Published : 05 Jun 2020 08:38 AM
Last Updated : 05 Jun 2020 08:38 AM

திரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா?

எஸ்.எஸ். லெனின்

ஒரு காட்டாறாகக் காலத்தை விழுங்கி ஓடிக்கொண்டிருப்பதே கலையின் போக்கு. தனக்கான கரைகளைச் சுயமாகக் கட்டமைத்துக்கொள்ளும் இயல்பும் கலைக்கு உண்டு. நாகரிகமடைந்த சமூகத்தின் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பெயரில் தணிக்கை முறை எனும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தபோது அதற்குப் போக்குகாட்டி தன்னைத் தக்கவைத்திருக்கிறது திரைக் கலை. ஒரு கட்டத்தில் திரைப் படைப்பாளியின் கைகள் கட்டப்பட்டபோது அதற்கு எதிரான குரல்களும் ஒலித்து வருகின்றன.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ரசனைகள், விருப்பத் தேர்வுகளை ஓரிருவர் தீர்மானித்து, சான்றுகள் அளிப்பது தொடர்பாக விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. படைப்பின் எதிரெதிர் முனைகளில் இருக்கும் படைப்பாளி - ரசிகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்தத் தணிக்கையின் தளைகளை விரும்புவதில்லை. அதனாலேயே தணிக்கைக்கு அப்பாற்பட்ட இணையத் திரை அறிமுகமானபோது, இந்த இரு தரப்பினரும் அவற்றைக் கொண்டாடி தீர்த்தனர். தற்போது, கரோனா பொதுமுடக்கத்தால் இணையத் திரைப் படைப்புகளுக்குக் கிடைத்துவரும் அபார வரவேற்புக்கு மத்தியில் அவற்றின் மீதான பழைய சச்சரவுகளும் புது வேகமெடுத்திருக்கின்றன. அதில் முதல் சேதாரத்தைச் சந்தித்திருக்கிறது ஜீ5 இணையத்துக்காகத் தயாரான ‘காட்மேன்’ சிரீஸ்.

அடிபட்டுப்போன அழகியல்

தணிக்கை வெட்டுகள் குறித்துச் சற்றும் கிலேசமின்றி, ரத்தமும் சதையுமாய் உணர்வுகளை வடிக்கும் காத்திரமான படைப்புகள் ஸ்ட்ரீமிங் தளங்களின் தனிபெரும் அடையாளமாயின. வன்முறை, வசவு மொழிகள், அப்பட்டமான

தேகக் காட்சிகள் என அழகியல் சார்ந்து அவை சட்டகங்களை நிறைத்தன. ஒரு தீவிரமான படைப்புக்கு நியாயம் சேர்ப்பதாக ஆங்காங்கே மட்டுமே இவை இடம்பெற்றன. ஆனால், சந்தைக்கான போட்டியில், இந்தப் பாலியல், வன்முறைக் காட்சிகளை மட்டுமே பிரதானமாகக் கொண்டு பிராந்திய மொழிகளிலான படைப்புகள் வெளியானபோது ஸ்ட்ரீமிங் தளங்களின் தனி அடையாளம் என்பது அடிபட்டுப்போனது. ‘நார்கோஸ்’, ‘சேக்ரட் கேம்ஸ்’ தொடர்களுக்குக் கிட்டிய வெற்றி அவை போன்ற ஏராளமான பிராந்திய தொடர்கள் உருவாக அடிகோலிவிட்டது.

அந்தத் தொடர்களின் வன்முறையும் பாலியல் சித்தரிப்புக் காட்சிகளும், கதையை மீறித் துருத்தலாக நின்றன. ‘ஆல்ட்பாலாஜி’, ‘உல்லு’ முதலான தளங்கள், பெரும்பகுதி மூத்த பார்வையாளர்களின் பரவலான பாலியல் வறட்சிக்குத் தீனியிடும் தொடர்களை அதிகம் உருவாக்குகின்றன. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ பிரதிபலித்த பாலியலின் அழகியலை, இதர தளங்களின் படைப்புகள் ஆபாசக் குவியலாகவே தொகுத்தன.

தணிக்கை கோரிக்கை

கடந்த நவம்பரில் நாட்டில் நடத்தப்பட்டத் தனியார் கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகள், ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் தணிக்கை அவசியம் என 57 சதவீத இந்தியர்கள் வலியுறுத்தியிருப்பதைத் தெரிவித்துள்ளன. முன்னதாக ஸ்ட்ரீமிங் தளங்களுக்குக் கடிவாளமிடும் அரசின் எத்தனிப்பை முன்னிட்டு இந்தக் கருத்துக்கணிப்பு வெளியானது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ தளங்களில் ஒரு சில ஆட்சேபகரமான வலைத்தொடர்கள் வெளியானதாக அவற்றுக்கு எதிரான விவாதங்கள் அப்போது அலையடித்தன.

குறிப்பாக, ‘சேக்ரட் கேம்ஸ்’, ‘லெய்லா’ போன்ற வலைத்தொடர்கள் பெரும்பான்மை மக்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாகக் கண்டனங்கள் எழுந்தன. காவல்துறை புகார்கள், நீதிமன்ற வழக்குகள் என சர்ச்சைகள் அதிகரித்தபோது, ‘லெய்லா’ தொடரின் இரண்டாம் சீஸனைக் கைவிட நெட்ஃபிளிக்ஸ் முடிவெடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின.

கண்டனத்தின் நிழல் குரல்

தனிப்பட்ட செல்போன், கணினித் திரைகளுக்கு அப்பால், ஸ்மார்ட் டிவிகளுக்கும் ஸ்ட்ரீமிங் தளங்களின் தொழில்நுட்பம் தாவியபோது இந்தியக் குடும்பங்களுக்கே உரிய கலாச்சார அதிர்ச்சியை வீட்டின் வரவேற்பறைகள் எதிர்கொண்டன. இவற்றை ரசித்த பெரும்பான்மையான பெற்றோர்கள், பிள்ளைகளின் கண்களில் படக்கூடாதவற்றை டிவிக்களில் திறந்து பார்ப்பதைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளத் தொடங்கினார்கள். ஸ்ட்ரீமிங் தளங்களின் தனி அடையாளமே தணிக்கைக்கு அப்பாற்பட்ட சுதந்திரம்தான். தணிக்கை வரம்புக்கு அவை உட்படும்போது அதன் உள்ளடக்கம் நிச்சயம் அடையாளம் இழக்கும்.

அந்த வகையில் தமக்கான அளவுகோல்களில் சுய தணிக்கை என்பதை ஸ்ட்ரீமிங் தளங்கள் கூடுமானவரை பின்பற்றி வருகின்றன. வயதுவந்தோருக்கான படைப்பு என்பதை முறையாக எச்சரிக்கை செய்வதோடு, பெரியவர்கள் மட்டுமே கையாளுவதற்கான கடவுச்சொற்கள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அவை வழங்கியே வருகின்றன. ஆனால், பெருவாரி மக்களின் நம்பிக்கைகள், கலாச்சார விழுமியங்களைச் சில படைப்புகள் உரசும்போது பழைய எதிர்ப்புகளுக்குப் புதிய முகங்கள் முளைக்கின்றன.

பெரும்பான்மை வாதத்தின் கோரப்பிடியில் சிக்குறும் சமூக உதிரிகள், அதிகார அரசியலின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்துவது, பெண்ணியத்தை மையமாகக் கொண்ட கதைகள், பாலினச் சிறுபான்மையினருக்கு ஆதரவான படைப்புகள் போன்றவை அதிகாரத்தின் ஆசிபெற்ற கலாச்சாரக் காவலர்கள் என்று எண்ணிக்கொள்வோரை வெகுவாகச் சீண்டுகின்றன. இந்த எதிர்ப்பாளர்கள் தங்களது நிஜமான எதிர்வாதத்தை முன்வைக்காது, ‘வரம்பற்ற வன்முறை, பாலியல் காட்சிகள்’ என்ற பொதுவான குற்றச்சாட்டின் நிழலில் நின்று போர் தொடுக்கிறார்கள்.

கேள்விக்குறியாகும் படைப்புச் சுதந்திரம்

மக்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகள், அதன் அடிப்படையிலான ஆதார உணர்வுகளைச் சீண்டுவதும் கொந்தளிக்க விடுவதும் எந்த அளவுக்குத் தவறோ, அதேபோன்று அதிகாரத்தைக் கொண்டு படைப்புகளை நசுக்க முற்படுவதும் தவறேதான் அல்லவா? ஒரு படைப்பு ரசிகப் பார்வைக்கு வரும் முன்பாகவே, தமது அதிகாரத்தை எய்து, அதை அழிப்பது மோசமான முன்னுதாரணமாகும். படைப்பில் ஆட்சேபகரம் இருப்பின் நீதிமன்றத்தை அணுகித் தடை வாங்குவதும், அவதூறான படைப்புகளைப் புறக்கணிப்பதுமே ஆரோக்கியமான போக்காக அமையும்.

பாரம்பரியமாக வேர்பிடித்த எந்தவொரு பிரம்மாண்டத்தையும் அது மதமாக இருந்தாலும், ஒரு வெப் சீரீஸ் அதை வீழ்த்திவிட முடியுமா? முன்னெப்போதும் இல்லாத வகையில் சகிப்பின்மையும் வெறுப்புணர்வும் உலகமெங்கும் தீயாகப் பரவி வரும் வேளையில், சிறு சலசலப்புக்கும் அதிகாரத்தைப் பாய்ச்சுதல் என்பது, நாளை பூமராங்காக வீசுபவர்களை நோக்கியே திரும்பக்கூடும். மாறாக நேர்வழியில் படைப்புகளோடும் படைப்பாளிகளோடும் மோதுவதே கலையின் சுதந்திரத்தைக் காக்கும்.

பின்வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்

இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு தேசங்களிலும் நெட்ஃபிளிக்ஸ் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. அவை தொடர்பான சர்ச்சைகள், நெட்ஃபிளிக்ஸ் சந்தாதரர் எண்ணிக்கையை உயர்த்திய விசித்திரமும் நடந்தது. எனினும் அரசாங்கமே களமிறங்கி அங்குசத்தைக் கையிலெடுத்த அனுபவங்கள் அண்மை ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

தனது 23 வருட வரலாற்றில் இவ்வாறு சுமார் 9 படைப்புகளைத் தனது தளத்திலிருந்து நெட்ஃபிளிக்ஸ் நீக்கியது. ஸ்டான்லி குப்ரிக்கின் ‘ஃபுல் மெட்டல் ஜாக்கெட்’ திரைப்படத்தை, வியட்நாம் அரசின் தடையை அடுத்து அந்நாட்டுப் பார்வையாளர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நீக்கம் செய்தது.

திகில் திரைப்படமான ‘நைட் ஆப் தி லிவிங் டெட்’ ஜெர்மனியிலும், நியூசிலாந்தில் ‘தி பிரிட்ஜ்’, சௌதி அரேபியாவில் ‘பேட்ரியாட் ஆக்ட் வித் ஹசன் மினாஜ்’ என்ற ஸ்டாண்ட் அப் தொடரின் ஓர் அத்தியாயமும் அந்தந்த நாடுகளில் ரத்தாயின. ‘குக்கிங் ஆன் ஹை’, ‘தி லெஜெண்ட் ஆப் 420’, ‘தி லாஸ்ட் டெம்ப்டேசன் ஆப் கிறிஸ்ட்’, ‘தி லாஸ்ட் ஹேங் ஓவர்’ என 4 நெட்ஃபிளிக்ஸ் படைப்புகள் சிங்கப்பூர் அரசின் உத்தரவால் அங்கு நீக்கப்பட்டன.

நியாயம் சேர்க்கும் காட்சிகள்

அண்மையில் இரண்டாம் சீஸனாக வெளியான ‘அல்டர்ட் கார்பன்’, ஐந்தாம் சீஸனாக வெளியான ‘அவுட்லாண்டர்’, கடந்த ஆண்டு 7-ம் சீஸனாக வெளியான ‘ஆரஞ்ச் ஈஸ் தி நியூ பிளாக்’, சற்றுப் பழைய வலைத்தொடர்களான ‘ஜிப்ஸி’, ‘சென்ஸ் 8’ போன்ற நெட்ஃபிளிக்ஸின் ஆவி பரத்தும் காதல் காட்சிகள் கதையோட்டத்துக்கு நியாயம் சேர்ப்பவை.

பாலியல் கல்வியைப் பகடியாக அணுகிய நெட்ஃபிளிக்ஸின் ‘செக்ஸ் எஜுகேசன்’, பெண்களின் புதிய புறப்பாட்டைப் பேசிய ‘ஃபோர்மோர் ஷாட்ஸ் பிளீஸ்!’ போன்றவற்றைப் பாலியல் கலவாது எடுப்பது சாத்தியமல்ல.

பிரபல ஹெச்பிஓ தயாரிப்பான ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ வலைத்தொடரை அதன் பாலியல், குரூரத்தின் அழகியல் பிரவாகிக்கும் காட்சிகளின்றிக் கதைப் பின்னணியை வடித்திருந்தால் அதன் பிரம்மாண்டம் வெற்று ஜோடனையாகி தோல்வி அடைந்திருக்கும்.

சுய தணிக்கை சாத்தியமா?

இணையத்தின் படைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடைமுறை அதிகாரம் அரசிடம் இல்லாததால், சுய தணிக்கை என்னும் மாதிரிக்கான முன்னெடுப்புகள் ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன. இது கிட்டத்தட்ட ஊடகங்கள் பாவிக்கும் சுய தணிக்கைக்கு ஒப்பானது. சுய தணிக்கை வரம்புக்கான ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹாட்ஸ்டார், வூட், ஜியோ, சோனி லிவ் உள்ளிட்ட தளங்கள் ஆதரவு தெரிவித்தன. நெட்பிளிக்ஸ், ஆல்ட்பாலாஜி, ஜீ5, எம்.எக்ஸ். பிளேயர் போன்றவை மறுதலித்தன. தாங்கள் வரையறுத்து பின்பற்றும் தனிப்பட்ட சுய தணிக்கை மாதிரியே போதுமானது என அவை தெரிவித்தன.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x