Published : 17 Jun 2020 09:13 AM
Last Updated : 17 Jun 2020 09:13 AM

கதை: மந்திரத் தடி

ஓவியம்: கிரிஜா

முனிவர் ஒருவர் காட்டில் குடில் அமைத்து, தவம் செய்துகொண்டிருக்கும் தகவல் காடு முழுவதும் பரவியது. காட்டுக்குள் மனிதர் வருவது ஆபத்தான அறிகுறி என்று நினைத்த விலங்குகள் கலக்கம் அடைந்தன. தங்கள் வேலைகளை மறந்து, முனிவர் பற்றியே பேசிக்கொண்டிருந்தன.

சிங்கராஜாவிடம் இந்த விஷயம் பற்றிப் பேசுவதற்காக அனைத்து காட்டுவாசிகளையும் அழைத்துக்கொண்டு சென்றது கரடி.

”சிங்கராஜா, அந்த மனிதர் பார்ப்பதற்குச் சாதுவாகத்தான் தெரிகிறார். இருந்தாலும் ஒரு மனிதர் காட்டுக்குள் நுழைந்திருப்பது நல்லதாகத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் சொன்னது கரடி.

“மனிதர்களால் நமக்கு எப்போதுமே ஆபத்துதான். காட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்” என்று கோபத்துடன் கூறியது யானை.

”நாம் நாட்டுக்குள் செல்கிறோமா? அவர்கள் மட்டும் நம் அனுமதி இல்லாமல் எப்படிக் காட்டுக்குள் நுழையலாம்?” என்று கேட்டது மான்.

”உங்கள் அச்சம் புரிகிறது. நாம் கொஞ்சம் நிதானமாகச் செயல்பட வேண்டும். முதலில் அந்த மனிதரிடம் பேசிப் பார்ப்போம். என்னுடன் வாருங்கள்’ என்று உடனே செயலில் இறங்கியது சிங்கராஜா.

முனிவரின் இருப்பிடத்தை அடைந்தன. சத்தம் கேட்டுக் கண்விழித்தார் முனிவர்.

“அடடே! காட்டுக் குழந்தைகள் எல்லாம் ஒன்றாக என்னைத் தேடி வந்த காரணம் என்ன?” என்று புன்னகையோடு கேட்டார் முனிவர்.

“முனிவரே, இது வன உயிரினங்கள் வசிக்கும் பகுதி. இங்கே நாங்கள் நிம்மதியாக இதுவரை வசித்து வந்தோம். ஒரு மனிதரைக் கண்டவுடன் எல்லோருக்கும் அச்சம் வந்துவிட்டது. தாங்கள் காட்டை விட்டு வெளியேறினால் நாங்கள் நிம்மதி அடைவோம்” என்று பக்குவமாகக் கூறியது சிங்கராஜா.

”ஓ... இதுதான் விஷயமா? நான் ஆசைகளைத் துறந்தவன். துறவியாகவே இங்கே வந்திருக்கிறேன். என்னால் சிறு தீங்கும் உங்களுக்கு ஏற்படாது. பயப்படாதீர்கள்” என்று சிரித்தார் முனிவர்.

உடனே காட்டை விட்டு வெளியேறுங்கள் என்று விலங்குகள் கோஷமிட்டன.

“முனிவரே, நீங்கள் நல்லவராக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு மனிதர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை எல்லாம் கிடையாது. நீங்கள் கிளம்புவது ஒன்றே எங்களுக்கு நிம்மதியைத் தரும்” என்றது சிங்கராஜா.

உடனே முனிவருக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் போக முடியாது என்றால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“ஒரு சிங்கத்திடம் பேசுகிறீர்கள் என்பதை உங்கள் கவனதுக்குக் கொண்டு வருகிறேன்” என்றது சிங்கராஜா.

”என்னிடம் மந்திரத் தடி ஒன்றுள்ளது. யாராவது என்னை நெருங்கினால் அவர்களை இந்தத் தடி மூலம் சிலையாக மாற்றிவிடுவேன். தைரியம் இருந்தால் என்னிடம் நெருங்கி வாருங்கள். என்னைத் தொந்தரவு செய்யாவிட்டால், அமைதியாக என் தவத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவேன்” என்றார் முனிவர்.

சிங்கராஜா உட்பட அனைத்து விலங்குகளும் அதிர்ச்சியடைந்தன. பிறகு மெதுவாகக் கலைந்து சென்றன. மனிதரால் காட்டுக்கு ஆபத்து என்ற கவலையோடு, இப்போது சிலையாக்கிவிடுவாரோ என்ற கவலையும் சேர்ந்துகொண்டது.

“குரங்கே, முனிவரைக் கண்காணிக்கும் பொறுப்பை உனக்கு வழங்குகிறேன். சற்று தூரத்திலிருந்து அவருக்குத் தெரியாமல் கண்காணிக்க வேண்டும். அவசரப்பட்டு ஏதாவது செய்து சிலையாகிவிடாதே” என்றது சிங்கராஜா.

குரங்குக்கு முனிவரை நினைத்து பயமாக இருந்தாலும் மற்றவர்களுக்காகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்று முதல் தினமும் முனிவரைக் கவனித்து, அவ்வப்போது சிங்கராஜாவுக்குத் தகவல் கொடுத்துக்கொண்டிருந்தது.

அன்று முனிவர் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். புத்திசாலி குரங்கு வேகமாக அவரது குடிலுக்குச் சென்றது. அங்கிருந்த மந்திரத் தடியைத் தூக்கிக்கொண்டு சிங்கராஜாவிடம் வந்தது.

“சிங்கராஜா, இது முனிவரின் மந்திரத் தடி. அவர் குளிக்கச் சென்றபோது தூக்கிட்டு வந்துட்டேன். இனி அவர் நம்மை சிலையாக்க முடியாது. இப்போதே சென்று அவரைக் காட்டைவிட்டுத் துரத்திவிடுவோம்” என்றது குரங்கு.

“சபாஷ்! அற்புதமான காரியம் செய்தாய்! புலி, யானை எல்லோரும் என்னுடன் வாருங்கள். முனிவரிடம் செல்வோம்” என்ற சிங்கராஜா வேகமாக நடந்தது.

எதிரில் முனிவர் வந்தார். விலங்குகளைக் கண்டதும் நின்றார்.

“முனிவரே, தங்களின் மந்திரத் தடி இப்போது எங்களிடம் இருக்கிறது. இப்போதே காட்டை விட்டு வெளியேறினால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. இல்லை என்றால் உங்களைச் சிலையாக மாற்றி விடுவோம்” என்றது சிங்கராஜா.

குரங்கின் கையில் இருந்த தடியைக் கண்ட முனிவர் சிரித்தார்.

“அது உண்மையில் மந்திரத் தடி அல்ல. சாதாரணத் தடிதான். என்னைத் தற்காத்துக்கொள்வதற்காகவே அப்படிச் சொன்னேன். இன்று காட்டை விட்டுக் கிளம்பும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் உங்களுக்கு எந்தவிதத் தீங்கும் செய்யவில்லை என்பதை உணர்ந்து, என்னைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், என்னைப் பார்க்கும் விலங்குகள் எல்லாம் சிலையாக மாற்றிவிடுவேனோ என்ற அச்சத்தில் ஓடுவதைக் கண்டேன். இனி நான் உங்களுக்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். பயம் இல்லாமல் நிம்மதியாக வாழுங்கள்” என்றார் முனிவர்.

”தங்களைப் புரிந்துகொள்லாமல் இவ்வாறு நடந்துகொண்டோம். மன்னித்துவிடுங்கள். மனிதர்களால் உலகம் முழுவதும் எங்களின் வசிப்பிடங்கள் மிகவும் குறைந்துவிட்டன. அந்த அச்சத்தில்தான் இப்படி நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் தவத்தை முடித்துவிட்டே செல்லலாம்” என்றது சிங்கராஜா.

“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களின் அச்சம் நியாயமானது. மகிழ்ச்சியாக இருங்கள். விடைபெறுகிறேன்” என்று கிளம்பினார் முனிவர்.

- எஸ். அபிநயா, 12-ம் வகுப்பு, நாளந்தாஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x