Published : 05 Jul 2020 09:19 AM
Last Updated : 05 Jul 2020 09:19 AM

கரோனா காலம்: குழந்தைகளின் கோபத்துக்குச் செவிகொடுப்போம்

ப்ரதிமா

கரோனா ஊரடங்கால் பெரியவர்களே பெரும் மனப்போராட்டத்தைச் சந்தித்து வரும் சூழலில் குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்வது பெற்றோருக்குச் சவால் நிறைந்ததாக இருக்கிறது. காற்றுக்குக் கடிவாளம் போடுவதைப் போன்றதுதான் சுற்றித் திரிந்த குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துப் பராமரிப்பது.

ஊரடங்கின் தொடக்க நாட்களைப் பெரும்பாலான குழந்தைகள் மகிழ்ச்சியாகவே கழித்தனர். கற்பனைக்கு எட்டாத அற்புத உலகமாகவே இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் தங்க வைக்கப்படும்போது அலுத்துவிடும்தானே. மூன்று மாதங்களைக் கடந்து தொடரும் ஊரடங்கு அப்படியான அலுப்பையும் சோர்வையும்தான் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

அட்டவணை அவசியம்

கரோனா வைரஸ் பரவல் குறித்தும் நாம் வீட்டுக்குள்ளேயே இருப்பதன் அவசியம் குறித்தும் குழந்தைகளுக்குப் புரிந்தாலும், இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பது என்பதுதான் அவர்களின் எரிச்சலுக்குக் காரணம். எரிச்சல் கோபமாகி, சில நேரம் எல்லை கடந்துவிடுவதும் உண்டு. இதுபோன்ற சூழலில் பெற்றோரும் குழந்தைகளுக்கு நிகராகக் கோபப்படுவதோ அவர்களை அடக்க முயல்வதோ எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும்.

குழந்தைகளைக் கையாளும் வழி தெரியாதபோதுதான் கோபம் ஏற்படுகிறது. குழந்தைகளுடன் நாம் செலவழிக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றினால் குழந்தைகளின் மனநிலையில் விரும்பத்தகுந்த மாற்றத்தைக் காணலாம் என்கிறார் கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதைச் செய்தாலும் பத்து நிமிடங்களில் அலுத்துவிடும். அதனால், நாம்தான் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து அவர்களை பிஸியாக வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் அவர்களின் திறமைக்குச் சவால் விடும் வேலையைச் செய்யச் சொல்லலாம். கதை சொல்வது, ஓவியம் வரைவது போன்ற பொதுவான செயல்பாடுகளுடன் அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து அதை வைத்து மாறுவேடமிடுவது, நாடகத்தை அரங்கேற்றுவது, கலைப் பொருட்களைச் செய்வது என அவர்களின் கற்பனை வளத்துக்குக் களம் அமைத்துக் கொடுக்கலாம்” என்று சொல்லும் அவர், ‘பள்ளியில் நேர அட்டவணை இருப்பதைப் போல், வீட்டுச் செயல்பாடுகளுக்குக் குழந்தைகளையே அட்டவணை போடச் செய்து கடைப்பிடிக்க வைக்கலாம்’ என்கிறார்.

பலன் தரும் உடன்படிக்கை

கைபேசி, தொலைக்காட்சி, கணினி போன்றவற்றிலேயே குழந்தைகள் நாள் முழுவதும் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பது பெரும்பாலான பெற்றோரின் புலம்பல். அவற்றைப் பயன்படுத்தவிடாமல் தடுக்கும்போது, குழந்தைகளில் பலர் கோபப்படுவது, பொருட்களை உடைப்பது போன்றவற்றைச் செய்வதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். உரிய காரணத்தைச் சொல்லாமல் குழந்தைகளிடமிருந்து ஒரு பொருளைப் பறித்தால் அப்படித்தான் செய்வார்கள் என்று சொல்லும் பிருந்தா ஜெயராமன், இதுபோன்ற விஷயத்தில் குழந்தைகளுடன் உடன்படிக்கை செய்து கொள்வது நல்ல பலனைத் தரும் என்கிறார்.

“செல்போனிலோ டிவியிலோ அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். தேவையற்ற வீடியோக்களைப் பார்ப்பது, விளையாடுவது போன்றவற்றைத் தொடர்ச்சியாகச் செய்தால் செல்போனைத் தர முடியாது என்பதைக் கண்டிப்புடன் சொல்ல வேண்டும். மாறாகப் படிப்பது, அறிவுப்பூர்வமான தகவல்களைத் தேடுவது எனப் பயனுள்ள வகையில் செல்போனைப் பயன்படுத்தினால் கண்டிக்கத் தேவையில்லை. பயன்படுத்தும் நேரத்தை மட்டும் கட்டுக்குள் வைத்தால் போதும்” என்கிறார்.

வளரிளம் பருவத்தைப் புரிந்துகொள்வோம்

சிறு குழந்தைகளைக்கூட ஓரளவுக்குச் சமாளித்துவிடும் பெற்றோர் வளரிளம் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைக் கையாளத் தெரியாமல் தவிக்கிறார்கள். எப்போதும் பெற்றோரின் கண்காணிப்பிலேயே இருப்பதை இந்த வயதுக் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். தன்னுடைய உலகத்தில் பெற்றோர் தேவையில்லாமல் நுழைவதாகவும் குழந்தைகள் நினைக்கக்கூடும். அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதுதான் இதற்குத் தீர்வு. ஆனால், இத்தனை நாட்களாகக் குழந்தைகளோடு எதுவும் பேசாமல் தனித் தனி தீவுகளாக இருந்துவிட்டு, இப்போது திடீரென அவர்களிடம் சென்று உன் பிரச்சினையைச் சொல், நான் புரிந்துகொள்வேன் என்றால் அது குழந்தைகளின் கோபத்தை அதிகரிக்குமே தவிர பெற்றோருடன் இணக்கத்தை ஏற்படுத்தாது.

“இது கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய சிக்கல்தான். பள்ளி, படிப்பு, மதிப்பெண் என்று குழந்தைகளை இயந்திரத்தனமாக அணுகிவிட்டு இப்போது நமக்கு நேரம் கிடைக்கிறது என்பதற்காக, ‘என்னிடம் மனம்விட்டுப் பேசு’ என்று சொல்வது குழந்தைகளுக்கே அபத்தமாகப்படும். ஆனால், இப்போது இல்லையென்றால் வேறு எப்போது அவர்களிடம் நெருங்குவது? அதனால், சிறு சிறு உரையாடல் மூலம் குழந்தைகளைப் புரிந்துகொள்ள முயலலாம்.

அவர்களுக்குப் பிடித்த உணவு, சினிமா என்று அதைத் தொடங்கலாம். பிறகு, அவர்களுடைய நண்பர்கள், ஆன்லைன் செயல்பாடு, எதிர்ப்பாலின ஈர்ப்பு என்று சிறிது சிறிதாக முன்னேறலாம். இப்படியான அணுகுமுறை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப மாறுபடும். குழந்தைகளை அணுகும் விதத்தில் எதையும் பொதுமைப்படுத்தக் கூடாது” என்கிறார் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அபிராமி.

வளரிளம் பருவக் குழந்தைகளின் செயல்களுக்கு நாமாக அர்த்தம் கற்பித்துக்கொண்டு முன்முடிவுக்கு வந்துவிடுவதுதான் பெரும்பாலான பெற்றோர் செய்கிற தவறு. அதனால்தான் குழந்தைகள் பலவற்றையும் பெற்றோரிடமிருந்து மறைக்கிறார்கள், பெற்றோரைத் தவிர்த்துவிட்டு நண்பர்களிடமே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

இடைவெளியை நேர்செய்வோம்

ஊரடங்கால் நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை என்பதும் குழந்தைகளின் கோபத்தை அதிகரிக்கும். இதுபோன்ற நேரத்தில் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் தலைமுறை இடைவெளியைச் சரியான விதத்தில் அணுக வேண்டும் என்கிறார் அபிராமி. “நான் அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் பொறுப்புடன் இருந்தேன் தெரியுமா? என் அப்பா என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார் என்று சொல்வதெல்லாம் குழந்தைகளுக்கு வேண்டாத கதை.

இன்றைய சூழலே வேறு. நம்முடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியும் தேடலும் விரிந்தவை. அதனால், முடிவெடுக்கும் பொறுப்பைக் குழந்தைகளிடமே ஒப்படைப்பதுதான் நல்லது. ஊரடங்கில் அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அவர்களுக்குப் புரியவைப்பதும் அவர்களின் செயல்பாடுகளில் உடனிருப்பதும்தான் வளரிளம் பருவக் குழந்தைகளைப் புரிந்துகொள்ள துணைபுரியும்” என்கிறார் அபிராமி.

கரோனா ஊரடங்கு என்பது நாம் மட்டுமே அனுபவிக்கிற நடைமுறையல்ல, உலகம் முழுவதுமே இதுதான் நிலை என்று குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். ஊரடங்கில் வெளியே செல்வதைச் சில குழந்தைகள் சாகசம்போல் செய்ய நினைக்கலாம். ஆனால், அது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தொற்றுப் பரவல் காலத்தில் நாம் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சொல்ல வேண்டும். உலகம் முழுவதுமே பொருளாதார மந்தநிலை இருக்கும் நேரத்தில், நம்முடைய இயலாமையையும் கோபத்தையும் குழந்தைகளிடம் வெளிப்படுத்தக் கூடாது. தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்து நாம் உணரவும் அதைக் குழந்தைகளுக்கு உணர்த்தவும் இந்த ஊரடங்கைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பெற்றோரே முன்னுதாரணம்

“மாற்றத்தை நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். வீட்டில்தானே இருக்கிறோம் என்று நாமே காலை பத்து மணி வரைக்கும் தூங்கிவிட்டு, குழந்தைகளிடம் நேரக் கட்டுப்பாட்டை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்கிறார் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இல்லத்தரசி பார்வதி கோவிந்தராஜ். “எல்லாம் எனக்கே தெரியும், நீ வாயை மூடு என்பதாகத்தான் பெரும்பாலான குழந்தைகளின் அணுகுமுறை இருக்கிறது. காரணம், பெற்றோர் மீது குழந்தைகளுக்கு மதிப்பில்லை.

இதற்குக் காரணமும் நாமேதான். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் சண்டையிட்டுக்கொள்வதும் ஒருவரையொருவர் மரியாதைக் குறைவாக நடத்துவதும் நம் மீதான மதிப்பைக் குழந்தைகளிடம் குறைத்துவிடும். நான் என் பாட்டியிடம் கதை கேட்ட அளவுக்கு என் பேரக் குழந்தைகள் என்னிடம் கதை கேட்பதில்லை. உறவுப் பிணைப்பை டிவியும் செல்போனும் பறித்துவிடக் கூடாதுதானே. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் இந்தச் சூழலில் நம்மைச் சரிப்படுத்திக்கொள்வதுடன் குழந்தைகளையும் நெறிப்படுத்த வேண்டும்” என்கிறார் பார்வதி.

ஊரடங்கில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் நாம் பிள்ளைகளுக்கு முன்னால் நடந்துசெல்வதைவிட, அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு இணையாக நடப்பதுதான் சரியான வளர்ப்புமுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x