Published : 31 May 2020 09:10 AM
Last Updated : 31 May 2020 09:10 AM

வானவில் பெண்கள்: ஊரடங்கிலும் அடங்காத கலைச் சேவை

க்ருஷ்ணி

அலை ஓய்ந்த பிறகு கடலில் இறங்கலாம் என்று நினைப்பதைப் போன்றதுதான் கரோனா நோய்த்தொற்று முடிவுக்கு வரும்வரை நம் பணிகளை ஒத்திப்போடுவதும். எதையும் எதிர்கொள்ளும் சூழலும் கொஞ்சம் சமயோசிதமும் இருந்தால் நெருக்கடி காலத்தில்கூடச் செயலாற்ற முடியும் என்கிறார் ஓவியர் சத்யா கௌதமன். தான் அறிந்த கலையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவதுடன் தன்னால் இயன்ற அளவுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவும் இதை இவர் பயன்படுத்திவருகிறார்.

சிங்கப்பூரில் வசித்துவரும் சத்யா, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். அப்பா எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணியாற்றியவர், அம்மா இல்லத்தரசி. வேளாண்மைப் பொறியியல் முடித்த சத்யாவைத் துறை சார்ந்த பணியைவிட ஓவியமே அதிகமாக ஈர்த்தது. பள்ளி நாட்களில் சுயமாகப் படங்கள் வரைந்து பார்த்திருக்கிறார். அதுவும் வீட்டுக்குத் தெரியாமல். “எண்பதுகளில் ஓவிய வகுப்புக்குச் செல்வதெல்லாம் கற்பனைக் கும் எட்டாத காரியம். கலர் பென்சில்கூடக் கேட்க முடியாது. வீட்டுச் சூழ்நிலை தெரிந்ததால், நானாக ஓவியங்களை வரைந்து பழகினேன்” என்று சிரிக்கிறார் சத்யா.

சத்யா

நிறைவேறிய கனவு

கல்லூரி முடித்ததும் நான்கு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் திருமணத் துக்குப் பிறகு கணவர் கௌதமனின் வேலை காரணமாக மும்பைக்குக் குடிபெயர்ந்தார். மகன் பிறந்துவிட, மனிதவள மேம்பாட்டுத் துறை தொடர்பான பணியை வீட்டிலிருந்தபடியே இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டார். அதுவரை ஆசை என்கிற அளவில் மட்டுமே முற்றுப் பெறவிருந்த ஓவிய ஆர்வத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைத்தார். ஓவியப் பள்ளியில் சேர்ந்து விதவிதமான ஓவியப் பாணிகளைக் கற்றறிந்தார். ஓவியத்தின் மீதிருந்த இயல்பான ஆர்வத்தால் மூன்று ஆண்டுகளுக்குள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்தார்.

கணவரின் பணி மாற்றத்தால் 2012-ல் சிங்கப்பூரில் குடியேறினார் சத்யா. அங்கே பள்ளியில் சில காலம் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். தான் கற்ற ஓவியப் பாணிகளை மேம்படுத்திக்கொள்ள ‘நாபா’ ஓவியப் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். பிறகு சர்வதேச ஓவியக் கலையில் டிப்ளமோ முடித்தார். ஓவியர்கள் ஞானாதிக்கம், காளிதாஸ் போன்றோரின் வழிகாட்டுதலில் ஓவிய நுணுக்கங்களைப் பற்றித் தெரிந்துகொண்டார். அதன் பிறகு தனக்கெனத் தனிப் பாணியை வரித்துக்கொண்டார்.

“தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கிருக்கும் சிலை களைக் கண்டு வியப்பேன். சோழர் காலம்தான் சிற்பக் கலையின் பொற்காலமாச்சே. அதனால், அந்தச் சிற்பங்கள் குறித்துத் தேடினேன். ஏராளமான புராதனச் சிற்பங்கள் நம்மிடம் இல்லை என்பதை அந்தத் தேடல் உணர்த்தியது. பல சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. நம் பண்பாட்டையும் மரபையும் எடுத்துச்சொல்லும் சிலைகளை ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்த நினைத்தேன்” என்று சொல்லும் சத்யா, தான் வரையும் சிலைகள் குறித்த வரலாற்றுத் தகவலுடன், தற்போது அவை எங்கே இருக்கின்றன என்பதையும் ஓவியத்தில் அடிக்குறிப்பாக எழுதுகிறார்.

உருவம் வேறு, உணர்வு ஒன்று

சிலைகளை மட்டுமே வரைவதால் அவற்றை வரையக் குறைவான வண்ணங்களே தேவைப் படும். அதனால் ஓவியப் பாணியிலும் ஓவியப் பின்னணியிலும் கவனம் செலுத்துகிறார். “மஞ்சள், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என ஐந்தாறு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால் ஓவியப் பின்னணியை என் திறமைக்கான களமாகப் பயன்படுத்திக்கொள்வேன். உதாரணத்துக்குப் பூதேவி சிலையை வரைகிறேன் என்றால் அந்த ஓவியத்தின் பின்னணியில் உலகம் முழுவதும் பூதேவி எந்தெந்த வடிவங்களில் வழிபடப்படுகிறாள் என்பதை வரைவேன். நாம் வழிபடும் வடிவங்கள் வேறு என்றாலும் கடவுள் ஒன்றுதானே” என்கிறார் சத்யா.

ஓரடியில் தொடங்கி ஐந்து அடி வரையிலான ஓவியங்களை வரைகிறார். இவர் வரைவது பல்வேறு அடுக்குகளை உள்ளடக்கிய எண்ணெய் வண்ண ஓவியம் என்பதால், ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகிறது. பெரிய ஓவியமாக இருந்தால் இரண்டு, மூன்று மாதங்கள்கூட ஆகும். ஓவியங்களின் நேர்த்தி இவர் எடுத்துக்கொள்ளும் காலத்துக்கான நியாயத்தைச் சொல்கின்றன.

வேர்களைத் தேடிக் கண்டடைவோம்

தான் வரைந்த ஓவியங்களை விற்றுக் கிடைக்கிற பணத்தைக் கோயில் புனரமைப்புப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு வழங்கிவந்த சத்யா, தற்போது கரோனா பரவிவரும் சூழலில் அதற்கான நிவாரணப் பணிகளுக்கும் கொடுத்து உதவுகிறார்.

“கலையைக் காசாக்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால், நான் வரையும் ஓவியங்களும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும் ஏதோவொரு வகையில் பிறருக்குப் பயன்பட வேண்டுமென நினைத்தேன். நாம் எங்கே சுற்றினாலும் கால்கள் நம் வேர்களைத் தேடித்தானே திரும்பும். அதேபோலத்தான் நாமும் நம் பண்பாட்டுச் சிறப்பை உணர்ந்து, நம்மிடம் எஞ்சியிருக்கும் சிலைகளையாவது பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் புராதனச் சிலைகளை வரைந்துவருகிறேன்” என்று சொல்லும் சத்யா, தற்போது ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்க முடியாத நிலையில் தன் முகநூல் பக்கத்தில் ஓவியங்களைப் பதிவிட்டுவருகிறார்.

விரும்பிக் கேட்கும் நிறுவனங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் வரைந்துகொடுக்கிறார். “கரோனாவால் உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. இதுவோர் அசாதாரணச் சூழல்தான். ஆனால், அது நம்மைச் சோர்வுறச் செய்யக் கூடாது” என்று சொல்லும் சத்யா, தன் தூரிகையால் தன்னளவில் மன நிறைவு பெறுவதுடன் பிறருக்கு உதவுவதையும் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x