Published : 15 Jun 2020 09:00 AM
Last Updated : 15 Jun 2020 09:00 AM

கரோனா பரவலை தடுக்குமா பாரெட்டோ கொள்கை?

எஸ்.எல்.வி. மூர்த்தி
slvmoorthy@gmail.com

கரோனா வைரஸ் பரவல் பிற நாடுகளிலெல்லாம் குறைந்துவரும் நிலையில் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நான்காம் இடத்துக்கு வந்துவிட்டது. ஏன் இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க முடியவில்லை? பரவலைத் தடுக்க இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு, மருத்துவ பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இவை அத்தனையும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள். நிர்வாகம் என்பதை ஆங்கிலத்தில்அட்மினிஸ்ட்ரேஷன் என்று சொல்லுவோம். ஆனால், மேனேஜ்மென்ட் என்னும் மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகள் கரோனா பரவலைத் தடுப்பதில்பயன்படுத்தப்படவில்லை.

இந்த அட்மினிஸ்ட்ரேஷனுக்கும், மேனேஜ் மென்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இதனாலேயே, மேனேஜ்மென்டையும் நிர்வாகவியல் என்று நம்மில் பலர் குறிப்பிடுகிறோம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. மேனேஜ்மென்ட் என்பது அட்மினிஸ்ட் ரேஷனைவிட விரிவானது. அட்மினிஸ்ட்ரேஷன் என்றால் இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றை எட்டும் திட்டங்களைத் தீட்டுதல், மேனேஜ்மென்ட் என்றால் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்தும் நடவடிக்கை என முன்பு தனித் தனியாகப் பிரித்து வைத்திருந்தார்கள். ஆனால், இரண்டுக்குமிடையே இருந்த வேலிகள் சரியாக வரையறுக்கப்படவில்லை.

1842 – 1925 காலகட்டத்தில் வாழ்ந்த ஹென்றி ஃபாயல் (Henry Fayol) என்னும் பிரான்ஸ் நாட்டு அறிஞர் நவீன மேனேஜ்மென்ட் கொள்கைகளின் தந்தையாகக் கருதப்படுகிறார். இன்றும் மேனேஜ் மென்டுக்கு இவர் வகுத்ததுதான் இலக்கணம்.ஃபாயலின் இலக்கணப்படி, மேனேஜ்மென்டின் ஐந்து அம்சங்கள்:

1 திட்டமிடுதல் (Planning): எந்த செயலையும் தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது, அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முடிவு செய்தல்.

2 ஒழுங்கமைத்தல் (Organizing): திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.

3 ஆணையிடுதல் (Commanding): தம்கீழ் பணியாற்றுபவர்கள் தத்தம் வேலைகளைச் செய்யவும், குழுவாக ஒருங்கிணைந்து பணியாற்றவும் தேவையான கட்டளைகளைப் பிறப்பித்தல்.

4 ஒருங்கிணைத்தல் (Co-ordinating): எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்தல். இதற்காக, ஒவ்வொருவர் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் வரையறுத்தல். இதனால் ஒரே பணியை இருவர் செய்வது அல்லது ஒரு பணியை யாருமே செய்யாமல் விட்டுவிடுவது போன்றவை தவிர்க்கப்படுகின்றன.

5 கட்டுப்படுத்தல் (Controlling): செயல்பாடுகள் திட்டமிட்டபடி நடக்கின்றனவா, யாரிடமோ அல்லது ஏதாவது பணிகளிலோ வழுவல்கள் நடக்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டும். அத்தகைய மீறல்கள் நடந்தால், திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவையெல்லாம் கரோனா பரவலைத் தடுப்பதில் செய்யப்படுகிறதா என்றால் தெரியவில்லை.

ஆனால், எந்த ஒரு நெருக்கடி நிலையையும் சமாளிக்க இதுபோன்ற முறையான கட்டமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். மேனேஜ்மென்ட் கொள்கைகளில் பலவும் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவந்தால் நடைமுறைப்படுத்த மிக எளிமையானவையாகவே இருக்கும். அதேசமயம் அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட பலன் கொண்டவையாகவும் இருக்கின்றன. இவற்றுள் ஒன்றான “பாரெட்டோ கொள்கை” கரோனாவைக் கட்டுப்படுத்த நமக்கு உதவலாம்.

அது என்ன பாரெட்டோ கொள்கை?

வில்ஃப்ரெடோ பாரெட்டோ (Vilfredo Pareto) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியப் பொருளாதார மேதை. அன்று இத்தாலியில் நிலச்சுவான்தாரர்களுக்கும், அவர்கள் கீழ் வேலை பார்த்த விவசாயத் தொழிலாளர்களுக்குமிடையே பல பிரச்சினைகள் எழுந்தன. இதை ஆராய்ச்சி செய்த பாரெட்டோ, நாட்டில் இருந்த மொத்த நிலப்பரப்பில் 80 சதவிகிதத்துக்குச் சொந்தக்காரர்கள் மக்கள் தொகையில் 20 சதவிகிதம் பேரே என்று கண்டுபிடித்தார். இன்னும் சில நாடுகளை ஆராய்ந்தார். அங்கும் இதே கதைதான்.

ஆராய்ச்சியாளர்களுக்கு எப்போதுமே அறிவுத்தாகம் அதிகம். புதிதாக எதையாவது கண்டுபிடித்துவிட்டால் அது சரியா, தப்பா என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்துப் பார்க்கத் துடிப்பார்கள். பாரெட்டோ தன் வீட்டுத் தோட்டத்துக்குப் போனார். வளர்ந்து காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தன பட்டாணிச் செடிகள்.

நூறு காய்களைக் கரெக்டாக எண்ணிப் பறித்தார். ஒவ்வொரு காயாக உரிக்கத் தொடங்கினார். 1, 2, 3 என ஒவ்வொரு காயிலும் எத்தனை பட்டாணிகள் இருக்கின்றன என்று பட்டியல் போட்டார். மொத்தம் 800 பட்டாணிகள். அவருடைய மூளை நியூரான்கள் அசுரவேகத்தில் கணக்குப் போட்டன. ”கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன்’ என்று மேலும், கீழும் குதித்தார். 20 காய்களில் 640 பட்டாணிகள் இருந்தன. ஆமாம், 20 சதவிகிதக் காய்களில் 80 சதவிகிதப் பட்டாணிகள்!

பாரெட்டோ இப்போது காணும் இடமெல்லாம் தன் கொள்கையைச் சோதித்தார். சக்சஸ். எல்லா இடங்களிலும் அவருடைய 80:20 கொள்கை சரியாக இருந்தது. தன் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ”பாரெட்டோ கொள்கை” அல்லது ”80:20 கொள்கை” என்னும் பெயரில் மக்கள் இதை அழைக்கத் தொடங்கினார்கள். ஜப்பானியத் தர மேம்பாட்டு முறைகள் உலகில் தலை சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. நம் நாட்டிலும், பி.ஹெச்.இ.எல், மாருதி, டி.வி.எஸ். குழுமம், டாடா குழுமம் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு ஜப்பான்தான் முன்னோடி. இத்துறையில் முக்கியமானவர் ஜோசப் ஜூரான் (Joseph Juran). இவருடைய தர மேம்பாட்டு முறையின் அடிப்படை பாரெட்டோ கொள்கைதான்.
பாரெட்டோவின் சித்தாந்தம் பிசினஸிலும், பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது.

* மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் அனுபவப்படி, சாஃப்ட்வேரின் 20 சதவிகிதப் பிழைகளைத் திருத்தினால், 80 சதவிகிதத் தவறுகளைத் தடுக்கலாம்.
* உலகின் அனைத்து நாடுகளின் “மொத்த உள்நாட்டு உற்பத்தி’’யின் 80 சதவிகிதம் 20 சதவிகித நாடுகளிலிருந்து வருகிறது.
* விளையாட்டு வீரர்களுக்குத் தரும் பயிற்சிகளில், 20 சதவிகிதமானவை 80 சதவிகிதப் பலன் தருகின்றன.
* 80 சதவிகித விபத்துப் பாதிப்புகள் 20 சதவிகித வகை விபத்துக்களால் ஏற்படுகின்றன. பாரெட்டோ கொள்கையைச் சாமானியர் பயன்படுத்தமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னால் சோதனை செய்தோம்.

சேலம் வேல்முருகன் ஸ்டோர்ஸ் மளிகைக்கடை உரிமையாளர் சண்முகம் ஒத்துழைப்புத் தந்தார். இன்று அவர் தான் விற்கும் 100 பொருட்களையும் துரத்திக்கொண்டு அலையாமல் 80 சதவிகித விற்பனை தரும் 20 பொருட்களை விற்பதில் அதிகக் கவனம் காட்டுகிறார்; தன் 120 வாடிக்கையாளர்களில் 80 சதவிகித பிசினஸ் தரும் 24 பேருக்குத் தனிச் சலுகைகள்; குறைந்த லாபம் தரும் 20 பொருட்களில், 4 பொருட்களை இனம் கண்டு அவற்றை ஸ்டாக் செய்வதைக் குறைத்துவிட்டார். பலன்? அதிக விற்பனை, அதிக லாபம், மிகுந்த கஸ்டமர் திருப்தி, குடும்பத்தோடு செலவிட அதிக நேரம். சென்னையில் ரவிச்சந்திரன் அரசாங்க ஆர்டர்களுக்கு ஸ்டேஷனரி சப்ளை செய்பவர்.

அரசு அலுவலகங்களுக்கு அதற்கான கொட்டேஷன்கள் அனுப்புவார். மாதம் சுமார் 30 கொட்டேஷன்கள். சுமார் 100 எப்போதும் நிலுவையில் இருக்கும். அவற்றைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேயிருக்க வேண்டும். தினமும் இந்த வேலை எக்கச்சக்க நேரம் எடுத்தது. அத்தோடு, எந்த ஆர்டராவது கை நழுவிப் போய்விடுமோ என்னும் நிரந்தர டென்ஷன்.

இப்போது ரவிச்சந்திரன் 80 சதவிகித வருமானம் தரும் 20 கொட்டேஷன்களில் கவனம் காட்டுகிறார். அவருடைய ரத்த அழுத்தமும் இப்போது 120/ 80 என நார்மலில் இருக்கிறது. இப்படிப் பல துறைகளில் நிரூபிக்கப்பட்ட பாரெட்டோ கொள்கையைக் கரோனா தடுப்புக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்கிறீர்களா? உதாரணத்துக்குப் பரவல் அதிகமாக இருக்கும் சென்னை மாநகரை எடுத்துக்கொள்வோம். மொத்தம் 39,537 தெருக்கள் உள்ளன. நாம் கீழ்க்கண்ட முறையில் ஒரு பட்டியல் தயாரிக்கலாம்;


தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இறங்குவரிசையில் 39,537 தெருக்களையும் பட்டியலிடவேண்டும். பாரெட்டோ கொள்கைப்படி, இவற்றுள் 7,907 தெருக்களில் 80 சதவிகிதத் தொற்றுப் பாதிப்பாளர்கள் இருப்பார்கள். அரசு, இந்த 7,908 தெருக்களில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பட்டியலை, வாரம் ஒருமுறை பரிசீலனை செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம். ஊரடங்கு தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்ட போது வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், எல்லாவற்றையும் திறந்துவிட்டு இயல்புநிலைக்கு மாறும்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இது மேலும் பீதியைக்கிளப்பியிருக்கிறது. ஆனால், தொற்று எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது மேலே சொன்ன எடுத்துக்காட்டு உண்மையாக இருப்பதுபோலவே தெரிகிறது. உதாரணமாக சென்னையின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அதிக தொற்று இருக்கிறது. இந்த இடங்களில் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்கலாம். ஆனால், என்ன தான் திட்டங்கள் தீட்டினாலும், களத்தில் பணியாற்றுபவர்களும், மக்களும் ஒத்துழைத்தால்தான் எந்தவொரு மாற்றமும் நிகழும் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x