Published : 14 Jun 2020 09:35 am

Updated : 14 Jun 2020 09:36 am

 

Published : 14 Jun 2020 09:35 AM
Last Updated : 14 Jun 2020 09:36 AM

சமூக அவலம்: புறக்கணிக்கப்பட்டவர்களின் ‘கோ கரோனா’

go-corona

சமூகத்தால் ஒதுக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண நாட்களிலேயே எந்த நன்மையும் நடந்துவிடாது. இப்போது கரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் அவர்களின் நிலை, அலையில் சிக்கிய சிறு துரும்பாக அலைக்கழிப்படுகிறது. ‘காம்ரேட் டாக்கீஸ்’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படம் இந்த உண்மையின் சிறுதுளியைக் காட்சிப்படுத்துகிறது.

வளர்ச்சி, முன்னேற்றம், நல்வாழ்வு போன்றவற்றின் பெயரால் சிங்காரச் சென்னைக்கு வெளியே வலுக்கட்டாயமாகத் தூக்கியெறியப்பட்டு பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதியில் வாழும் மக்களின் கரோனா காலத்து மனக்குமுறலையும் புறக்கணிக்கப்படுவதன் அரசியலையும் இந்தக் காணொலி எடுத்துரைக்கிறது. எப்போதுமே வறுமைக்கு வாக்கப்பட்ட வாழ்க்கைதான் என்றாலும், இந்த ஊரடங்கு நாட்களில் பசி தங்களைப் பிய்த்துத் தின்கிறது என்கிறார் கண்ணகி நகரைச் சேர்ந்த ராகிணி. “மூணு வேளை சோத்துல ஒரு வேளை ரேஷன் அரிசில கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்பா. நாலு வீட்ல பாத்ரூம் கழுவினாகூட எங்களுக்குப் பத்து ரூபா கிடைக்கும். இப்போ வேலை கேட்டா, கரோனா வந்துடும் வராதீங்கன்றாங்க. வேலை இல்லாம நாங்க பசியும் பட்டினியுமா சாகுறோம். எங்களைச் சாப்பிட்டியான்னு கேட்க யாரும் வரலை. ஆனா, ஓட்டு கேட்டு மட்டும் எவ்ளோ பேர் வராங்க தெரியுமா” என்கிற ராகிணியின் வார்த்தைகள், தாங்கள் வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் நிதர்சனத்தைத் தோலுரிக்கின்றன.


கொல்லும் பசி

அரசு தந்த ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு என்று கேட்கும் சந்திரலேகாவின் வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. “மூணு மாசமா வேலைக்குப் போக முடியலை. கரோனாவால சாவதைவிடப் பட்டினியும் பசியுமா சாவறதுதான் ரொம்ப. நாங்க வேலை வெட்டிக்கிப் போனாதானே சாப்பிட முடியும்? எவ்ளோ காலத்துக்குத்தான் கடன் வாங்கி சாப்பிடுவோம்?” என்கிறார் அவர்.

இந்தப் பகுதி மக்களுக்கு வேலை தராமல் புறக்கணிக்கின்றனர் என்கிறார் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரமா. “ஈரத்துணியைப் போட்டுக்கிட்டா படுத்துக்கினு தூங்குவாங்க? இருக்கப்பட்டவங்க உக்காந்து சாப்பிடுவாங்க. இல்லாதப்பட்டவங்க என்ன பண்ணுவாங்க?” என்கிற ரமாவின் கேள்வி, அனைத்துத் தரப்பு மக்களையும் கணக்கில்கொள்ளாத அரசின் நிர்வாகக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.

பிழைப்புக்கு வழி வேண்டும்

அரசிடம் சொத்து, நகை, பணம் என்று எதையும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்லும் ராகிணி, தாங்கள் உழைத்து வாழ வழியேற்படுத்திக் கொடுத்தாலே போதும் என்கிறார். என்னதான் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருந்தாலும் ஒரு அரசாங்கம் தன் குடிமக்களை இப்படித்தான் தவிக்கவிடுமா என்றும் அவர் கேட்கிறார். “கல்லு வீடு தர்றோம், மாடி வீடு தர்றோம்னு எங்களை 2009-ல இங்கே வாரியாந்து கொட்டிட்டாங்க” என்று சொல்லும் ராகிணி, தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் அதன் வலி பிறருக்குப் புரியும் என்கிறார். சென்னையின் பூர்வகுடிகளான இவர்களைச் சமூகமும் அரசும் புறக்கணிப்பது எவ்வகையில் நியாயம் என்று கேட்கிறார் செயற்பாட்டாளர் இசையரசு.

யு.எஸ். மதன்குமார், எல்.கே.பாரதி, நீலாம்பரன் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்டி ருக்கும் இந்த ஆவணப்படம், சென்னைக்கு வெளியே தனித் தீவாக்கப்பட்ட மக்களின் கையறு நிலையை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் கேட்டுக்கொண்டதற்காகக் கரவொலி எழுப்பி, சன்னதம் வந்ததுபோல் ‘கோ கரோனா’ என்று பாடியவர்களின் கானத்தைக் கேட்ட நெஞ்சங்களை, ‘ஐ.டி. கம்பெனில வேலை பார்த்தா வொர்க் பிரம் ஹோமு மூட்டைத் தூக்கி உழைக்கிறவன் எப்படி வாழ்வான் மாமு?’ என்ற ‘கோ கரோனா’ கானா பதறச்செய்கிறது.

காணொலியைக் காண:


Go coronaகோ கரோனாசமூக அவலம்Coronavirus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author