்கள் கூடுதலாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். அத்துடன், கரோனா பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்தியிருக்கும் சமூக மாற்றங்கள் இளைஞர்களைக் கூடுதலாகப் பாதிக்கும்” என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான எக்ஸெட்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மனுவேலா பேர்ரெட்டோ.

கரோனா பெருந்தொற்றுடன் சேர்த்து தனிமையாலும் பாதிக்கப்படாமல் இருக்கும்வகையில் இளைஞர்கள் தங்களைப் பார்த்துக்கொள்வது இன்றைய காலத்தின் தேவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x