Published : 11 Jun 2020 08:52 AM
Last Updated : 11 Jun 2020 08:52 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 119: சொற்களால் சித்திரிக்க முடியுமா?

கரு.ஆறுமுகத்தமிழன்

கடவுளை நம்புகிறவர் களுக்கும்கூட, உருவமற்ற ஒன்றை - அது கடவுளாகவே இருந்தாலும் - கருதிப் பார்ப்பது கடினம்தான். கருதி உணர்வதைவிட, கேட்டு உணர்வதைவிட, காட்சியாகப் பார்த்து உணர்ந்துவிட்டால் தனிநிறைவு. காண இயலாத எதையும் மனம் ஐயுறும்.

புத்தர் முழுமையடைந்து உடல் நீங்கும்போது, “உங்களுக்குப் பிறகு எங்களுக்கு யார் ஆசிரியர்?” என்று மாணவர் ஆனந்தர் கேட்க, “உனக்கு நீயே விளக்காக இரு. அடுத்தவர் அறிவைத் தேடாமல் உன் அறிவையே பயன்படுத்து. உட்குரலைக் கேள். வாழ்வு சுருக்கமானது; வீணாக்காதே. கவனத்தோடு இரு” என்று ஆனந்தனுக்கும் மற்றோர்க்கும் சொல்லி, ‘நாம-ரூபம்’ ஆன உடலை நீத்தார் புத்தர் என்கிறது மகாபரிநிப்பாண சுத்தம்.

ஆசிரியரை இழந்த புத்தரின் மாணவர்கள் அவரது உடலின் மிச்சங்களை வைத்துத் தூபிகள் எழுப்பிக் குறியீடுகளால் அவரை உருவகித்துக்கொண்டார்கள். புத்தரை நேரில் கண்டு, அவரது சொற்கள் கேட்டு, அவரோடு உண்டு, அவர் உயிர்த்த காற்றையே உயித்து, அருகில் இருந்து அவரை உற்றும் அறிந்த சீடர்களுக்கு ஒருவேளை அவை போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் புத்தரை நேரில் கண்டிராத எளிய மனிதர்களுக்கும் அவை போதுமானவையாக இல்லை.

புத்தரின் உருவ லட்சணம்

பௌத்த நூல்கள் புத்தரின் தோற்றத்தைச் சொற்களால் சித்திரித்துக் காட்டுகின்றன. சம அளவிலான பாதங்கள், அவற்றில் சக்கரக் கோடுகள், ஆண்மானின் தொடைகள், மெல்லிய நீண்ட விரல்கள், முழந்தாள்வரை நீண்ட கைகள், கனிவாகப் பேசும் நீண்ட நாக்கு, பயன்படுத்தும் விருப்பற்று உள்ளிழுத்துக்கொண்ட குறி, சிங்கவாகு உடல், திரண்ட தோள்கள், சுருண்ட தலைமயிர், நெற்றி நடுவில் பொட்டுப்போல ஒரு சுழி, தங்கநிறம் உள்ளிட்ட முப்பத்திரண்டு பேராண்மை இலக்கணங்கள் சொல்கிறது சுத்த பிடக நூலான தீக நிகாயத்தின் முப்பதாம் சூத்திரமாகிய லக்கண சுத்தம்.

இந்த இலக்கணங்களைக் கொண்டோ, அல்லது வேறு வகையிலோ, புத்தரை ஒரு கருத்துருவாக நம் உள்ளத்தில் எழுப்பிக்கொள்ள முடியாதா எனில், கடினம்தான். ‘புத்தரான ஒருவரைச் சொற்களால் சித்திரிப்பது எளிதான வேலையல்ல’ என்கிறது சப்தாசதி பிரக்ஞா பாரமிதை. ஒரு புத்தரை உருவகித்துக்கொள்ளவும் உள் வாங்கிக்கொள்ளவும் ஏதேனும் ஒரு பற்றுக்கோடு வேண்டும்; எந்த மழுப்பலும் இல்லாத, வெளிப்படை யான பற்றுக்கோடு. கண்ணாரக் காணும்வகையில் ஓர் உருவம் வேண்டும்.

முதலாம் பொது நூற்றாண்டு வரையிலும் புத்தருக்கு உருவச் சிலைகளே இல்லை என்கிறார்கள் அறிஞர்கள். மறைவுக்குப் பின்னர் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள்வரை புத்தர் குறியீடாகவே இருந்தார். பிறகே காந்தாரத்திலும் மதுராவிலுமாகப் புத்தரைச் சிலை வடித்தார்கள். அதற்கு இரண்டு நோக்கங்கள்: (1) புத்தரைப் பார்த்துப் பார்த்துப் பவத்திறம் (பிறப்பு ஆசை) அறுக்கும் பௌத்தர்களின் விருப்பம்; (2) புத்தரை உருவமாகப் பார்த்து வணங்கி அருள்பெற விரும்பும் பாமரர்களின் விருப்பம். போதி (பெருவிழிப்பு), பிரக்ஞை (பேரறிவு), கருணை (பெருங்கனிவு), யோகம் (பேருறைப்பு) ஆகியவற்றைச் சித்திரிக்கும்வகையில் ஒளிவட்டம், குமிண் சிரிப்பு, உள்நாட்டம் என்னும் சிலைவடிவத் தோற்றத்தோடு புத்தர், புத்த பகவான் ஆயினார்.

புத்தருக்காவது ஒரு வரலாற்றுத் தோற்றம் இருந்தது. மிகைப்படுத்தி யேனும் பார்த்தவர்கள் எழுதிய தோற்றக் குறிப்புகள் இருந்தன. சிவனுக்கு என்ன இருந்தது? இப்படியன் இந்நிறத்தன் என்று எப்படி வடிவநிலைப்படுத்தினார்கள்? திருமூலரிடம் கேட்டால் என்ன சொல்வார்?

கரியட்ட கையன், கபாலம் ஏந்தி,

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை,

அரியன், பெரியன்என்று ஆட்பட்டது அல்லால்

கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.

(திருமந்திரம் 2814)

யானையைக் கொன்று அதன் தோலுரித்துப் போர்த்தியவன், மண்டையோட்டை ஏந்தியவன், ஒளிரும் இளம்பிறையைச் சூடிய தலையன்; அவனை அரியவன், பெரியவன் என்றெல்லாம் தொழுது வணங்கியிருக்கிறேனே அல்லாது, அவன் கருப்பா சிவப்பா என்று நான் என்னத்தைக் கண்டேன்?

‘புத்தரான ஒருவரைச் சொற்களால் சித்திரிப்பது எளிதான வேலையல்ல’ என்று சப்தாசதி பிரக்ஞா பாரமிதை சொல்வது சரியாகத்தானே இருக்கிறது? போதம் பெற்ற புத்தரையோ, எல்லாம் வல்ல சித்தரையோ வெறும் சொற்களால் சித்திரிக்க முடியாது தானே?

(விசாரணை தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x