Published : 23 Jun 2020 09:18 AM
Last Updated : 23 Jun 2020 09:18 AM

இலக்குகள் எட்டக்கூடியவைதாம்

தொகுப்பு: என். கௌரி

‘இலக்குகள் 2021' என்ற இணையவழி வழிகாட்டல் வகுப்புகளை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் - ஆராய்ச்சிக் கல்லூரி, காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இணைந்து ஆறு நாட்களுக்கு ஒருங்கிணைத்திருந்தன. ஜூன் 15 முதல் 20 வரை நடைபெற்ற இந்த வழிகாட்டல் வகுப்புகளில், ஆசிரியர்கள், மாணவர்கள், 'இந்து தமிழ் திசை' வாசகர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் கலந்துகொண்டார்கள். வழிகாட்டல் வகுப்புகளில் கலந்துகொண்ட பேச்சாளர்களுடைய உரைகளின் சுருக்கமான தொகுப்பு:

பெற்றோர்களுக்கான வீட்டுப்பாடங்கள்

தங்கம் மூர்த்தி, கவிஞர்

பெற்றோர்கள், பிள்ளைகளுக்கிடையில் எப்போதும் இணக்கமான நட்பு இருக்க வேண்டும். பிள்ளைகளிடம் எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர்களும் அவர்களுடைய குதூகலத்தில் பங்கேற்க வேண்டும். குழந்தைகளுக்கு அவர்களைச் சுற்றியிருக்கும் மரங்களின் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தலைவரையாவது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைகளிடம் எப்போதும் நல்ல சொற்களை மட்டுமே பேச வேண்டும்.

அன்றாடம் ஒருமுறையாவது குழந்தைகளைக் கட்டியணைத்து முத்தமிட வேண்டும். எப்போதும் அவர்களின் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும். நினைவாற்றல் சீராக இருக்க, நம் மண்ணில் விளையும் பழங்களை அன்றாடம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பிள்ளை வளர்ப்பும் ஒரு கலைதான். பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும் இந்த வேளையில், இல்லங்களைப் பள்ளிக்கூடங்களாக மாற்ற வேண்டியது பெற்றோர்களின் கடமை.

இணையவழி வகுப்பறைகளின் அவசியம்

பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர்

கல்வி என்பது எப்போதும் தொடர்ந்துகொண்டிருக்க வேண்டிய செயல். இடைவெளிவிட்டால் மாணவர்களுக்குக் கல்வியுடன் தொடர்பு விட்டுபோய்விடும். கோவிட்-19 என்பது ஒரு பேரழிவு. இந்த நிலையில் கல்வியும் பாழாய்ப்போனால், அதன் காரணமாக நாம் இழப்பது மிக அதிகம். நடப்புக் கல்வியாண்டில் முழுக் கல்வியையுமே இணையம் வழியாகத்தான் பெரும்பாலும் நடத்த வேண்டியிருக்கும். இந்தச் சூழலில், மாணவர்கள்தாம் பள்ளிக்கு வரமுடியாது. ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரலாம். அரசு, போர்க்கால அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் இணையவசதியை மேம்படுத்த வேண்டும்.

இணையவசதி, டேப்லட், மடிக்கணினி இல்லாத குழந்தைகளுக்கு மாநில அரசும், தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அந்த வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். ஒரு நாளில், ஆரம்பப் பள்ளி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரமும், உயர்கல்வி, கல்லூரி மாணவர்களுக்கு நான்கு மணி நேரமும் இணையவழி வகுப்புகளைத் தொடரலாம். இணையவழிக் கல்வியை நாம் இனியும் மறுக்க முடியாது. ஓராண்டுக்குக் கல்வி கிடையாது என்று சொல்வது எளிது. ஆனால், அதுதான் தீர்வா என்று யோசிக்க வேண்டும்.

நகைச்சுவையே நல்ல சுவை

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், பட்டிமன்ற நடுவர்

சுவைகளில் சிறந்தது நகைச்சுவைதான். அறுசுவை நாவுக்கு மட்டும்தான். செவிச் சுவைகளில் இனியது நகைச்சுவை. இலக்கண நூலான தொல்காப்பியம், எட்டுச் சுவைகளில் நகைச்சுவையையே முதல் சுவையாக வகைப்படுத்தியுள்ளது. சுவைகளில் இனிப்பு நம்மை ஈர்ப்பதுபோல், நகைச்சுவை நம்மை எப்போதும் ஈர்க்கிறது. பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் சொல்வதுதான் நகைச்சுவை. மனத்தை மென்மைப்படுத்த நகைச்சுவையால் மட்டுமே முடியும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, நல்ல நகைச்சுவையைப் பார்த்துச் சிரிப்பதை வழக்கமாக்கிக்கொள்வது சிறந்தது. நகைச்சுவை என்பது உயிர்ச்சுவை. ‘வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும்’ என்பது உண்மை. ஆயுளை அதிகரிக்கும் வலிமை நகைச்சுவைக்கு இருக்கிறது. நகைச்சுவையை விரும்புபவர்கள் அனைவரும் அவ்வை தி.க.சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற நூலைப் படிக்க வேண்டும். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நகைச்சுவை எப்போதும் கேட்பதற்கு மகிழ்வாக இருக்கும். நாம் கேட்கும்போதும், அடுத்தவர்களுக்குச் சொல்லும்போதும் நகைச்சுவை மகிழ்வைத் தர வேண்டும்.

பொன்னான பொறியியல் வாய்ப்புகள்

முனைவர் பி. மன்னர் ஜவஹர், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

முன்னர் ‘மெக்கானிக்கல்’, ‘சிவில்’, ‘எலக்ட்ரிக்கல்’ ஆகிய மூன்று படிப்புகள்தாம் பொறியியலின் அடிப்படைப் படிப்புகளாக இருந்தன. ஆனால், இப்போது பல பொறியியல் பிரிவுகளில் படிக்கும் வாய்ப்புகள், இன்றைய மாணவர்களுக்குக் கிடைக்கின்றன. வளர்ந்த நாடுகளில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தொழில் நிறுவனங்களில் இணைய விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் சிறந்த மூளையைக் கொண்ட மாணவர்கள் இருக்கிறார்கள். பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, ஆசிரியர்களுடன் மாணவர்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எதிர்பார்த்த பொறியியல் படிப்பு, கல்லூரி கிடைக்கவில்லை என்றால், மனம்தளரக் கூடாது. கிடைத்த படிப்பில், கல்லூரியில் கவனத்துடன் படித்துச் சிறந்து விளங்க முயல வேண்டும். வரவிருக்கும் ஆண்டுகளில், சோலார் இன்ஜினீயரிங் (Solar Engineering) துறையில் அதிக வேலைவாய்ப்பு உருவாவதற்கான சூழல் உள்ளது.

உறவுகள் மேம்பட...

முனைவர் சொ.சுப்பையா, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

உறவுகளைப் பேணுவதில் உணர்வுகளுக்கு அடிப்படைப் பங்குண்டு. உறவுகளில் மூன்று வகை உண்டு. நமக்கும் நமக்கும் உள்ள உறவு, அதாவது தன்னுறவு முதல் வகை. நமக்கும் குடும்பம், சமூகத்துக்கும் உள்ள உறவு, இரண்டாம் வகை. நமக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள உறவு மூன்றாம் வகை. மனத்தைச் சரியாக வைத்துக்கொண்டால், மற்றவர்களுக்கும் நமக்கும் இடையே உறவு சரியாக இருக்கும். மனம் எப்போதும் அன்பையும் மகிழ்ச்சியையும் பெற்றிருக்க வேண்டும். உறவுகளைப் பேணுவதற்குப் பணம் தேவையில்லை.

மனம்தான் தேவை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து உதவி வாழ்வதுதான் வாழ்க்கை. அடுத்தவர்களை மாற்ற நினைப்பதைவிட, நம்மை நாமே மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்வது சிறந்தது. சுயத்தை இழக்காமல் வளைந்துகொடுக்கும் நாணல்போல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எப்போதும் மன்னிக்கும் மனம் இருக்க வேண்டும். மனத்தைச் சரியாக வைத்துகொண்டால், எல்லாம் சரியாக இருக்கும்.

வாழ வழி - வேற வழி

வி. நந்தகுமார், ஐ.ஆர்.எஸ்., கூடுதல் ஆணையர், மத்திய வருமான வரித்துறை

வாழ்க்கையில் இரண்டு அணுகுமுறைகள் எப்போதும் இருக்க வேண்டும். எந்தத் திசையில் நாம் சென்றாலும் நம் இலக்கைச் சென்று அடைய முடியுமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நாம் செல்லும் திசை, இலக்கு இரண்டும் மிகவும் முக்கியம். இந்தப் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் தோல்விகள்கூட நல்ல அறிகுறிதான். ஏனென்றால், நமக்குக் கிடைக்கும் தோல்வி அனுபவங்கள்தாம், நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும்.

வாழ்க்கையில் வாழ்வதற்கு எவ்வளவு வழிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான தேடலைத் தொடங்கினால், நம்மால் சிறந்த இலக்கை நிச்சயமாக அடைய முடியும். என்னுடைய வாழ்க்கைக்கு நான்தான் பொறுப்பு என்று பொறுப்பேற்றுக்கொள்வது சிறப்பான விஷயம். அப்போது நீங்கள் செல்லவேண்டிய திசை, இலக்கை உங்களால் எளிதாகக் கண்டறிய முடியும். வாழ்க்கையில் நம்முடைய ஆளுமையை உருவாக்க வயது, பின்னணியெல்லாம் தேவையில்லை. தனிநபர்களின் தேடலே ஆளுமையை உருவாக்குவதற்கான அடிப்படை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x