Published : 08 Sep 2015 11:38 AM
Last Updated : 08 Sep 2015 11:38 AM

ஹோட்டல் மேலாண்மை எங்கு படிக்கலாம்?

நான் ஹோட்டல் மேலாண்மை மற்றும் உபசரிப்பு எனும் பாடத்தில் பி.எஸ்சி பட்டப்படிப்பைப் படிக்கலாம் என உள்ளேன். இந்தப் படிப்புக்கான வாய்ப்புகளைப் பற்றி தெரிவிக்கவும். நான் இப்போது சேர்ந்துள்ள நிறுவனம் சரியானதா என்று நான் எப்படித் தெரிந்துகொள்வது?

- தசரதி, சிவகங்கை.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம்.

தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் விளைவாக உணவகங்களும் தங்கும் விடுதிகளும் இன்று பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களாகவும், ரிசார்ட்டுகள் (Resort) என்று அழைக்கப்படும் சுற்றுலா ஓய்வகங்களாகவும் அவை வளர்ந்து நிற்கின்றன. மேலும் பயண ஏற்பாடு அலுவலகங்கள் (Travel and Tour Operators) மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை (Event Management) நிறுவனங்களும் இத்துறையில் நடந்துள்ள வளர்ச்சியின் அடையாளங்களே.

B.Sc., Hospitality and Hotel Management எனும் படிப்பைப் படித்தவர்களுக்கு இந்தத் துறை பல வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. நிர்வாகம், உணவுத் தயாரிப்பு என்ற இரண்டு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. நிர்வாகப் பிரிவில் வரவேற்பு மற்றும் உபசரிப்பு (Front Office Executive), உணவக உதவி மேலாளர் (Assistant Restaurant Manager), தள மேலாளர் (Floor Manager), மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) என்பது போன்ற பணி வாய்ப்புகளும், உணவு தயாரிப்புப் பிரிவில் உதவி சமையலர் (Assistant Cooks), சமையலர் (Cook), குளிர்பானத் தயாரிப்பு (Beverages), தலைமைச் சமையலர் (Chef) என்று பல்வேறு பணிவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.

உபசரிப்புத் துறையைப் பொறுத்தவரை பயண ஏற்பாடு அலுவலகங்கள் (Travel and Tour Operators), விமானப் பயணச் சீட்டு வழங்குபவர்கள் (Air Ticketing), விமானப் பயண உதவியாளர்கள் (Flight attendant services), விமானப் பணிப்பெண் (Air Hostess) மற்றும் நிகழ்வு மேலாண்மை (Event Management), எனப் பல சிறந்த பணி வாய்ப்புகள் உள்ளன. மேற்குறிப்பிட்ட உணவகப் பிரிவைத் தேர்ந்தெடுப்பவர்கள் திறன் வாய்ந்தவர்களாக (Skilled) இருத்தல் அவசியம். உபசரிப்புத் துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் குறிப்பாக ஆங்கில அறிவு மற்றும் கணினி அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

போதிய பணி அனுபவம் பெற்ற பின்னர் ஆங்கில மொழி அறிவுடன், அயல்நாட்டு மொழியறிவையும் வளர்த்து கொண்டால் வெளிநாடுகளிலும் சிறந்த பணிவாய்ப்புகளைப் பெறலாம். உணவக மற்றும் உபசரிப்பு மேலாண்மை தொடர்பாகப் பயிற்றுவிக்கப்படும் சிறந்த இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு All India Hotel Management Joint Enterance Examination என்ற தேர்வை மத்தியச் சுற்றுலா அமைச்சகம் வருடம் தோறும் நடத்திவருகிறது.

இந்தத் தேர்வை எழுதுவதற்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட பிளஸ் 2 தேர்ச்சி அவசியம். மேலும் விளக்கமான விவரங்களை www.nchm.nic.in எனும் இணையதள முகவரியில் அறியலாம்.

தமிழகத்தில் சென்னையில் உள்ள தரமணியிலும் (தொடர்புக்கு: >www.ihmchennai.org ) திருச்சியில் துவாக்குடியிலும் (தொடர்புக்கு: >www.sihmct.org) இந்தத் துறையைச் சார்ந்த அரசு பயிற்சி நிலையங்கள் உள்ளன.

இந்தப் படிப்புக்கான கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அதில் முன்பு படித்தவர்களிடம் பேசுவதும் அதில் படித்தவர்களுக்கு எத்தனை சதவீதம் பேருக்குக் கல்லூரி வளாக வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்பன போன்ற விவரங்களை அறிவதும் உதவியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x