Published : 09 Jun 2020 09:18 AM
Last Updated : 09 Jun 2020 09:18 AM

கரோனா வாழ்க்கை: செவிலியர் ரோபாட்!

மிது கார்த்தி

ஒவ்வொரு மனிதரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியாக இருக்கும் செவிலியர்கள் இதைக் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்தச் சிக்கலைப் போக்குவதற்காக, ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் செவிலியர்களின் சில பணிகளுக்கு சேவை ரோபாட்கள் வலம்வரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் விழுப்புரம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த பாலாஜி திருநாவுக்கரசு என்ற இளைஞர் ‘நிலா செவிலி’ என்ற எளிய சேவை ரோபாட்டை உருவாக்கியுள்ளார்.

ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டம்பெற்றுள்ள பாலாஜி, சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். தென் கொரியா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் நடைபெற்ற ரோபாட்டிக்ஸ் மாநாடுகளில் பங்கேற்று விருது பெற்றுள்ள பாலாஜி, கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ரோபாட்டிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது மருத்துவப் பயன்பாட்டுக்கான செவிலி ரோபாட்டை அறிமுகப்படுத்தி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துப் பரிசு பெற்றார்.

தற்போது கரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்துவரும் வேளையில், மனிதத் தொடர்புகளைத் தவிர்க்கும் வகையிலான செவிலி ரோபாட்டை வடிவமைக்க, கடந்த 3 மாதங்களாக முயன்றுவந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக முயற்சியைத் தள்ளிபோட்டுவந்த பாலாஜி, கையிலிருக்கும் தொகையைக்கொண்டு ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி செவிலி ரோபாட்டை உருவாக்கியுள்ளார். இந்த ரோபாட்டுக்கு ‘நிலா செவிலி’ என்று பெயரிட்டுள்ளார்.

பாலாஜி

“கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மனிதர்களுக்கு இடையே தொடர்பைக் குறைக்கும் வகையில் இந்த ரோபாட்டை வடிவமைத்துள்ளேன். குறைந்த செலவில் ரோபாட்டை உருவாக்குவதே என்னுடைய விருப்பம். நோயாளியை நேரடையாகச் சந்திக்காமல், இருக்கும் இடத்திலிருந்தே இயக்கி, நோயாளிக்குத் தேவையானவற்றை இந்த ரோபாட் மூலம் கொடுக்கலாம். இதற்காக ஒரு செயலியை உருவாக்கி, வைஃபை மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளேன்” என்கிறார் பாலாஜி.

சரி, இந்த ரோபாட் என்ன செய்யும்? “நோயாளிகளுக்கு வேளா வேளைக்கு மருந்து கொடுக்க இதைப் பயன்படுத்தலாம். மருத்துவமனையில் எத்தனை நோயாளிகள் இருந்தாலும், ரோபாட்டுகளைக் கொண்டே இந்தப் பணியைச் செய்துவிடலாம். ரோபாட்களை இயக்க ஒரே ஒரு ஆள் இருந்தால் போதும். தற்போதைய சூழலில் தொற்றைக் குறைப்பதற்கு இது பயன்படும். இந்த ரோபாட்டை செவிலி தோற்றத்தில் வடிவமைத்துள்ளேன். இந்த ரோபாட்டின் செயல்பாடுகளை மாற்றியமைப்பதன் மூலம் வேறு பணிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். உரையாடவும் செய்யலாம்.” என்கிறார் பாலாஜி.

கரோனோ வைரஸ் தொற்று மனிதர்களைக் காவுவாங்கிவரும் வேளையில், மனிதத் தொடர்புகளைத் தவிர்க்க உதவும் இதுபோன்ற சேவை ரோபாட்டுகளை மனதார வரவேற்கலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x