Published : 29 Jun 2020 09:13 am

Updated : 30 Jun 2020 15:56 pm

 

Published : 29 Jun 2020 09:13 AM
Last Updated : 30 Jun 2020 03:56 PM

வீட்டிலிருந்தே பணி செய்வது நிரந்தரமானால்…

work-from-home

கரோனா தொற்று இப்போதைக்கு ஓய்வதாக இல்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் என்ன செய்யவதன்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் பொருளாதாரத்தை மீட்டுக்க வேண்டிய கட்டாயம்; மறுபுறம் நோய்ப் பரவலையும் தடுக்க வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாட்டை முழுமையாக தளர்த்தாமல் தொழிற்செயல்பாடுகளை ஊக்குவிக்க முடியாது. அதேசமயம், ஊரடங்கை தளர்த்திவிட்டால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிடும் என்ற அச்சம். கரோனா வேகமாக பரவுவதற்கு மக்கள் நெருக்கம் முக்கிய காரணமாக இருக்கிறது. மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையிலும் சமூக இடைவெளி, தனிநபர் சுத்தமும்தான் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரத்தைப் பேண முடியும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் சமூக இடைவெளியஎப்படி சாத்தியப்படுத்துவது?

உலக அளவில் கரோனா தொற்று அதிகம் ஏற்பட்ட நகரங்களுக்கிடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது. அந்த நகரங்கள் அனைத்தும் மிக மோசமான ஜன நெரிசல் கொண்ட நகரங்களாக இருக்கின்றன. இந்தியாவில் மும்பை கரோனோவின் ஹாட்ஸ்பாட். இங்கிலாந்தில் லண்டன், அமெரிக்காவில் நியூயார்க் சிட்டி, இத்தாலியில் மிலன். இப்படி ஜன நெரிசல் கொண்ட நகரங்களே கரோனா தொற்றுக்கு எளிய இலக்காகி இருக்கின்றன. இந்தச் சூழலில் நீண்ட நாள் அளவில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அதன் நகரக் கட்டமைப்பில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் உள்ளன.


இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்தும் பெருநகரங்களை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் பெருநகரங்களில் குடிகொண்டுள்ளன. இதனால் வேலைவாய்ப்புக்கென்றே ஒரு மாநிலத்தின் கடைக்கோடியில் இருப்பவர்கள் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, அதன் தலைநகருக்கு இடம்பெயர்ந்தாக வேண்டிய சூழல் இருக்கிறது. இவ்வாறாக தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், சிறு நகரத்திலிருந்தும் வேலைதேடி அனைவரும் சென்னையை நோக்கி வருவதால், இந்நகரம் பெரும் வீக்கத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் தலைநகரின் நிலையும் இதுதான்.

2016-ம் ஆண்டு ஐ.நா வெளியிட்ட ‘உலக நகரங்கள் அறிக்கை’யில், உலக நாடுகள் நகரமயமாக்குதல் சார்ந்து அதன் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியது. நகரங்களில் வசிக்கும் மக்களிடையே நிலவும்பெரும் ஏற்றத்தாழ்வு, சமூக பாதுகாப்பின்மை, ஜன நெருக்கடி, வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம், உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நகரக் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

அதன் பகுதியாகவே, நகரங்கள் அதன் தற்போதைய நில அமைப்பை கணக்கில்கொண்டு மக்கள் பெருக்கத்தை எதிர்கொள்வதற்கான திட்டத்தை உருவாக்குவதை கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அதன் நிலப்பரப்பு எத்தனை மக்கள் தொகைவரை தாக்குப்பிடிக்கும் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப வீடுகள், சாலைகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், காற்று, தண்ணீர், கழிவு மேலாண்மை போன்றவற்றை முறையாக திட்டமிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுவெளிகளில் மட்டுமல்ல வீடுகளினுள்ளே சமூக இடைவெளி சாத்தியமற்றதாக இருக்கிறது.இந்திய நகர்ப்புறங்களில் 27 சதவீத வீடுகளும், கிராமப்புறங்களில் 34 சதவீத வீடுகளும் மிகக் நெருக்கடியான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாக 2019-ம் ஆண்டு வெளியான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் கூறியுள்ளது. காற்றோட்டமான வீட்டமைப்பு, சுத்தமான நீர் என்பது கனவாக மாறி இருக்கிறது. இந்தச் சூழலில் தற்போதைய கரோனா தொற்றை மட்டுமல்ல, மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவேனும் நகரக்கட்டமைப்பை மாற்ற வேண்டியதாகிறது. வரலாற்றில் எந்தவொரு அரசியல், பொருளாதார மாற்றங்களும் கடும் பேரழிவு காலகட்டத்தைத் தொடர்ந்தும், நெருக்கடிக் காலகட்டத்தைத் தொடர்ந்தும்தான் ஏற்பட்டுகிறது. அப்படியான ஒரு நிர்பந்தத்தையும், அதற்கான வாய்ப்பையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் பெருநகரங்களில் உள்ள ஜன நெருக்கடியை குறைக்க வேண்டுமென்றால் கிராமங்களையும், சிறு நகரங்களையும் முக்கியத்துவம் கொண்டதாக மாற்ற வேண்டும். அதுவே இந்தியாவில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை குறைந்தபட்சமாகவேனும் சரி செய்யும். ‘வீட்டிலிருந்து பணிப் புரிதல்’ அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கரோனாவுக்கு முன்பு வரை ‘வீட்டிலிருந்து பணிபுரிதல்’ என்பதை கற்பனைகூட செய்திராத துறைகளும் தற்போது அதற்கான சாத்தியத்தை உணர்ந்துள்ளன. கரோனா இந்தியாவில் பரவத்தொடங்கிய ஆரம்ப நாட்களிலே பல்வேறு மென்பொருள் நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய வலியுறுத்தின. கல்லூரிகளும் தற்போது இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இணையம் வழியாக செய்து முடிக்கப்படும் வேலைகள் அனைத்தும் தற்போது வீட்டிலிருந்தே செய்து முடிக்கப்படுகின்றன. இந்தச் சூழல் விரிவாக்கப்படும்பட்சத்தில் நாம் நினைத்துப் பாத்திராத அளவில் மாற்றங்கள் நிகழும்.

உதாரணமாக சென்னையை எடுத்துக்கொள்வோம். சென்னையின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் வேலைக்காக சென்னையை நோக்கி வந்தவர்கள். அதன் பொருட்டு சென்னையை தங்களது நிரந்தர வசிப்பிடமாக மாற்றிக்கொண்டவர்கள். இந்தப் பெருக்கத்தின் காரணமாகத்தான் வீடு வாடகை மிக அதிகமாக இருக்கிறது. வாகனப் போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, முறையற்ற கட்டிடங்கள் என வாழத் தகுதியற்ற சூழல் உருவாக்கபட்டு இருக்கிறது. இந்தச் சூழலில் ‘வீட்டிலிருந்து பணிபுரிதல்’ விரிவாக்கப்படும்பட்சத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் தங்க்ள் சொந்த ஊரை நோக்கி திரும்புவதற்கான வாய்ப்பாக அமையும். இதுமட்டுமல்லாமல்,தொழில்சார் வளர்ச்சித் திட்டங்களும் டயர் 2, டயர் 3 நகரங்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இதனால் அந்தப் பகுதிகளில் வளர்ச்சி சாத்தியப்படும்.

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமானசோஹோ பிற நிறுனங்களுக்கு ஒரு முன்னுதாரணத்தை அளிக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சவாலாக உருவெடுத்துவரும் சோஹோவின் தலைமை அலுவலகம்சென்னை கூடுவாஞ்சேரியில் இருக்கிறது. மற்றொரு அலுவலகத்தைதென்காசி மாவட்டம்,மேற்குத்தொடர்சி மலை அடிவாரத்தில் அமைத்திருக்கிறார் அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு. இந்த இரு வளாகங்களின் உள்ளே சோஹோ பல்கலைக்கழகமும் செயல்படுகிறது.

சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பாதியில் படிப்பு நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அங்கே வேலைக்கும் அமர்த்துகிறார்கள். கிட்டத்தட்ட நகரமயமாக்கலின் எதிர்திசையில் சோஹோ பயணிக்கிறது. அந்தந்த பிராந்தியங்களின் மனித வளங்களைப் பயன்படுத்தி வளர்ச்சியை சாத்தியப்படுத்துகிறது. இவ்வாறு அனைத்து நிறுவனங்களும் சிறு நகரங்களை நோக்கி நகர வாய்ப்பில்லை என்றாலும், வீட்டிலிருந்து பணிபுரிதல் நடைமுறையால் ஏனைய நகரங்களிலும் வளர்ச்சி சாத்தியமாகும்.

இதனால் நிறுவனங்களுக்கும் பல சாதகங்கள் கிடைக்கின்றன. அலுவலகத்துக்கென்று பெரிய அளவில் கட்டடம் தேவையில்லை. அதற்கான வாடகை, பராமரிப்புச் செலவு என செலவினங்கள் குறைகிறது. அதேபோல் நினைத்த நேரத்தில் தொழில் தொடங்குவதற்கான சாத்தியத்தையும் அது தருகிறது. அனைத்து துறைகளிலும் ‘வீட்டிலிருந்து பணிபுரிதல்’ சாத்தியமில்லை என்றாலும், அதற்கான சாத்தியமுள்ள துறைகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால்,இனியும் நெருக்கடியை இயல்பாகக் கொள்ள முடியாது. எந்தெந்த வழிகளில் மக்கள் நெருக்கடியை குறைக்க முடியுமோ அந்தந்த வழிகளை அரசு பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

கரோனா ஏற்பட்டிருக்காவிட்டாலும் இந்த மாற்றத்தை நாம் நகர வேண்டியது மிக அவசியம். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் வாழ்க்கைத் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஏழ்மை, சுகாதாரமின்மை, வன்முறை, வேலையிண்மை இந்தியாவின் அடையாளமாக இருக்கிறது. தவிரவும் இங்குள்ள வேலைச் சூழலும், ஆரோக்கியமானதாக இல்லை. பண்ணிரெண்டு மணி நேர வேலை என்பது மிக இயல்பான ஒன்றாக மாறி இருக்கிறது. வேலை சார்ந்து ஊழியர்களுக்கு பாதுக்காப்பு இல்லை.

இந்தச் சூழலில் புதிய பொருளாதாரக் கட்டமைப்பு குறித்து, சுற்றுச்சூழல் பொருளாதார ஆய்வாளர் சைமன் மெய்ர் முன்வைக்கும் பார்வை கவனிக்கத்தக்கது. ‘பொருட்களை உற்பத்தி செய்து விற்பதையும், அதை வாங்குவதையும்தான் நாம் பொருளாதாரமாக அணுகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அடிப்படையில் பொருளாதாரத்தின் மையம் என்பது, மூல வளங்களை வாழ்தலுக்குத் தேவையான பொருட்களாக மாற்றம் செய்வதே. இந்த அடிப்படையில் பொருளாதாரத்தை அணுகும்போது உற்பத்தியை தேவைக்கேற்ப மேற்கொள்ளும் சாத்தியப்பாடு உருவாகும். உற்பத்திக்கேற்ப மக்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும். ஊதியத்தை சார்ந்தே ஒருவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் போக்கு மாற்றப்பட வேண்டும்’ என்கிறார்.

தற்போதைய சந்தைப் பொருளாதார உலகில் இத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பு சாத்தியமில்லை என்றபோதிலும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை உருவாக்குவதே ஒரு அரசின் மைய இலக்காக இருக்க வேண்டும் என்பதை வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கும்போது கவனத்தில்கொள்வது அவசியமாகிறது. ஒரு நாளைக்கு பண்ணிரெண்டு மணிநேரம் அலுவலகத்தில் கழித்துவிட்டு நெரிசல் மிகுந்த பேருந்தில், மின்சார தொடர் வண்டியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பயணம் செய்து தீப்பெட்டி போன்ற கட்டங்களில் அடைவதுதான் வாழ்க்கையா? இந்தியாவில் பிழைத்தல்தான் இருக்கிறதேயொழிய வாழ்தல் இல்லை.

- எம்.ஏ. முகம்மது ரியாஸ்
riyas.ma@hindutamil.co.in


வீட்டிலிருந்தே பணிகரோனா தொற்றுபொருளாதாரம்நோய்ப் பரவல்வேலைவாய்ப்புபோக்குவரத்து நெரிசல்காற்று மாசுWork from home

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author