Published : 26 Jun 2020 09:00 AM
Last Updated : 26 Jun 2020 09:00 AM

ஜூன் 24: மங்கலச் சொற்களின் நயாகரா! - கவியரசர் கண்ணதாசன் 93-ம் பிறந்த நாள்

‘நல்லதொரு குடும்பம்' படத்தில் வாணிஸ்ரீ - சிவாஜி கணேசன்

காவிரிமைந்தன்

ஏதோ ஒரு கண்ணதாசனின் பாடலில் ஒவ்வொரு மனிதரும் தம்மை இனம் கண்டுகொள்கிறார்கள். சுகம், சோகம் ஆகிய இருபெரும் உணர்வுகளே மனித வாழ்வை அதிகமும் ஆக்கிரமித்திருக்கின்றன. இவை இரண்டுக்கும் கண்ணதாசன் வரைந்தளித்த வார்த்தைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்.

பாமரனையும் பைந்தமிழை முணுமுணுக்கச் செய்த ‘பா’மைந்தன் நம் கவியரசர்! ‘மாட்டுவண்டி செல்லாத ஊருக்கும்கூட கண்ணதாசனின் பாட்டுவண்டி செல்லும்’ என்று சொல்வார்கள்! அதுதான் அவரது திரைத்தமிழின் வெற்றி! அவரது கவித்துவப் பெருங்கடலின் பன்முகங்களில் இங்கே நாம் காணவிருப்பது, ‘மங்கலச்சொற்களை கண்ணதாசன் எப்படி ஒரு நயாகரா அருவியைப் போல தன் இறுதிக்காலம் வரை பொழிந்து தீர்த்தார்’ என்ற பார்வையின் சில துளிகள்…

திருமணமும் இருமணமும்

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ இது ‘பச்சை விளக்கு’ என்னும் படத்துக்காக அவர் எழுதிய பாடல். ஒளிமயமான எதிர்காலம் என்ற நம்பிக்கை தரும் வாசகத்தோடு தொடங்கும் பாடலில் ‘நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்... குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக...’ என மங்கலகரமான சொற்களை மஞ்சள் குங்குமத்தோடு சந்தன மணம் கலந்து தந்திருக்கிறார். பாரத தேசத்தில் மத நல்லிணக்கம் எப்படி விளங்குகிறது என்பதைப் பறைசாற்றிபடி, அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் இப்பாடலின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தெய்வீகம் ஒளிர்வதைக் காண முடியும்.

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் ஒரு திருமணப் பத்திரிகையையே பாடலாக்கிய புதுமையை ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ பாடலில் செய்தார். திருமணமாகவிருக்கும் தங்கைக்குப் பாரம்பரியப் பண்பாட்டின் பண்பட்ட மங்களச் சொற்களால் நாயகன் வாழ்த்துப் பா பாடும் பாடல். பாடல்தானே என்று எண்ண முடியாமல் ஒட்டுமொத்தத் திருமணக் காட்சியையும் மங்கலம்சூழ நம் கண்முன்னால் வரிகளால் காட்சியைப் படைத்துக் காட்டிவிட்டார் கவிஞர்.

மற்றோர் அற்புதமான ‘மணக்கோல’த்தை, ஆர்.கோவர்த்தன் இசையமைப்பில் ‘பூவும் பொட்டும்’ திரைப்படத்தில் உருவாக்கியிருக்கிறார். ‘நாதஸ்வர ஓசையிலே...’ எனத் தொடங்கும் பல்லவியில் ஒரு மங்கல நாதம் ஒலிக்கிறதல்லவா? இருமனங்கள் இணையும்போது சொல்லும் இன்ப மந்திரங்கள்.. வாழ்வில் காணும் மணக்கோலம் எனும் மகிழ்வூஞ்சலில் ஆடும்போது தோன்றும் நாதலயங்கள்! இவற்றைத்தான் இசையமைப்பாளரும் கவிஞரும் இங்கே படம்பிடித்துத் தந்திருக்கிறார்கள்! டி.எம்.செளந்தரராஜன் - பி.சுசீலா இணை பாடியுள்ள தேனருவிப் பாடல்களில் இதுவும் ஒன்றாக மாறிப்போனதற்கு இசையையும் குரலையும் விஞ்சி நிற்கும் மங்கல வரிகள் அல்லவா காரணம்!

‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் சிவாஜி, கே .ஆர்.விஜயா. முத்துரா மன்

திரையிலோ ஏவி.எம். ராஜனுடன் கதாநாயகி பாரதி இணைந்து தோன்றும் ஒரு கறுப்பு வெள்ளைக் காவியம் நடந்தேறியிருக்கிறது! பாடலின் இடையிடையே புல்லாங்குழல் தன் பங்குக்கு ஒரு தேவராகம் இசைக்கிறது! இப்பாடலில், இந்த வரிகள் அருமை என்று தனியே பிரித்துச் சொல்வது எளிதல்ல. மானிட வாழ்வில் திருமணம் எனும் பண்பாட்டு ஏற்பாட்டின் பெருமையைப் பறைசாற்ற, வார்த்தைகளின் தெய்வீக நாட்டியத்தை அல்லவா கவியரசரின் பேனா நடத்திக் காட்டியிருக்கிறது!

‘கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில் மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும் ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும் தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள்’

என்ற இப்பாடலின் முத்தாய்ப்பான வரிகளும் நாகஸ்வரம் எனும் மங்களக் கருவியின் இசை, வரிகளை ஆரத்தழும்படி இசையமைப்பாளர் தன் திறமையைக் காட்டியிருக்கும் இடங்கள், தமிழர் வாழ்வில் ஆழத் தடம் பதித்துவிட்டன.

காதலின் தெய்வீகம்

காதல் மழையில் தெய்வீக மணத்தை வீசச்செய்யும் வரிகளை, ‘சத்யம்’ (1976) படத்துக்காக எழுதிய ‘கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்’ பாடலில் நுகரமுடியும்.

‘ரோஜாவின் ராஜா’ படத்தில் டி.எம்.எஸ். - பி.சுசீலா இணை பாடிய பாடலுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணி உண்மைக் காதலர்களோ என எண்ணும் நடிப்பைத் தர, 'அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்' என்ற அந்தப் பாடலில் மங்கல வார்த்தைகளை மழைபோல் பொழிந்திருக்கிறார் கவிஞர். இலக்கியத் தமிழையும் திரைத் தமிழாக்கித் தந்து கல்யாணத் தமிழ்ப் பாடல் பாடுகின்றார்! எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடலாய் அது இன்னும் காதலின் தெய்வீகத்தை நம் காதுகளை வருடிச் சொல்கிறது.

தான்சூடி மலர்தந்த ஆண்டாளிடம் அழகான மலர்மாலை நாம்வாங்குவோம் தேனாட்சி தான்செய்யும் மீனாட்சிசாட்சி திருவீதி வலம்வந்து ஒன்றாகுவோம்

‘சத்யம்’ படத்தில் மஞ்சுளா, கமல்ஹாசன், சிவாஜி கணேசன், தேவிகா

என, ஆன்மிகத்தின் அடிநாதம் கவியரசரின் மனத்தில் எப்போதும் அலங்காரம் செய்ததால் தேன்சிந்தும் காதல் பாடலிலும் தெய்வத்திரு ஆண்டாள் வருகிறாள் பாருங்கள். காதலிலே தெய்வீகம் என்பது

கண்ணதாசன் பாணி என்பதை ‘நல்லதொரு குடும்பம்' படத்துக்காக எழுதிய ‘சிந்து நதிக்கரையோரம்...’ பாடலின் வரிகளில் நிரூபிக்கிறார்.

சிந்துநதிக் கரையோரம்... அந்தி நேரம்...

எந்தன் தேவி ஆடினாள்...

தமிழ் கீதம் பாடினாள்...

என்னைப் பூவைப்போலச் சூடினாள்!

என ராகதேவன் தந்த இசையில் இன்பத்தின் லாவணியைப் பாடலில் காட்சியிலும் பார்க்கலாம், கேட்கலாம்.

‘வைரநெஞ்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தமிழ்ப் பாடும் சந்தனக்காற்று தேரினில் வந்தது கண்ணே’ பாடலிலோ வரிகள், இசை, நடிப்பு என மூன்று கடல்களும் சங்கமிக்கும் அற்புதம் நிகழ்ந்துவிட்டதைப் பார்க்கலாம். பலர் கவிதை எழுதுகிறார்கள்; சிலர் கவிதையாய் வாழ்கிறார்கள். வாழ்வையே கவிதையாக்கியதில் கவியரசர் கண்ணதாசன் திரைத்தமிழின் நயாகரா. அவரது திரையிசை அருவியை ஆயிரம் கட்டுரைகள் எழுதினாலும் அடக்கமுடியாது. எனினும், இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியை அடுத்தவாரமும் அசைபோடக் காத்திருங்கள்.

தொடர்புக்கு: kkts1991@gmail.com

கட்டுரையாளர், கவிஞர், நிறுவனர் - பொதுச்செயலாளர்

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x