Published : 14 Jun 2020 09:36 AM
Last Updated : 14 Jun 2020 09:36 AM

அந்த உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்

ஹமிதா நஸ்ரின் 

சென்னை புறநகரில் இருக்கும் திருவேற்காடு அடுக்குமாடிக் குடி யிருப்பு ஒன்றில் வசித்துவருகிறேன். 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கே வசிக்கின்றன. குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கையோ 1000-க்கும் மேல் இருக்கும்.

கடந்த வெள்ளி (ஜூன் 5) அன்று காலை 7 மணிக்குப் பக்கத்து பிளாக்கில் வசிக்கும் 55 வயதுப் பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உள்ளதாகத் தகவல் வந்தது. காய்கறி வாங்க நான் கீழே சென்றபோது, அந்தப் பெண்ணின் மூத்த மகன் அச்சம் நிறைந்த முகத்துடன் படியிறங்கி வந்துகொண்டிருந்தார். என்னவென்று விசாரித்தபோது, “இன்று காலைதான் ரிப்போர்ட் வந்தது” என்றார். உடன்வந்த என் கணவரிடம், என்ன செய்வது? எனக் கேட்டார்.

உடனடியாக, திருவேற்காடு நகராட்சி ஆணையருக்குத் தகவல் தெரிவித்தோம். சுமார் 15 நிமிடங்களில் நகராட்சிப் பணியாளர்கள் வந்தனர். அதற்கு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஆம்புலன்ஸும் வந்தது. “எந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?” என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் மகன் கேட்டார்.

“சென்னையில் உள்ள மருத்துவமனைப் படுக்கைகள் எல்லாம் நிறைந்துவிட்டன. திருத்தணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறோம். அங்கேதான் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு” என்றார். இதைக் கேட்டவுடன் அவருடைய முகம் வாடிவிட்டது. ‘அம்மாவை அழைத்துவருகிறேன்’ என்று மாடி வீட்டுக்குச் சென்றவர், கீழே வரவே இல்லை. “நோயாளியைச் சீக்கிரம் வரச் சொல்லுங்கள், நாங்கள் இன்னும் இரண்டு பேரை அழைத்துச் செல்ல வேண்டும்” என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவசரப்படுத்தினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.

கீழே கூடியிருந்த சிலர் நோயாளியுடைய மகனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, “திருத்தணிக்குச் செல்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அமைச்சரிடம் பேசிவிட்டேன். ஓமந்தூரார் மருத்துவமனையில் எங்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்துவிட்டார். வேறு ஆம்புலன்ஸும் வந்துக்கிட்டிருக்கு” என்று கூறி, வந்த ஆம்புலன்ஸை அனுப்பிவிட்டார். அப்போது மணி காலை ஒன்பது.

தேவையற்ற குழப்பம்

நேரம் செல்லச் செல்ல அந்தப் பெண்ணுக்கு மூச்சுத் திணறல் அதிகரித்திருக்கிறது. கடைசியாக மதியம் 1.30 மணி அளவில், ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் வந்த அதே நேரத்தில், அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து பெரும் அழுகைக் குரலும் கேட்டது. அந்தப் பெண் நாக்கைக் கடித்தபடி சுயநினைவை இழந்துவிட்டார் என அவருடைய மூத்த மருமகள் பால்கனியிலிருந்து தெரிவித்தார்.

உடனடியாக அருகிலிருந்த மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தோம். ஐந்து நிமிடங்களில் வந்த அவர், பரிசோதித்துவிட்டு நோயாளி இறந்துவிட்டார் என்றார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தை வீணாக்கி விட்டார்களே என்று எனக்கு வருத்தமாக இருந்தது. அடுத்து செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

நகராட்சி அலுவலர் உடனடியாக மேலதிகாரிக் கும் காவல்நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துவிட்டார். இறந்தவரின் வீட்டில் யாரும் இருக்கக் கூடாது என்று சொன்னார். வீட்டில் உள்ள அனை வரையும் கீழே வரச் சொல்லி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் உட்காரவைத்து, அந்த வீட்டுக்கு சீல் வைத்துவிட்டார்.

இறந்த தாயுடன் சில நிமிடங்கள்கூட இருக்க முடியாமல், வாய்விட்டு அழவும் முடியாமல், துயரத்தை வெளிப்படுத்தத் தேவைப்படும் தனிமையை இழந்து அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு அருகில் செல்லக்கூட முடியாத நிலையில் நாங்கள் இருந்தோம்.

நேரம் சென்றுகொண்டே இருந்தது. சடலத்தை எடுத்துச் செல்ல நகராட்சிப் பணியாளர்கள் வரவில்லை. ஆணையரைத் தொடர்புகொண்டபோது, “வீட்டில் இறந்திருப்ப தால், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள், முடிந்த அளவு விரைவாக ஏற்பாடுசெய்கிறேன்” என்று உறுதியளித்தார்.

இரவு 8.30 மணிவாக்கில், நகராட்சி ஊழியர் களும் காவல்துறை அதிகாரிகளும் வந்தார்கள். 15 நிமிடங்களில் பேக்கிங் செய்யப்பட்டு சடலம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எங்கள் குடியிருப்பு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. “மொத்தக் குடியிருப்புக்கும் ஆட்கள் வரத் தடை விதிப்பீர்களா?” என்று கேட்டபோது, “இப்போது சீல் வைக்கும் நடைமுறை இல்லை” என்றார்கள்.

அலட்சியம்

முதலாவதாக வந்த ஆம்புலன்ஸில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றிருந்தால், ஒருவேளை காப்பாற்றி இருக்கலாமோ என்று நினைத்தேன். மறுநாள் காலை எழுந்தவுடன், இறந்தவரின் மூத்த மகனிடம் என் கணவர் தொலைபேசியில் பேசினார். எதுவும் உதவி தேவையா என்று கேட்டபோது அவர் குரலுடைந்து அழுதிருக்கிறார். “என்ன நடந்தது, அறிகுறிகள் எப்போது தெரிந்தன?” என்று என் கணவர் கேட்டார்.

“ஐந்து நாட்களாக அம்மாவுக்குச் சளியும் தொண்டை வலியும் இருந்தன. ஜூன் 2 அன்று மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் கரோனா பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்தார். அன்றே மெட் ஆல் (MedAll) பரிசோதனை மையத்தில் பரிசோதனைக்குக் கொடுத்துவிட்டோம். ஜூன் 3 அன்று காலையில் அம்மாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஐ.சி.எம்.ஆருக்கும் (ICMR) அவர்கள் தகவல் அளித்துவிட்டார்கள். ‘நீங்கள் வீட்டிலேயே இருங்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்’ என்று கூறியி ருக்கிறார்கள். இரண்டு நாட்களாகியும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. 5-ம் தேதி மூச்சுத்திணறல் அதிகரித்த தால், நாங்களே வெளியே தெரிவித்தோம்” என்று அழுகையினூடே கூறியிருக்கிறார்.

தவறவிடப்பட்ட நேரம்

இதில் யாரைக் குறைகூறுவது? அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூற முடியுமா? தனியார் மையத்தில் பரிசோதனை எடுத்தது தவறா? கோவிட்-19 பாசிட்டிவ் என்று வந்தவுடன் உடனடியாக அரசு அமைப்புகளிடம் தகவல் தெரிவிக்காதது பிழையா? ஒருவேளை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்துவிடுவார்கள் என்பதால், தகவல் தெரிவிப்பதைத் தவிர்த்தார்களா? அப்படித் தவிர்த்திருந்தால், அது மிகவும் கவலைதரும் போக்கு.

கோவிட்-19 நோயைப் பொறுத்தவரை முதுமையானவர்களை மட்டும்தான் பாதிக்கும், வேறு நோய்கள் இருப்பவர்களை மட்டுமே பாதிக்கும் என்று வேறுபாடெல்லாம் கிடையாது. முதுமையடையாதவர்களுக்கும், வேறு நோய்கள் இல்லாதவர்களுக்கும் கோவிட்-19 பாதிப்பு சில நேரம் தீவிரமடையலாம் என்பதை அண்மைக் கால செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் மருத்துவர்-செவிலியரின் கண்காணிப்பில் இருக்கும்போது, உடல்நிலையில் சிக்கல் எழும்போது அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டுமென்பதை மருத்துவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். முடிந்தவரை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒருவரைக் காப்பாற்றவே முயல்வார்கள்.

தனிமைப்படு்த்தலுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அரசு மருத்துவ மனைகளுக்கும் பயந்தால், உயிரைக் காப்பாற்ற வேண்டிய முக்கியமான நேரத்தில் (Golden Hour) ஒருவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடலாம்.

கட்டுரையாளர், தொடர்புக்கு: nasrinhushain@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x