

தமிழகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான பணிகளில் ஆர்வத்தோடு செயல்படுபவர். பணிக்காலத்தில் கல்வி தொடர்பான பல முக்கியமான பணிகளைச் செய்துள்ளவர். ஓய்வு பெற்றாலும் இன்னமும் மாணவர்களுக்காகச் செயல்படுகிறார். அவரது நேர்காணலின் பகுதிகள்.
ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர் மத்தியிலே தமிழகத்தில் கல்வி எப்படிப் போயிருக்கிறது?
இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது. தலித் மக்கள், பழங்குடி மக்களுக்கு வாய்ப்புகள் தந்தால் மிகச் சிறப்பாகக் கல்வியில் சிறக்கிறார்கள். ஆனாலும், கல்வியறிவு மற்றவர்களை விட அவர்களிடம் குறைவாகவே இருக்கிறது.
உதாரணமாக 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதி திராவிட மாணவர்களில் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் 2.7 சதவீதம் மட்டுமே. பழங்குடிகள் இன்னும் கீழே உள்ளனர். 2011 கணக்கெடுப்பில் பெரியளவு மாற்றம் எதுவும் இல்லை.
இந்த இடைவெளியை நிரப்புவதற்காகக் கல்வி உதவித்தொகைகள் தரப்படுகின்றன. அதிலும் மற்ற மாநிலங்களில் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்குப் பொதுவாக, கல்வி உதவித்தொகைகள் தரப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் அவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. முக்கியமாக இந்தப்பணிக்கு தமிழக அரசின் ஆணை எண் - 92 மாணவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
அரசு ஆணை 92 ன் படி கல்வி உதவித்தொகைகள் கிடைக்கவில்லை என மாணவர்களிடம் புகார்கள் உள்ளதே?
உண்மைதான். அரசு ஆணை எண் 92 எனது பதவிக்காலத்தின் கடைசி ஆண்டுகளில் எனது முன்முயற்சியால் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூடப் பட்டியல் சாதியினர், பழங்குடியினர்கள் உயர்கல்வி பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப் படவில்லை. ஆனால், இடையில் தமிழக அரசு G.O.(MS) No.122 DT. 18. 2. 1972 என்ற ஆணையின் மூலம் இந்த நிலையை மாற்றியது.
அதற்குப் பிறகு வந்த G.O.Ms.No.722 DT. 13.10.1977 என்ற ஆணை பி.யூ.சி. படிப்புக்கு மேற்பட்ட பட்டப்படிப்புக்குச் சமமான படிப்புகளுக்கு எந்த விதக் கட்டணமும் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்தது. (>http://cms.tn.gov.in/sites/default/files/gos/adtw722-e.pdf) ஆனாலும் இது காலப்போக்கில் அமலாகவில்லை. மாணவர்களுக்கு இந்தப் பயன் போய்ச்சேரவில்லை.
இதற்கிடையில் 10-ம் வகுப்புக்குப் பிறகான அனைத்துவகையான படிப்புகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து அதை 100 சதவீதம் மானியமாக மாநிலங்களுக்கு வழங்கியது. அந்தத் தொகையை வழங்குவதில் கூடத் தமிழக அரசின் நிர்வாகத்தில் பல குளறுபடிகளும் தடைகளும் இருந்தன. அவற்றைச் சரி செய்யும்வகையில் உருவானதுதான் அரசு ஆணை எண்- 92 (தேதி. 11.09.2012.) ஆரம்பத்தில் இதில் நல்ல பயன் ஏற்பட்டது.
சட்டமன்றத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்தாலும் அதைக் கல்லூரிகளுக்கும் விடுவிப்பதில் அரசு நிர்வாகம் சார்பில் பெரும் தடை ஏற்பட்டது. குழப்பமான அரசு ஆணைகளை வெளியிட்டுக் கல்வி உதவித் தொகைகள் வழங்குவதில் சில உயர் அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தினார்கள். அவற்றை எதிர்த்துப் பல இடங்களில் மாணவர்கள் போராடினார்கள்.
இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
அரசு பல திட்டங்களைக் கொண்டுவந்தாலும் நிர்வாகத்தில் உள்ள அலட்சிய மனப்பான்மை காரணமாகவே இந்த நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்படுகிற மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகைகள் கிடைப்பதற்கு நானும் சில இளைஞர்களும் தொடர்ந்து முயல்கிறோம். 9894525254, 9500200915 எனும் எண்களில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழக முதல்வர் இதில் தலையிட்டு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறோம்.
- சந்திப்பு: நீதி