Published : 24 Jun 2020 09:01 AM
Last Updated : 24 Jun 2020 09:01 AM

மாய உலகம்: உங்கள் தமிழில் தமிழ் வாழ்கிறதா?

மருதன்

தமிழ் வளர நான் என்ன செய்ய வேண்டும் என்று பலரும் என்னிடம் மிகுந்த ஆவலோடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் அளிக்கும் விடை இதுதான். நீங்கள் பேசும்போது உங்கள் நாவிலும் எழுதும்போது உங்கள் கரத்திலும் தமிழ் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அது போதும். தமிழ் செழிப்பாக வளரும் என்கிறார் மறைமலையடிகள்.

இதைக் கேட்டதும் அவ்வளவுதானா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைத்தானே நான் இவ்வளவு காலம் செய்துகொண்டிருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கலாம். தமிழராய் பிறந்துவிட்ட ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவார்கள், எழுதுவார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால், உங்கள் தமிழ் முழுமையான தமிழ், அதாவது தனித்தமிழ் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? நான் இப்படிக் கேட்டதும் ஒருவர் ஆமாம் என்று தலை அசைத்தார். “எனக்கு மொழிப் பற்று ஜாஸ்தி. என் தமிழை நான் இதயத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறேன்?’’ என்றார் அவர். நான் அவரிடம் சொன்னேன், “அப்படியானால் உங்கள் இதயத்தைப் பழுது பார்க்க வேண்டியிருக்கிறது.’’

விளக்குகிறேன். “தாகம், ஒரு கிளாஸ் வாட்டர் கிடைக்குமா?’’ இந்த வரியை உங்களிடம் கொடுத்து தமிழில் மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐந்து சொற்களில் இரண்டு தமிழல்ல, ஆங்கிலம் என்பதைச் சரியாக இனம் கண்டு, “தாகம், ஒரு கோப்பை நீர் கிடைக்குமா?’’ என்று திருத்திக் கொடுப்பீர்கள்.

ஆங்கிலத்தைக் களைந்ததற்கு என் பாராட்டுகள். ஆனால், உங்கள் தமிழ் தனித் தமிழல்ல என்பதை நீங்கள் உணர்வீர்களா? எவர் ஒருவரின் நாவில் தமிழ் அமர்ந்திருக்கிறதோ அவருக்குத் ‘தாகம்’ ஏற்படாது. ‘நா வறட்சியே’ ஏற்படும். எந்தத் தமிழர் வீட்டிலும் கப்பில் இருந்து உருவான ‘கோப்பை’ இருக்காது. குவளையே இருக்கும்.

ஆங்கிலத்தைக் களைந்துவிட்டால் தமிழ் தமிழாகிவிடாது. ஆங்கிலத்துக்கு இணையாக அல்லது ஆங்கிலத்தைவிடவும் அதிகமாகக் கலந்திருக்கும் வடமொழியையும் (சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற வட இந்திய மொழிகள்) இனம் கண்டு நீக்கியாக வேண்டும். ஒன்றிரண்டு சொற்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே அதனால் என்ன பெரிய தீங்கு ஏற்பட்டுவிடும் என்று கேட்பவர்களுக்கு நான் இன்னொரு வினாவைப் பதிலாக அளிக்கிறேன். உங்கள் உடலில் ஒரே ஒரு துளி நஞ்சு சேர்ப்பதை நீங்கள் அனுமதிப்பீர்களா? உங்கள் காற்றில் சிறிதளவு மாசு இருக்குமானால் பரவாயில்லை என்பீர்களா? உங்கள் விழியில் ஒரே ஒரு துளி தூசி விழுந்துவிட்டால், பரவாயில்லை என்று விட்டுவிடுவீர்களா?

நான் மாட்டேன். நான் தமிழன். என் கண்களுக்குச் ‘சூரியனின் பிரகாசம்’ தெரியாது. ‘கதிரவனின் ஒளி’தான் புலப்படும். ‘வானம்’ போல் தமிழ் விரிந்திருக்க, எனக்கு எதற்கு ‘ஆகாயம்‘? இதமாக வருடும் ‘காற்று’ இருக்க எனக்கு எதற்கு வீண் ‘வாயு’? ‘அக்னி’ இருந்தால்தான் ‘ஆகாரம்’ என்றால் அப்படிப்பட்ட ஆகாரம் வேண்டாம் எனக்கு. தமிழ்க் கனல் மூட்டி நெருப்பு உண்டாக்கி என் உணவை நான் சமைத்துக்கொள்வேன்.

‘உத்தியோகம்’ தவிர்ப்பேன், ‘அலுவல்’ போதும். என்ன அவசரம் என்றாலும் ‘டிரெயினில்’ ஏற மாட்டேன். எனக்கான ’தொடர் வண்டி’ வரும்வரை காத்திருப்பேன். உன்னிடம் ‘டிக்கெட்’ இருக்கிறதா என்று கேட்டால் இல்லை, ‘பயணச்சீட்டு’தான் இருக்கிறது என்பேன்.

நான் தமிழின் ‘படைப்பு.’ ‘சிருஷ்டி’ என்றோ ‘சிருட்டி’ என்றோ சொல்லி அதைக் ‘கஷ்டப்படுத்த மாட்டேன்.’ ‘ஹிருதயம்’ என்றோ ‘இதயம்’ என்றோ அல்லாமல் ’நெஞ்சம்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் உடலுக்குள் இளஞ்சாரல் பெய்யத் தொடங்கும். ‘திருஷ்டி’ என்றோ ‘திருட்டி’ என்றோ அச்சுறுத்தாமல் பார்வை என்று சொல்லுங்கள். அந்தப் பார்வையில் கனிவு தவழ்ந்துவரும்.

உங்களால் இயலும் என்றால் நூறு மொழிகள் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், எங்கிருந்தும் எந்த ‘வஸ்துவையும்’ தமிழுக்குள் இழுத்து வந்துவிடாதீர்கள். நமக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் அள்ளியள்ளி வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

பற்றிக்கொள்ள தமிழின் ‘தோள்’ இருக்க, ‘புஜம்’ எதற்கு? தமிழ்ப்பால் உண்டு வளர்ந்த இந்த உடலுக்குச் ‘சரீரம்’ வீணல்லவா? தமிழ் மடியில் படுத்துக்கொண்டு தாலாட்டு கேட்டபடி ‘உறங்குவதை’ விட்டுவிட்டு நமக்குப் புரியாத ‘நித்திரையில்’ சிக்கிக்கொள்வானேன்?

கலப்பால் வரும் ‘சுகமும்’ வேண்டாம், ‘கஷ்டமும்’ வேண்டாம். இன்பமோ துன்பமோ, என் தமிழை நான் தழுவிக்கொள்வேன். எந்தத் ‘திசையில்’ போனால் ‘துரிதமாகப்’ போகமுடியும் என்று ஆராய மாட்டேன். என் பாதையை, என் வேகத்தை என் தமிழ் தீர்மானிக்கும். என் செவிகளைச் ‘சப்தமோ’ ‘சத்தமோ’ அல்ல, தமிழின் ஓசையே நிறைக்கும். தமிழ் ’மணம்’ போதும். வேறு ‘வாசனை’ தேவையில்லை. தமிழ்ச் ‘சுவை’ போதும், பிற ‘ருசி’ வேண்டாம்.

தமிழ் செந்தாமரை மலர். தமிழ் தளும்பி வழியும் கொழுந்தேன். தமிழ் என்னை வாழவைக்கும் இயற்கை. தமிழ் என் உடலில் பாயும் குருதி. தமிழ் என் உயிர். தமிழ் என் எண்ணம். தமிழ் என் எண்ணத்தின் மணம். என் தமிழ் மாசடைவதை, என் தமிழ் திரிக்கப்படுவதை, என் தமிழ் உருகுலைக்கப்படுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.

நீ ‘பரிசுத்தமான’ தமிழை எதிர்பார்க்கிறாயா என்று கேட்டால் இல்லை, ‘தூய்மை’யான தனித் தமிழை என்பேன். அப்படி ஒரு தமிழ் ‘அவசியமா’ என்று கேட்டால் கட்டாயம் என்பது என் பதில். ஏனென்றால் என் தமிழ் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நானும் இருப்பேன். என் தமிழில் கலப்பு இருந்தால் என் எண்ணத்திலும் கலப்பு இருக்கும். என் தமிழில் மாசு இருந்தால் என் உயிர்மூச்சு தடைபடும். என் தமிழ் தடுமாறினால் நான் தடுமாறுவேன். என் தமிழ் வீழ்ந்தால் நான் வீழ்வேன். என் தமிழ் எப்போது தலை நிமிர்ந்து வாழ்கிறதோ அப்போதுதான் என்னாலும் அப்படி வாழமுடியும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x