Published : 22 Jun 2020 09:37 am

Updated : 22 Jun 2020 09:37 am

 

Published : 22 Jun 2020 09:37 AM
Last Updated : 22 Jun 2020 09:37 AM

கரோனாவும் கடந்து போகும்

corona-virus

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
satheeshkrishnamurthy@gmail.com

கரோனா ஊரடங்கு எவ்வளவு காலம் என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வியாக இன்று உள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு போட்டாகிவிட்டது. சீனாக்காரன் வௌவாலில் இருந்த கோவிட்டை சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் போல் உலகெங்கும் பார்சல் செய்து டெலிவரி செய்துவிட்டான். காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கிறது. எவ்வளவுதான் சோப்பு, சானிடைசர் போட்டாலும் கைவிடமாட்டேன் என்று கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறது!


டிவியை போட்டால் கோவிட். பேப்பரை பிரித்தால் கரோனா. வீட்டில் காலிங் பெல் அடித்தால் கூட ’கரோனாவா பாரு’ என்று கேட்கத் தோன்றுகிறது. இத்தனை லூட்டியில் அக்னி நட்சத்திர வெயில் கூட பெரியதாக தெரியவில்லை. எப்படி தெரியும், வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளேயே வெட்டியாய் கிடந்ததால் வெயில் எப்படியிருக்கும் என்பதே மறந்துவிட்டது. எங்கு திரும்பினாலும் மாஸ்க் சகிதம் மக்கள். முன்பெல்லாம் முகமூடி போட்டவர்களைப் பார்த்து குரைத்த நாய்கள், இப்பொதெல்லாம் மாஸ்க் இல்லாமல் போனால்தான் குரைக்கிறதாம்.

இந்த லட்சணத்தில் என் நண்பர் எனக்கு ஃபோன் செய்து புலம்பித் தள்ளினார். காரில் சென்றவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த என்னை பார்த்து சிரித்தாராம், பதிலுக்கு நான் சிரிக்கவில்லையாம். பதிலுக்கு நானும் சிரித்தேன். மாஸ்க் போட்டிருந்ததால் நான் சிரித்தது அவருக்கு தெரியவில்லை. நீ முன்பு மாதிரி இல்லை, பழசை மறந்துவிட்டாய் அது இது என்று பேட்டரி தீரும் வரை பேசித் தள்ளிவிட்டார். இந்த பாழாய் போன கரோனாவால் அவமானப்படவும் வேண்டியிருக்கிறது. அன்று கடைக்கு போனவன் சாமானோடு என் மானத்தையும் வாங்கிக்கட்டிக்கொண்டேன். கடை வாசலில் நின்றிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அவர் கையில் பன்னீர் சொம்பு போல் இருந்தது.

வரவேற்கிறார் என்று தலையை குனிந்தேன். ’இது தலைல தெளிக்கிற பன்னீர் இல்ல, கைய நீட்டுங்க’என்றார். சானிடைசராம். நானாவது பரவாயில்லை, என் பின்னால் வந்தவர் கையில் தெளித்த சானிடைசரை கோயில் தீர்த்தம் போல் பயபக்தியுடன் உறிஞ்சி தொண்டை எரிச்சலை தாங்கிக்கொண்டு தலையில் வேறு தெளித்துக்கொண்டார்.

இந்த லட்சணத்தில் சோஷியல் டிஸ்டன்சிங் செய் என்று பிரச்சாரம் வேறு. ஏதோ பழைய காலம் போல் ஊரே ஒன்று கூடி சந்தோஷங்களை பரிமாறி கொள்வது போலவும் கூட்டுக் குடும்பங்கள் கொஞ்சிக் குலாவி குதூகலமாய் கும்மாளமடிப்பது போலவும் நினைப்பு. கணவன் மனைவி கூட சொந்த வீட்டில் சோஷியல் டிஸ்டன்சிங் செய்து வாழும் இக்காலத்தில் தள்ளி நில் என்பவர்களை பார்த்து கரோனாவே கபகபவென்று சிரிக்கும்.

தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒன்றரை வருடம் ஆகலாமாம். இதற்கு மருந்தே கிடையாது என்கிறது இன்னொரு கூட்டம். பெரிய மனது பண்ணி கரோனாவே காலி செய்துகொண்டு போனால்தான் உண்டு போலிருக்கிறது. வேறு வழி ஏதும் தெரியவில்லை. ஆனால், கரோனா கவலைகளிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்றாலும், விரைவிலேயே எல்லாவற்றையும் நாம் மறந்து விடுவோம் என்று நம்புகிறேன். மறப்பது நமக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லையே. உதாரணத்துக்கு எவ்வளவுதான் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி தலையில் மிளகாய் அரைத்தாலும் அதை மறந்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ‘சாரதா தேவியே’ என்று அரைவேக்காடு கம்பெனிகளில் பணத்தை நாம் தொலைப்பதில்லையா.

இந்தப் புண்ணிய பூமியை கூறு போட்டு அரசியல்வாதிகள் விற்று கூத்தடித்தாலும் அதை அடுத்த தேர்தலில் மறந்து இன்னார் வந்தால் தெருவில் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்று ஓட்டு போடுவதில்லையா. அது போல் கரோனாவையும் மறக்க முயற்சிப்போம். முயன்றால் முடியாதது இல்லையாமே. ‘மறதி நம் தேசிய வியாதி’ என்று அழகாய் சொல்லியிருக்கிறாரே நம் ஸ்ரீரங்கத்து ரெங்கராஜன் அலைஸ் சுஜாதா!

இத்தனை களோபர குழப்ப கரோனாவை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? பேஷாய் முடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள். மனித மூளை மறந்தே தீருமாம். எப்போதுமே முக்கிய விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதற்காக மற்றதை வேண்டுமென்றே மறந்துவிடுமாம் நம் மூளை. நினைவுகளை மறப்பது தற்செயலாய் நடக்கும் ஒன்றில்லையாம். அது மனித மூளை முழு நேரமாக செயலாற்றி செய்யும் விஷயமாம். `நினைவு என்பதே மறக்கத்தான்’ என்கிறார் கனடா நாட்டு காக்னிடிவ் உளவியலாளர் `ஆலிவர் ஹார்ட்’. நினைவுகளின் நியூரோபயாலஜியை ஆராய்ச்சி செய்யும் இவர் மனித மூளையில் நினைவுகள் சரியாய் வேலை செய்ய மறதி அவசியம் என்கிறார். நம் வயிற்றில் பால் வார்க்கும் இந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாய் இருக்கட்டும்!

மறப்பது பெரிய விஷயமுமல்ல, பாவமுமல்ல. தினப்படி வாழ்வில் பல விஷயங்களை மறக்கிறோம். இதற்குக் காரணம் நம் கவனமும் ஃபோகஸும் உலகை புரிந்துகொள்ள மட்டுமே முனைகிறது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ள அல்ல. செயல்தானே முக்கியம் தவிர. நினைவுகள் முக்கியமல்ல. நிகழ்காலத்தை மட்டுமே நினைக்கிறோம். அதனால்தான் எதையோ எடுக்க ரூமுக்குள் சென்று, எதை எடுக்க வந்தோம் என்பதையே மறக்கிறோம். அறைக்குள் செல்வது என்ற செய்கையை சாதிக்க மனதில் நினைத் தோமே ஒழிய அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை!

சரி இந்த மறதியெல்லாம் வாழ்க்கைக்கு ஓகே. பணத்துக்கு என்ன வழி, கரோனாவால் மொத்த பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு எல்லாம் நெருக்கடியில் இருக்கிறதே என்ன செய்வது?இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. சொல்கிறேன் கேளுங்கள். கரோனா காலத்தில் தொழில் பாதித்திருந்தாலும் இனியும் உங்களுக்கு உங்கள் தொழில் பற்றிய கவலை தேவையில்லை. உங்கள் வாடிக்கையாளர்கள் நிச்சயம் மீண்டு வருவார்கள். உங்களிடம் மீண்டும் வருவார்கள். நான் ஆருடம் கூறவில்லை. அறிந்ததை கூறுகிறேன். ‘கரோனா’ என்ற பெயரில் மெக்சிகோ நாட்டு பியர் ஒன்று உள்ளது. அது பிரசித்திப்பெற்றது. பல வருடங்களாய் உலகமெங்கும் சக்கை போடு போடும் பிராண்ட்.

ஆண்டுக்கு பல மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி தரும் இந்த கரோனா பியருக்கு வந்தது சனி அதன் பெயர் ரூபத்திலேயே. கரோனா பயத்தில் இனி எவன் கரோனா பியர் குடிப்பான் என்று தானே நினைக்கிறீர்கள். இந்த கரோனா காலத்தில் உலகம் மொத்தமும் இந்த பியருக்கு சோஷியல் டிஸ்டன்சிங் செய்திருக்கும் என்று தான் நானும் நினைத்தேன். இல்லை. முன்பை விட இப்பொழுது தான் கரோனா பியர் விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்கிறதாம்.

எந்த தொண்டைக் குழியை கரோனா தாக்கும் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினார்களோ அந்த தொண்டைக்கு கரோனா பியர் ஆராதனையே நடக்கிறதாம். ’ஒய் கரோனா ஃபியர், வென் கரோனா பியர் இஸ் ஹியர்’ என்று கூறாத குறைதான் போங்கள். சீனாவின் கரோனா மெக்சிகோ கரோனாவிடம் தோற்றுவிட்டது. ஸோ, கவலை வேண்டாம். இந்த கரோனாவும் கடந்து போகும். உங்கள் தொழிலும் நிமிர்ந்து நிற்கும். நம்பிக்கையுடன் இருங்கள். எல்லாம் மாறும். சியர்ஸ்!


கரோனாகொரோனாஊரடங்குமுழு ஊரடங்குதடுப்பூசிசானிடைசர்கோவிட்மாஸ்க்சீனாCorona vrusCoronaCovid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author