Last Updated : 23 Jun, 2020 09:28 AM

 

Published : 23 Jun 2020 09:28 AM
Last Updated : 23 Jun 2020 09:28 AM

தோல்வியும் சூப்பர் ஸ்டாராக்கும்!

கரோனா பீதிக்கு மத்தியில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் (34) தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது, கடந்த வாரம் பேசுபொருளானது. ‘எம்.எஸ்.தோனி-அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் மூலம் பாலிவுட் முதல் கிரிக்கெட் ரசிகர்கள்வரை அனைவருடைய மனதிலும் இடம்பிடித்தவர் சுஷாந்த் சிங். ஆனால், அவருடைய பட வாய்ப்புகளை பாலிவுட் மூத்த நடிகர்களும் வாரிசு நடிகர்களும் தட்டிப் பறித்ததாகவும், அதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தக் காரணம் உண்மையென்றால் அது துரதிர்ஷ்டம். பல முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு, அதன்பின் தங்கள் துறையில் ஜொலித்து சூப்பர்ஸ்டாராக வலம்வந்தவர்கள் நம் கண் முன் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் மர்வன் அட்டப்பட்டு சிறந்த எடுத்துக்காட்டு.

‘டக் அவுட்' புகழ்

1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை இலங்கை அணி வென்ற பிறகு, அந்த அணியின் ஒவ்வொரு வீரரும் புகழ் வெளிச்சம் பெறத் தொடங்கினார்கள். அந்தப் புகழ் வெளிச்சத்தில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் அட்டப்பட்டு. ஆனால், இலங்கை அணி உலகக் கோப்பை வென்ற பிறகு, அந்த அணியில் அறிமுகமான ஜெயவர்த்தனே, சங்கக்கார, தில்சன் ஆகியோருடன் சேர்த்து அறியப்பட்டவராகவே அவர் இருக்கிறார். உண்மையில் அட்டப்பட்டு 1990-ம் ஆண்டே இலங்கை அணியில் அறிமுகமானவர்.

கத்துக்குட்டி அணியாக இலங்கை அறியப்பட்டபோதே தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். அந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக சண்டிகரில் விளையாடியதுதான் அவருடைய முதல் போட்டி. அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’ ஆனார். முதல் சர்வதேசப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் ‘டக்’ ஆகும் வீரரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அந்தப் போட்டிக்கு பிறகு 21 மாதங்கள் அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

ஒரு நாள் போட்டியிலும்...

மீண்டும் 1992-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்தபோது அட்டப்பட்டுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டம் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’தான். அந்தப் போட்டியில் 181 ரன் என்ற எளிய இலக்கோடு இலங்கை அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. 133 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று இலங்கை இருந்தபோது, பேட்டிங் செய்ய வந்தார் அட்டப்பட்டு. ஆனால், துரதிர்ஷ்டம் இந்த இன்னிங்ஸிலும் விளையாடியது.

ஒரு ரன் எடுத்த நிலையில் அட்டப்பட்டு அவுட். அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக 16 ரன்களில் இலங்கை தோற்றுப்போனது. இந்தப் போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியிலிருந்து அட்டப்பட்டு விலக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அட்டப்பட்டு, 6 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார். டெஸ்ட் போட்டி மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளும் அவருடைய காலை வாரின.

மர்வன் அட்டப்பட்டு

வெளிச்சம் பிறந்தது

ஆனால், அவர் மனம் தளரவில்லை. மீண்டும் உள்ளூர்ப் போட்டிகளில் கவனம் செலுத்தினார். முதல்தரப் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். 23 மாதங்கள் கழித்து 1994-ம் ஆண்டில் அவர் மீது இலங்கை அணியின் பார்வை பட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு. இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ‘பட்டக் காலிலேயே படும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த முறையும் துரதிர்ஷ்டம் அவரை விடவில்லை. அந்த டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அட்டப்பட்டு ‘டக் அவுட்’. எவ்வளவு நொந்துபோயிருப்பார்?

திறமை கொட்டிக் கிடந்தபோதும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. அணியிலிருந்து நீக்கப்பட்ட அட்டப்பட்டு, மீண்டும் அணிக்குள் வருவதே பெரும்பாடுதான் என்று நினைக்கப்பட்டது. ஆனால், மனம் தளராமல் உள்ளூர்ப் போட்டிகளில் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்ட அட்டப்பட்டு, 37 மாதங்கள் கழித்து 1997-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாய்ப்பைப் பெற்றார்.

நியூசிலாந்துக்கு எதிராக டூனிடின் நகரில் நடந்த போட்டியில் களமிறங்கினார். பதற்றமும் பயமும் கலந்து களமிறங்கிய அட்டப்பட்டு, இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 25, 22 ரன்களை எடுத்தார். அவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் ரணதுங்கா அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கினார். அந்தப் போட்டிக்குப் பிந்தைய 6-வது போட்டியில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். அடுத்த இரு போட்டிகளில் முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.

மறக்கக்கூடாத கதை

அதன்பின்னர் இலங்கை அணியில் டெஸ்ட், ஒரு நாள் என இரு வடிவங்களிலும் அட்டப்பட்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தவிர்க்க முடியாத வீரரானார்; நம்பிக்கை நட்சத்திரமானார். அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டனாக உயர்ந்தார். தொடக்கத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் தோல்விகளையும் அவமானங்களையும் துரதிர்ஷ்டங்களையும் ஒருசேர சந்தித்த அட்டப்பட்டு, இலங்கை அணிக்காக பின்னாளில் 90 டெஸ்ட் போட்டிகள், 268 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி சிறந்த, ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் என்ற பெயருடன் 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.

வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. தடங்கல்கள் வரும்; சஞ்சலங்கள் வரும். ஆனால், அவற்றிலிருந்து ஒவ்வொரு முறையும் அனுபவம் கிடைக்கும். ஏன் சறுக்கினோம் என்ற அனுபவத்தை நேர்மறையாக அணுகி, விடா முயற்சியுடன் களமிறங்கும்போது வெற்றி ஒரு நாள் நம்மை நோக்கிவரும். 1990-97 வரை 8 ஆண்டுகள் அணியில் இடம் கிடைக்காமல் அல்லாடிய மர்வன் அட்டப்பட்டுவின் வாழ்க்கை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய நிஜக் கதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x