Published : 30 Jun 2020 08:25 AM
Last Updated : 30 Jun 2020 08:25 AM

சேதி தெரியுமா ? - ரிசர்வ் வங்கியின்கீழ் கூட்டுறவு வங்கிகள்

தொகுப்பு: கனி

ஜூன் 24: 1,482 நகரக் கூட்டுறவு வங்கிகளையும், 58 பல-மாநிலக் கூட்டுறவு வங்கிகளையும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான 2020 வங்கி ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுள்ளார்.

‘சி.பி.எஸ்.இ.’ தேர்வு ரத்து

ஜூன்.25: கோவிட்-19 காரணமாக, ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுவதாக இருந்த எஞ்சியிருந்த பாடங்களுக்கான பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ‘சி.பி.எஸ்.இ.’ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக ‘சி.பி.எஸ்.இ.’யும் மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தன. நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகள் குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இறுதியாண்டுத் தேர்வு ரத்து

ஜூன். 25: கோவிட்-19 காரணமாக, நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி ஆண்டு/செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைசெய்துள்ளது. முந்தைய செமஸ்டர், உள் மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், புதிய கல்வியாண்டு அக்டோபரில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரியப் போரின் 70-ம் ஆண்டு

ஜூன். 25: வட, தென் கொரியாவும் 1950-ம் ஆண்டு நடைபெற்ற கொரியப் போரின் 70-ம் ஆண்டை நினைவுகூர்ந்தன. வட கொரியாவின் படையெடுப்பைத் தென் கொரியா, அமெரிக்காவின் ஆதரவோடு எதிர்கொண்டது. 1950-53 வரை நடைபெற்ற இந்தப் போர் சார்ந்து இன்னும் முழுமையான அமைதி உடன்படிக்கை எட்டப்படவில்லை.

நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டாம்

ஜூன். 26: கோவிட்-19 பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில், எந்த நாடும் நிலக்கரி போன்ற மாசு, உமிழ்வை வெளியேற்றும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் 41 நிலக்கரித் தொகுதிகள் வணிகச் சுரங்கத்துக்காக ஏலம் விடப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல், ஐ.நா. பொதுச்செயலாளர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x