Published : 12 Jun 2020 10:17 AM
Last Updated : 12 Jun 2020 10:17 AM

நாட்டியப் பேரொளி பத்மினி 88-ம் பிறந்த நாள்: ஒரு பண்ணையாரும் பத்மினியும்

சினிமா சரித்திரம் ஆகிப்போன ‘மோகனாம்பாள்’ பத்மினி.

ஆர்.சி.ஜெயந்தன்

ஆசை ஆசையாய் நேசிக்கும் தனது காரைப் பிரிய நேரும்போது, ஒரு பாசக்காரக் கிராமத்துப் பண்ணையாருக்கு ஏற்படும் தவிப்பை உணர்வுகுறையாமல் சொன்ன படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. அந்தப் படத்தைப் பார்த்தபோது கீழத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான ராமாஞ்சியார் நினைவில் வந்து உட்கார்ந்துகொண்டார்.

எங்கள் கிராமத்துக்குக் கிழக்கே தென்பாதி என்ற ஊரில் அவருக்கு 50 வேலி நிலம் இருந்தது. நிலச்சுவான்தார் என்ற எந்த பந்தாவும் அவரிடம் இருக்காது. குறுவை - சம்பா என இரண்டுபோகம் பயிரிடும் விவசாயிகளில் அவரும் ஒருவர். அவரது வயலில் இறங்கி வேலை செய்ய விவசாயத் தொழிலாளர்கள் நான், நீ என முன்னால் வந்து நிற்பார்கள். கடவுள் பக்தியுள்ள கம்யூனிஸ்ட் அவர். விவசாயத் தொழிலாளர் சங்கம் நிர்ணயித்த கூலியைவிட அதிகமாகக் கொடுப்பவர்.

அறுவடையிலோ ஒரு மூட்டை மகசூலுக்கு நான்கு மரக்கால் நெல் கூலி என்றால் ‘இவர் இன்னும் இரண்டு மரக்கால் கூடப்போட்டுக்கோடா அம்பி...’ என்பார். அதனால் தானோ என்னவோ அவரை எல்லோரும் “சாமி..” என்றே அழைப்பார்கள். ஆனால், ஜெயபால் என்ற உள்ளூர் நெல் வியாபாரி மட்டும் அவரிடம் மோதிக்கொண்டே இருப்பார். தனது மொத்த அறுவடையையும் அவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு விற்றுவிடுகிறாரே என்ற ஆத்திரம்.

மோகனாம்பாளின் முதல் அறிமுகம்

அறுவடைசெய்து கிடைத்த பணத்தில் அக்ரஹாரத்தின் பெருமாள் கோவில் திருவிழாவுக்கு அள்ளிக் கொடுப்பார். சித்திரையில் களைகட்டும் அம்மன்

கோவில் திருவிழாவுக்கும் தாராளம் காட்டுவார். திருவிழாவின் ஹைலைட் வெட்டவெளித் திரையிடல். பத்து நாட்கள் ஊர்த் திடலில் வெண்திரை கட்டி, அது காற்றில் படபடக்கத் திரையிடும் எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களை ஒவ்வொரு நாளும் ஊர் முக்கியஸ்தர்கள் ‘ஸ்பான்சர்’ செய்வார்கள். ராமாஞ்சியார் ‘ஸ்பான்சர்’ செய்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை முதன் முதலில் வெட்டவெளியில் பார்த்து வியந்துபோன பதின்ம வயதினரில் நானும் ஒருவன். சிவாஜி படமாகவே இருந்தாலும், மோகனாம்பாளை அடைய நினைக்கும் மதன்பூர் மகாராஜா எம்.என். நம்பியாரை அடித்துநொறுக்க, எங்கிருந்தாவது எம்.ஜி.ஆர். உள்ளே குதித்துவிட மாட்டாரா என்று அப்போது மனம் படபடத்துத் துடித்தது.

அந்த ஃபார்முலா ரசனையைச் சிறுவயதிலேயே அசூயையாக எண்ண வைத்துவிட்டார் ‘தில்லானா மோகனாம்பாள்’. இசை - நடனம் ஆகிய இரு கலைகளின் காந்த சக்தியுடன், காதலையும் இணைத்துக் காவியமாக்கியிருந்த அந்தப் படத்தின் ‘கல்ட் கிளாசிக்’ தன்மையை உணரும் ரசனை அப்போது வாய்க்கவில்லை தான். ஆனால், அந்தச் சிறு வயதில், சிக்கல் சண்முக சுந்தரம் சிவாஜியைவிட, சக கலைஞரின் திறமையைக் கண்டு, அவர் மீது காதல் கொண்டு, இறுதிவரை தன் காதலுக்காகப் போராடும் மோகனாம்பாளாக பத்மினி மாறிப்போயிருந்தது, காதல் மீதான ஒரு மரியாதையை மனதுக்குள் உருவாக்கியது. பின்னர், அந்தப் படத்தைத் திரும்பத்திரும்பப் பார்க்க நேரிடும்போதெல்லாம் ‘மோகனாம்பாள்’ என்ற கதாபாத்திரம் பத்மினி எனும் உயரிய கலைஞர் தன் உலகத்தர உடல்மொழியால், நடனமொழியால் உயிரூட்டிக் காட்டிய சலனச் ‘சரித்திரம்’ எனத் திடமாக வியக்கமுடிந்தது.

என்றைக்குமான கதாபாத்திரம்

அந்தப் படத்தின் ஒரு சிறுகாட்சியில்கூட மோகனாம்பாளுக்கான தவிப்பையும் முனைப்பையும் தவறவிட்டிருக்கமாட்டார் பத்மினி. புன்னகை எனில் முகம் முழுக்க ஒளியேற்றிய தீபம்போல் ஒளிரும் அவரது முகம். அழுகை எனில் கண்கள் மட்டுமல்ல; மொத்த முகமும், உடலும், உடைந்துபோன குரலும்கூட அழும். தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கியபின் கற்றுக்கொண்ட தமிழில்,

தரமான உச்சரிப்பைத் தொடக்கம் முதலே கொடுத்த அர்ப்பணிப்புக்குப் பெயர்தான் பத்மினி. நடனம் அவரது ரத்த அணுக்களிலேயே இருந்ததால், நவரச உணர்ச்சிகளை நம்பகமாக, எளிதாக வெளிப்படுத்திக் காட்டிய அவரது படப் பட்டியலில் ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ இந்த மோகனாம்பாள்.

தனது நடனத்தை பார்க்காமல் கோயில் மண்டபத்திலிருந்து வெளியேறும் சண்முகத்திடம் “எங்கள் பரதத்திலிருந்து பிறந்தது தான் உங்கள் நாதம்” என முதல் சந்திப்பிலேயே சரிக்குச் சமமாக சவால்விடும் பத்மினியின் நடிப்பழகை, அப்படத்தின் ஆரம்பக் காட்சியில் தொடங்கி, காதலை வென்றெடுத்த நிறைவை, மணவாறையில் மலர்ந்த தாமரைபோல முகம் முழுவதும் படரவிட்டு அமர்ந்திருக்கும் கடைசிக் காட்சி வரை, ஒரு கதாபாத்திரம் எதிர்கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தும் நுட்பங்களை மோகானாம்பாள் பத்மினியிடம் காணமுடியும்.

‘தெய்வப்பிறவி’ படத்தில்

இந்த அதிர்ச்சி ‘எதிர்பாராதது’!

‘தில்லான்னா மோகானப்பாள்’ படத்தை ஸ்பான்சர் செய்த ராமாஞ்சியார், அதற்கு அடுத்து வந்த ஆண்டில் ‘உத்தம புத்திரன்’, ‘தெய்வப் பிறவி’, அதற்கும் அடுத்த ஆண்டில் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘குலமா குணமா’, அதற்கும் பின்னர் ‘வியட்நாம் வீடு’, ‘மங்கையர் திலகம்’, என்று பத்மினியை நடிப்பு ராட்சசியாக முன்னிறுத்தும் சிவாஜி படங்களைத் தாமே தேர்வு செய்துகொடுத்துத் திரையிடச் செய்வார். திரையில் ஒரு ஜோடியென்றால் அது சிவாஜி - பத்மினி என்ற அசைக்கமுடியாத எண்ணத்தை வெட்டவெளியில் பார்த்த படங்களே உருவாக்கிவிட்டன.

ராமாஞ்சியாரின் கொடையுள்ளத்தால் பத்மினி எனும் உயரிய கலைஞர் தாங்கும் கதாபாத்திரப் பிம்பங்கள் மீது மரியாதை கலந்த ஈர்ப்பு உருவாகக் காரணமாக அமைந்த மற்றொரு படம், ஸ்ரீதர் கதை எழுதி சி.ஹெச்.நாராயணமூர்த்தி இயக்கிய ‘எதிர்பாராதது’ திரைப்படம். அந்தப் படத்தில், காதலியே காலத்தின் விதிவசத்தால் தந்தையின் மனைவியாகிவிடும் கதை. காணாமல் போயிருந்த நாயகன் சிவாஜி, கண் பார்வையை முற்றாகப் பறிகொடுத்த நிலையில் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவார்.

கிளைமாக்ஸ் காட்சியில் காதலியை நினைத்து ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே..’ என்று ஏக்கமாகப் பாட.. ஒளியிழந்துபோன ‘காதலைக் கிளறிவிட்டானே இந்த பாவி’ என்று பெருங்கோபம்கொண்ட பெண் தெய்வம்போல் மாறி, சிவாஜியின் கன்னத்தில் பத்மினி மாறி மாறி அறையும்போது உறைந்துபோகாதவர் யார் இருக்கமுடியும்? அந்த ‘ஆண்டி செண்டிமெண்ட்’ படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நீண்டகாலம் பிடித்தது. தாய்மைக்கு எத்தனையோ படங்களில் பத்மினி முத்திரை நடிப்பை தந்திருந்தாலும் அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு ஈடு இணை கிடையவே கிடையாது. அந்தக் காட்சிக் படமாக்கப்பட்டபோது, பத்மினி அடித்த அடியில் மயங்கி விழுந்து சிவாஜி மூர்ச்சையானதும் அவரை சமாதானப்படுத்த பத்மினி கார் வாங்கிப் பரிசளித்த நிகழ்வையும் பற்றி மூத்த எழுத்தாளர் ‘ராண்டார்கை’யின் பதிவுகளில் இன்று படிக்கும்போது பத்மினி நடிப்புக்குக் கொடுத்த அர்ப்பணிப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தேவதை கார் நிற்கும் தெரு

பத்மினியின் நடிப்புப் பரிமாணங்களை வெட்ட வெளியில் கண்டறிய வாய்ப்பு வழங்கிய ராமாஞ்சியார் சிவாஜியைப் போலவே அழகாக கிராஃப் வெட்டி, பட்டையான கத்தரிப்பூ கரைகொண்ட வேஷ்டியும் சந்தனநிறத்தில் பட்டு ஜிப்பாவும் அணிந்திருப்பார். தானொரு கம்யூனிஸ்ட் என்பதைச் சொல்லச் சிவப்புநிற திருப்பூர் பருத்தித் துண்டைத் தோளில் மாலைபோல் அரை வட்டமாகப் போட்டிருப்பார். எப்போதும் தாம்பூலம் மென்றுகொண்டிருப்பார். அவர் போடும் பன்னீர் சுண்ணாம்பின் மணம் பத்தடி தூரம் வரை காற்றில் மிதக்கும். அந்த வாசனையை நுகர்ந்துகொண்டு அவர் பின்னாலேயே போய்விடலாம் எனத்தோன்றும். மனைவியை இழந்தவர். பிள்ளைகள் எல்லாம் தலைநகர் டெல்லியில் குடியேறிவிட்டார்கள். ஆனால், தனது கிராமத்தைவிட்டு வர அவர் மறுத்துவிட்டார். அக்ரஹாரத்தின் ஒரு தெருவில்

தொடங்கி மறுதெருவில் முடியும் பெரிய மச்சு கொண்ட விஸ்தாரமான வீடு. அவருடைய சமையல்காரரும் வண்டிக்காரருமான ‘தம்பாச்சாரி’ என்ற விநோதமான பெயர் கொண்ட மனிதரும் இவரும் மட்டுமே அந்த வீட்டில் வாசம். அவரது வீட்டை மிக எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், ஐம்பது குடும்பங்களுக்குக் குறையாத அந்த அக்ரஹாரத்தில் இவரிடம் மட்டுமே வானின் நீல நிறத்தில் ஒரு பளபளப்பான கார் இருந்தது. அந்தக் காரின் வடிவம் ஒரு அழகிய தேவதைத் தன்மை கொண்டது. அந்த காரின் ஸ்டியரிங் உள்ள டேஷ் போர்டில், காரின் அதே நீல நிறத்தில் ஒரு சிறிய அழகிய மின் விசிறி இருக்கும். அது என்ன பிராண்ட் கார் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்.

‘வேதாள உலகம்’ பட நடனக் காட்சியில் அக்காள் லலிதாவுடன் 14 வயது பத்மினி

பன்முகக் கலைஞரின் பதிவு

வள்ளுவர் எடுத்துக்காட்டும் அற வாழ்வை, தெரிந்தோ தெரியாமலோ அவரது குறளுக்கு ஏற்பவாழ்ந்து, சாதித்து மறைந்தவர்களைப் பற்றி, கடந்த 3 ஆண்டுகளாக ‘திருக்குறள் நூறு’ என்ற மேடைக்கான உரையை எழுதி வருகிறார் பன்முகக் கலைஞர் சிவகுமார்.

நூறு குறள்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு குறளுக்கு ஓர் உண்மைக் கதை என்கிற கருத்தாக்கத்துடன், வாசித்தாலும் மேடையில் பேசினாலும் ஒன்றரை நிமிடத்தைத் தாண்டக் கூடாது என்ற அளவீட்டுடன் அதைப் புத்தகமாகவும் அவர் எழுதி முடித்திருக்கிறார். அதில், ‘நாட்டியப் பேரொளி’ பத்மினிக்கு ஒரு குறள் கதையை அர்ப்பணித்திருக்கிறார். மேடையில் அதை அரங்கேற்றும் முன்பே, அதிலிருந்து பத்மினிக்காக தாம் எழுதிய பதிவை இந்து தமிழ் திசை வாசகர்களுக்கு இங்கே பிரத்யேகமாக அளித்துள்ளார் சிவகுமார்.

குறள் எண் 979

சிறு வயசுல எனக்குப் பிடிச்ச ஜோடி சிவாஜி - பத்மினி. ’விளையாட்டுப் பிள்ளை’, ‘தேரோட்டம்’ படங்களில் பப்பிம்மாவுக்கு நான் மகனாக நடிச்சேன். ஒரு ஃபங்ஷன்ல கிப்ட் ஒன்னைக் கொண்டுபோய்… பத்மினியிடம் நீட்டி, ‘அம்மா.. இதுக்குள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்’ என்றேன். ‘நீயே சொல்லிடு செல்லம்’ என்றார்.

ஓவியக் கல்லூரியில் சேரும்முன்பு 1958-ல் மோகன் ஆர்ட்ஸ் ஓவியக் கூடத்துல 17 வயசுப் பைனா, பயிற்சி ஓவியனா இருந்தப்போ நான் வரைஞ்ச பத்மினி ஓவியம் அது. ‘ஏம்பா... இவ்வளவு அழகா நான் இருந்தனா?’ என்றார். ‘இதைவிட அழகா இருந்தீங்கம்மா.. இது உங்ககிட்ட இருக்கிறதுதானே சரி’ என்று சொல்லிப் பரிசளித்தேன். ‘தாங்க்ஸ்’ என்று சொல்லிவிட்டு வாங்கி நெஞ்சில் அணைத்துக் கொண்டார்.

கடைசியாக அவர் கலந்துகொண்டு வாழ்த்திய நிகழ்ச்சி சூர்யா - ஜோதிகா திருமணம். பிறகு அவர் காலமானப்போ.. ஷோபனா வீட்டில் இறுதி மரியாதை செய்யப்போனேன். அவர், மீளா உறக்கத்தில் படுத்திருந்த கண்ணாடிப் பெட்டியின் தலைமாட்டில் நான் 17 வயதில் அவருக்குப் பரிசளித்த ஓவியம் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. ‘இது அத்தையின் விருப்பம்’ என்று ஷோபனா என்னைப் பார்த்துச் சொன்னார். பப்பிம்மாவுக்கு ரஷ்யமொழி தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளையும் தாய்மொழிபோல் பேசுவாங்க. உலக ‘நாட்டியப் பேரொளி’.

நூற்றுக்கணக்கான பரத மேதைகளை உருவாக்கிய மகா மேதை. ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படங்களில் அவங்க ஆடிய நடனம் உலக ரெக்கார்ட். அப்படிப்பட்டவங்க ஒருநாளும், ‘என்னை மாதிரி யாராலையும் டான்ஸ் ஆட முடியாது; ஐந்து மொழிகள்ல 400 படங்களுக்கு மேல நடிச்சவ நான்’ என்று பெருமைப்பட்டுக்கொண்டதே இல்லை. நிறைகுடம் என்றால் அது பப்பிம்மா தான். இவங்களுக்காகத்தான் வள்ளுவர்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

என்கிறார்.

பத்மினியின் பக்தர்!

அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். உடல் சூட்டைத் தணிப்பதற்காக, சித்த வைத்தியரான என் தந்தையிடம் ஆமையோட்டுப் பற்பம் என்ற மருந்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தார் ராமாஞ்சியார். அந்த மருந்தை அவர் இரண்டாம் மண்டலம் சாப்பிடுவதற்காக, வெண்ணெய்க் காகிதத்தில் மடித்த 48 பொட்டலங்கள் அடங்கிய பையை என் கையில் கொடுத்து ராமாஞ்சியாரிடம் கொடுத்துவர காலை வேளையில் அப்பா என்னை அனுப்பினார்.

நான் போனபோது பிரீமியர் பத்மினி (!) காரை அவர் தண்ணீர்விட்டுக் கழுவித் துடைத்துக்கொண்டிருந்தார். என்னிடமிருந்து மருந்துப் பையை வாங்கிக்கொண்டவர், “அம்பி… கார் பக்கத்துல போகாதே… நான் ரூவா எடுத்துட்டு வர்றது வரெ.. திண்ணையில ஒக்கார்” என்று கூறிவிட்டு உள்ளே போனார். விசாலமான திண்ணைச் சுவரில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த கண்ணாடிச் சட்டமடித்த புகைப்படங்களின் மீது என் கண்கள் சிறக்கடித்து அமர்ந்தன. கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு மத்தியில் ஒரு வண்ணப் புகைப்படம் ஆச்சரியப்படுதியது. சிக்கல் சண்முக சுந்தரம் கெட்-அப்பில்

இருந்த சிவாஜி, மோகனாம்பாள் கெட்-அப்பில் இருந்த பத்மினி இன்னும் சிலருடன் ராமாஞ்சியாரும் அந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தில் கம்பீரமாக நின்றிருந்தார். ஆமாம்! பத்மினியின் அருகில் தான் அவர் நின்றிருந்தார். “அது ‘தில்லானா மோகனாம்பாள்’ ஷூட்டிங்ல எடுத்த போட்டோடா அம்பி. பப்பிம்மா பக்கத்துல நிக்கிறது நான்தான் தெரியரதா?” என்று குரல் கொடுத்தபடி வந்து என் கவனம் கலைத்தார். நான் அந்தப் படத்தை ரசித்ததை அவர் ரசித்தார். ‘பப்பிம்மா’ என்றால் அது பத்மினியின் செல்லப் பெயர் என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

பின்னர் ஒருநாள் பள்ளிவிட்டு வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தபோது வழிநெடுக ஒரு விபத்தைப் பற்றி ஊரார் மென்றுகொண்டிருந்தார்கள் “ஊதாக் கலரு கார் பக்கத்துல ஐயரு யாரையும் நெருங்க விட மாட்டாரு.. ஜெயபாலு குத்துயிரா கெடந்ததைப் பார்த்துட்டு கார்ல அள்ளிப்போட்டுகிட்டுப் போய்க் காப்பாத்திட்டாரு!” என்ற வார்த்தைகள் என் காதில் வந்து விழுந்தன. இப்போது ராமாஞ்சியாருக்கு 85 வயது. அமெரிக்காவில் வாழும் அவரது கடைசி மகளுடைய பெயரும் பத்மினிதான். தன் மகளை அவர் ‘பப்பிம்மா’ என்றே அழைக்கிறார். மிகமிக முக்கியமாக நாட்டியப் பேரொளி இறந்தபோது கிராமத்தில் அவருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தினார் என்பதும் ஓர் உயிரைக் காப்பாற்றிய பிரீமியர் பத்மினி பியட் காரை, வண்ணம் மாற்றாமல் தாமே ஓட்டிக்கொண்டிருக்கிறார் என்பதும்கூட தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பகுதிதான்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x