Published : 06 Jul 2020 09:40 AM
Last Updated : 06 Jul 2020 09:40 AM

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணித்தால் ஊழல் குறைந்துவிடுமா? 

ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த ‘பி.எம்.சி.’ ஊழல், கூட்டுறவு வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை சரித்தது என்றே சொல்லலாம். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட‘பி.எம்.சி.’எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, ஹவுசிங் டெவலப்மென்ட் மற்றும் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.6,500 கோடி வரை கடன் வழங்கியது. இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த ஊழல் வெளியே தெரியவர, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘பி.எம்.சி.’வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி 6 மாதம் தடை விதித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

தங்கள் பணம் ஏமாற்றப்பட்டுவிட்டது என்ற அதிர்ச்சியில் அதன் சில வாடிக்கையாளர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி கிடைப்பதால், கிராமப்புற விவசாயிகள், சிறு, குறு வணிகர்கள் கூட்டுறவு வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்கின்றனர். ஆனால் அங்கு அவ்வப்போது நடந்து வரும் மோசடிகளால், கூட்டுறவு வங்கிகள் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாக மாறிவருகிறது. கடந்த 5 நிதியாண்டுகளில் மட்டும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் ரூ.220 கோடி முறைகேடு நடைபெற்று இருக்கிறது. அதுதொடர்பாக, 1,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தச் சூழலில்தான் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரையில் கிராமப்புறத் தொழில்களுக்கான நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட்டுறவு வங்கிகளின் பங்கு முக்கியமானது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் என பல படிநிலைகளில் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் ஒப்புதலைத் தொடர்ந்து தற்போது நாடு முழுவது முள்ள 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 பல மாநிலக் கூட்டுறவு வங்கிகளும் (multi state cooperative societies) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுவரையில், கூட்டுறவு வங்கிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. இந்தச் சூழலில் ஊழல் புகார்களை காரணம் காட்டி கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது பயனுள்ள நடவடிக்கையாக அமையுமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா?

கூட்டுறவு வங்கிகளின் பங்களிப்பு

பன்முகம் கொண்ட இந்தியாவின் அழகும் அடித்தளமும் அதன் கிராமங்கள்தான். 135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 2019 நிலவரப்படி 6,64,369 கிராமங்கள் உள்ளன. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். 70 சதவீத தொழிலாளர்கள் கிராமங்களில் உள்ளனர். தேசிய வருமானத்தில், 46 சதவீதம் கிராமப் பொருளாதாரத்தின் பங்கு உள்ளது. இவை பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டவை. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, விவசாயம் மற்றும் சுய தொழிலுக்காக அடிக்கடி நிதி தேவைப்பட்டது.மேலும், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க, முதலீடு செய்ய ஒரு நிதி அமைப்பு தேவைப்பட்டது.

நுாறாண்டுகளுக்கு முன்பு, அதாவது, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், வங்கியை நாட வேண்டும் என்றால், நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதற்காக வண்டிகட்டிக்கொண்டு, நகரங்களுக்குப் போவது என்பது ஒரு கிராமத்துவாசியின் அன்றாட பணிகளை முடக்கி போட்டுவிடும். அதை தொடர்ந்தே, கிராமப் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்கும் நோக்கத்துக்காக, கிராமங்களில் கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டன. சேமிப்பு, முதலீடு, வேளாண் கடன் போன்றவையே அதன் முக்கிய பணிகளாயின. அதன் பிறகு, கிராமங்களில் விவசாயிகள், தனிநபர் அவசரத் தேவைக்காக கந்துவட்டிக்காரர்களை நாடும் நிலை குறைந்தது.

பயிர்சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, சுய தொழில், தனிநபர் கடன், சிறுதொழில் கடன் போன்றவற்றை வழங்கி, கிராமப் பொருளாதாரம் செழிப்புற பங்காற்றிய கூட்டுறவு வங்கிகள் பலவற்றில், காலப்போக்கில் அரசியல் ஆதிக்கம், குறிப்பிட்ட குழுவினர் ஆதிக்கம் வளர்ந்தது. கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் கடன்கள் வழங்குவதில் அரசியல், அதிகார தலையீடுகள் ஆங்காங்கே தலை தூக்கின. நிதி நிர்வாகம் செய்வதில் அனுபவம் வாய்ந்த தலைமையோ, திறன் மிகுந்த பணியாளர்களோ பல வங்கிகளில் இல்லாமல் போனது.

இதனால், அதிக வட்டி கிடைக்கும் என்பதால் முதலீடு செய்யப்பட்டிருந்த மக்களின் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தது.
கூட்டுறவு வங்கிகளில், கடன் மதிப்பீடு (கிரடிட் அப்ரைசல்) செய்யப்படாமல் வழங்கப்பட்ட தகுதிக்கு மீறிய தனிநபர், நிறுவன கடன்கள் பல திரும்பி வராமல் போயின. இதனால், வாராக்கடன் அதிகரித்தது. இப்படி ஏற்பட்ட வாராக்கடன் குறித்த தகவல்களும் அந்தந்த மாநில அரசுகளுக்கோ, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கிக்கோ (நபார்டு) சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளால் முறையாக தெரிவிக்கப்படவில்லை. மேலும் கூட்டுறவு வங்களில் இருந்த பினாமி கணக்குகள் வாயிலாக, முறைகேடாக பணப்பரிமாற்றம் நடக்கவும் வாய்ப்பிருந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பினாமி கணக்குகள் வழியே, கறுப்புப்பணம் மாற்றப்பட்ட கதைகள்கூட உண்டு.கே.ஒய்.சி. (Know your customer) எனப்படும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் பல வங்கிகளில் முறையாக இல்லை. பிற வர்த்தக வங்கிகளைப்போல, கணினி மயமாக்கப்படாமல், கணக்கு லெட்ஜர் முறையிலேயே பல கூட்டுறவு வங்கிகள் இயங்கியதால், முறைகேடு செய்வது எளிதாக இருந்தது. மக்கள் பணத்தை பாதுகாப்பதற்கும், கூட்டுறவு வங்கிகளின் முதலீடு, அவை வழங்கும் கடன், வாராக்கடன் அளவு போன்றவற்றை நிர்வகிக்கவும், அவற்றை ரிசர்வ் வங்கி நெறிப்படுத்துவது ஒன்றே தீர்வாகும் என்று கருதியே மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இதுவரை ரிஜிஸ்தரரார் ஆஃப் கோ ஆப்ரேடிவ், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (நபார்டு) ஆகியவை கூட்டுறவு வங்கிகளை கண்காணித்தன. தற்போதைய மாற்றத்தால்,கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள் நியமனங்களில் ரிசர்வ் வங்கியின் பங்கும் இனிமேல் இருக்கும். ஆனால், மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் வருவதால்,கூட்டுறவு வங்கி களின் தணிக்கை, ஆவணங்கள் போன்றவை ஆய்வு செய்யப்படும். இதனால், வங்கி நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மை ஏற்படும். சேமிக்க, முதலீடு செய்ய மக்கள் பயமின்றி கூட்டுறவு வங்கிகளை அணுகும் சூழல் உருவாகும்.

மாநில உரிமை பறி போகுமா?

இந்த புதிய அறிவிப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கிறது, கூட்டுறவு அமைப்புகளில் மத்திய அரசின் தலையீடு ஏற்பட வாய்ப்பளித்துள்ளது, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அளிக்கும் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை இது தடுக்கும் என்பது போன்ற கருத்துகள் பரவலாக பேசப்படுகிறது. உண்மை என்னவென்றால், கூட்டுறவு வங்கி நிர்வாகங்களில் மத்திய அரசின் நேரடி தலையீடு இருக்க வாய்பில்லை. அதை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி என்பது தனி அமைப்பு. மேலும், ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் கூட்டுறவு வங்கிகள் இயங்கப்போவதால் அவற்றின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்.

அதில் போடப்பட்டுள்ள வைப்புத்தொகை குறித்து மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உள்ளூர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக, கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்களில், பணப்பரிமாற்றத்தில் எந்த தனி நபர் கட்டுப்பாடும் இனி இருக்க வாய்ப்பில்லை. மேலும்,கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்களில் ரிசர்வ் வங்கி அளிக்கும் பரிந்துரைகள், மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படியே நடக்கும் என்பதும், மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளில் ரிசர்வ் வங்கி தலையிடாது என்ற உத்தரவாதங்களும் மாநில அரசுகளின் உரிமையை பறிக்காது என்றே உணர்த்துகிறது. மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கூட்டுறவு அமைப்புகளின் அடிப்படை சிதைக்கப்படாது என்ற நம்பிக்கையும் அது தருகிறது.

ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் வந்ததும்கூட்டுறவு வங்கிகளில் ஊழல் குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இங்கு ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். சமீபகாலமாக பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து இருக்கிறது. மிகப் பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கி திவால் நிலைக்கு ஆளானது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி அளவில் மோசடி நடைபெற்றது. இவையெல்லாம் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இருப்பவைதான். எனில் அங்கு ஊழல் நிகழ்ந்ததற்கு யார் காரணம்?

நாட்டின் முதல் கூட்டுறவு வங்கி

அன்யோன்யா கூட்டுறவு வங்கி லிமிடெட்(ஏசிபிஎல்)என்பதே இந்தியாவின் முதல் கூட்டுறவு வங்கியாகும்.இது,குஜராத் மாநிலம்,பரோடாவில்(தற்போது வதோதரா) 1889 இல் தொடங்கப்பட்டது. வெறும்23 உறுப்பினர்களுடன், 76 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு, முதல் ஆண்டிலே 873 ரூபாய் விற்று முதல்(turnover)கண்டது.

இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி, தமிழ்நாடு ஆகும். முதல் விவசாய கூட்டுறவு கடன் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் திரூரில் தொடங்கப்பட்டது. 1904ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் ஒரு நுகர்வோர் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டை முன்மாதிரியாக கொண்டே மற்ற மாநிலங்கள் கூட்டுறவு சங்கங்களைத் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x