

இந்திய அரசின் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா விமான நிறுவனம் பயிற்சி கேபின் பணியாளர் (Trainee Cabin Crew) பதவியில் 331 காலியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்ப இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 அல்லது ஏதேனும் ஒரு டிப்ளமா அல்லது பட்டம் பெற்றவர்கள் (ஆண், பெண் இரு பாலரும்) இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் பட்டம் அல்லது டிப்ளமா பெற்றிருப்பின் முன்னுரிமை உண்டு.
வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினருக்கு 5 ஆண்டும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி) 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். உயரம் ஆண்கள் எனில் 172 செ.மீ. பெண்கள் என்றால் 160 செ.மீ. இருக்க வேண்டும். எனினும், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு உயரத்தில் 5 செ.மீ. தளர்வு அளிக்கப்படும்.
குழு விவாதம், ஆளுமைத்திறன் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடைசியாக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மும்பை அல்லது ஐதராபாத் நகரில் பயிற்சி அளிப்பார்கள். பயிற்சியின்போது மாதம் ரூ..15 ஆயிரம் உதவித்தொகையாக (Stipend) பெறலாம்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிப் பவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் கேபின் பணியாளராக நியமிக்கப்படுவர். அப்போது சம்பளம் ரூ.35,075 அளவுக்குக் கிடைக்கும். மேலும், விமான ஊழியர்களுக்கான பல்வேறு விதமான அலவன்ஸ்களும், சலுகைகளும் தனியே பெறலாம். கேபின் பணியாளர் ஆக விரும்புவோர்>>www.airindia.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி அக்டோபர் மாதம் 6-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.