Published : 29 May 2020 09:25 AM
Last Updated : 29 May 2020 09:25 AM

திரை வெளிச்சம்: இரும்புத் திரை விலகுமா?

ஆர்.சி.ஜெயந்தன்

வாழ்க்கையின் ஒருபகுதியாக மாறிவிட்ட பண்பாட்டு நிகழ்வுகள் எதுவொன்றையும் மக்கள் இழக்க விரும்புவதில்லை. சில வேளைகளில் அவற்றுக்குத் தடை வரும்போது, ‘திரை விலகுமா?’ என ஏக்கத்துடன் கேட்பது மரபு. தற்போது திரையரங்குகளுக்கே அந்த நவீனச் சொலவடையைப் பயன்படுத்த வேண்டிய நிலை. மார்ச் 17-ம் தேதி தொடங்கி கடந்த இரண்டு மாதங்களைத் தாண்டி திரையரங்குகள் மூடிக் கிடக்கின்றன.

சினிமா பிறந்து, வளர்ந்த கடந்த நூறாண்டுகளில் இப்படி நீண்ட நாட்களாக மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பதற்கு மாற்றாக முதலில் தொலைக்காட்சிகள் வந்தன. தற்போது இணையத் திரை இல்லங்களை ஆக்ரமித்திருக்கிறது. இருப்பினும், திரையரங்கில், பெரிய திரையில் படம் பார்த்துக்கொண்டே பாப் கார்ன் கொறிப்பதற்கு இணையான அனுபவம் எதுவும் இல்லை என்பதை மக்கள் ஒப்புக்கொள்வார்கள்.

ஆனால், கரோனா வைரஸின் பரவல், தொடக்கத்தில் இருந்ததைவிட, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சில மாவட்டங்களில் கட்டுக்குள் இருக்கிறது என்றே புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரட்டை இலக்கங்களுக்குள் கரோனா கட்டுக்குள் வந்துவிட்டால், திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி அளிக்கலாம்.

அப்போது மக்கள் துணிந்து படம் பார்க்கத் திரையரங்குகளுக்கு வருவார்களா? அப்படி வந்தால், அறிகுறிகள் எவையும் இல்லாமல் கரோனாவைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் நம் பக்கத்தில் உட்கார்ந்தால் என்ற பயமும் பீதியும் அவர்களைத் தடுக்குமா? அல்லது வீடடங்கால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ள, திரையரங்குகள் திறக்கப்பட்டதும் பயமின்றிப் படையெடுத்துவிடுவார்களா? தமிழ்நாட்டில் டாஸ்மாக்கும் சினிமாவும் ஒன்றுதானா? இணையத் திரை உருவாக்கியிருக்கும் மயக்கத்திலிருந்து அவர்களைத் திரையரங்குகளால் மீட்டெடுக்க முடியுமா? திரையரங்குகளின் நலனுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் என்று கூறப்படும், தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர், திருப்பூர் சுப்ரமணியமிடம் கேட்டோம்.

t1

சூர்யா

திரைப்படத்துக்கு மட்டுமே தணிக்கை!

“டாஸ்மாக்கையும் சினிமாவையும் குழப்பத் தேவையில்லை. சினிமா பெரிய போதை என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் அது போதையும் அல்ல; மோகமும் அல்ல. மன அழுத்தத்தை இரண்டே மணிநேரங்களில் நீக்கிக் காட்டும் பொழுதுபோக்கு எனும் மருந்து. போதை என்று பார்த்தால், வணிக அம்சங்கள் கொண்ட நல்ல படங்களும் உண்டு, கெட்ட படங்களும் உண்டு. எதைத் தேர்தெடுக்க வேண்டும் என்ற சுதந்திரமும் வழிகாட்டலும் உண்டு. திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே தணிக்கை இருக்கிறது. ‘யூ’, ‘யூ/ஏ’, ‘ஏ’ என ஒரு படம் நமக்கு உகந்ததா, இல்லையா என்று தெரிந்துகொண்டு ரசிகர்கள் தனியாகவோ, நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ திரையரங்குக்கு வருகிறார்கள்.

பல நல்ல படங்களில் கூட மக்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய கொச்சை, ஆபாச வசனங்கள் இடம்பெறலாம். அளவுக்கு மீறிய வன்முறைக் காட்சிகளும் பெண்களை, குழந்தைகளை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகளும் இருக்கலாம். இவற்றையெல்லாம் நீக்கி சமூகத்துக்குத் தீங்கு இழைக்காத படங்களைத் திரையரங்கப் பார்வைக்குப் பரிந்துரை செய்கிறது தணிக்கைக் குழு. ஆனால், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் படங்களுக்குத் தணிக்கை என்பதே கிடையாது.

குழந்தைகளைத் தங்களோடு உட்கார வைத்துக்கொண்டு ‘ஓடிடி’யில் படங்களையும் தொடர்களையும் பெற்றோர்கள் பார்க்க முடியுமா? இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ‘கிளைமாக்ஸ்’ என்ற படம் வரும் வாரங்களில் ஓடிடியில் வெளியாகிறது என்று, அதன் ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார்கள். ட்ரைலரே இத்தனை ஆபாசமாக இருக்கிறது என்றால், படம் எப்படியிருக்கும் என்று முடிவுசெய்துவிடலாம். எக்காரணம் கொண்டும் பிள்ளைகளின் கையில் சிக்கிவிடாமல், ஓடிடி தளங்களில் உள்நுழைவதற்கான பாஸ்வேர்டைப் பெற்றோர்கள் பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது” என்று சொல்லி நிறுத்தியவரிடம் ‘திரையரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது எந்த அளவுக்குச் சாத்தியம்?’ என்ற கேள்வியை வைத்தோம்.

திருப்பூர் சுப்ரமணியம்

உறுதி செய்யப்பட்ட சமூக இடைவெளி

“முதலில் தூய்மையைப் பற்றிக் கூற விரும்புகிறேன். திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதித்ததும் முதலில் சில ‘ட்ரையல் ஷோ’க்களை நடத்த விரும்புகிறோம். பொதுவாக, கரோனா காலத்துக்கு முன்பே, ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே உள்ள ஒரு மணிநேரத்தில், அரங்கைத் தூய்மையாகப் பெறுக்கிச் சுத்தம் செய்து, தூய்மைப் பணியாளர்கள் ‘மாப்’ போட்டு சுத்தம் செய்துவிடுவார்கள்.

இப்போது அந்தப் பணிகளுடன் ஒவ்வொரு ஷோவுக்குப் பிறகு ‘சானிடைஷ்’ செய்வதையும் பின்பற்றத் தொடங்கிவிடுவோம். அதேபோல் கழிவறைகளின் உள்ளே செல்லும்போதும் சென்று திரும்பும்போதும் திரையரங்க ஊழியர், ரசிகர்களுக்கு ‘ஹேண்ட் சானிடைஸர் கொடுப்பார். திரையரங்கில் நுழையும்போதே ‘தெர்மோ ஸ்கேனர்’கள் வைத்து ஒவ்வொரு ரசிகரின் உடல் வெப்பத்தையும் அளந்து பார்த்த பிறகே உள்ளே அனுப்புவோம். கொஞ்சம் மாறுபாடு என்றாலும் அனுமதிக்க மாட்டோம்.

மிக மிக முக்கியமாகத் திரையரங்கில் பின்பற்றப்பட இருக்கும் சமூக இடைவெளியைக் குறித்துக் கூறியாக வேண்டும். ‘சிங்கிள் ஸ்கிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு திரை மட்டுமே கொண்ட திரையரங்குகளுக்கு, ஆண்டு முழுவதுமே 30 முதல் 35 சதவீதப் பார்வையாளர்கள்தாம் வருகிறார்கள்.

மல்டி பிளக்ஸ், மால் திரையரங்குகளுக்கு 60 முதல் 65 சதவீதப் பார்வையாளர்கள்தாம் வருகிறார்கள். இது யாராலும் மறைக்க முடியாத உண்மை. மீதமிருக்கும் இருக்கைகள் அனைத்தும் காலியாக இருக்கும்போது, அவற்றை அரசு நிர்ணயித்துள்ள சமூக இடைவெளியைப் போல இரு மடங்கு அதிகமாகவே விட்டு, எங்களால் ரசிகர்களை அமரச் செய்ய முடியும். முகக் கவசமும் கண்ணாடிகளும் அணிந்து வரவேண்டியது ரசிகர்களின் கடமை” என்று கூறி முடித்துக்கொண்டார்.

அபிராமி ராமநாதன்

மாஸ் படங்களால் மட்டும்தான் மாற்றம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களைத் திறந்தால்தான் அங்கேயுள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளையும் திறக்க முடியும் என்ற நிலை. சென்னை, புரசைவாக்கத்தில் புகழ்பெற்ற அபிராமி மாலின் நிறுவனரும் அங்கே இயங்கிவரும் அபிராமி மல்டி பிளக்ஸ் திரையரங்குகளின் அதிபருமான அபிராமி ராமநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

“பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டால் மட்டுமே மக்கள் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள். அப்படி வரும்போது, விஜய், அஜித், விக்ரம், கமல், ரஜினி உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் மட்டுமே அவர்களை ஈர்க்க முடிவது சாத்தியமாகும். இவர்களைப் போன்ற பெரிய நடிகர்களை நேசிக்கும் பெரும் ரசிகப்படையினர்தாம், சினிமாவைக் காப்பாற்றுகிறவர்கள்.

ஆனால், அவர்கள் கையிலும் காசு இருக்க வேண்டுமே..! வேலை இல்லாமல் முடங்கிக் கிடக்கும்போது எங்கிருந்து அவர்களிடம் பணம் வரும்? பணப் புழக்கம் ஓரளவுக்கு ஏற்பட்டு, தேவைகளுக்குப் போக மீதம் இருந்தால் மட்டுமே திரையரங்கு செல்லவே மனம் வரும். அந்த நிலை உருவாக ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை ஆகலாம்” என்கிறார்.

இதுபோன்ற உறுதிப்படுத்தப்பட முடியாத சூழ்நிலையில், இணையத்திரை, மாற்றுத் திரைப்படங்களுக்குச் சிறந்த தளமாக விளங்குகிறது என்கிறார் சூர்யா. ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையத்தில் நேரடியாக வெளியிட வேண்டிய அவசியம், திரையரங்குகள் மூடப்பட்ட சூழ்நிலையால் உருவானதா அல்லது வேறு காரணங்கள் உண்டா? என அவரிடம் கேட்டபோது, “திரையரங்குகளைப் பிடிப்பதில் ஒவ்வொரு வாரமும் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, மாற்று வழியை நோக்கி நகர்வது மிகவும் அவசியம்.

இதனால் நாங்கள் திரையரங்குகளைப் புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல; திரையரங்குகளில் கிடைக்கும் ஆரவாரத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் ஈடே கிடையாது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் தள்ளி வைக்க முடியாது. குறிப்பாக மாற்று சினிமாக்களுக்கு ஓடிடி தளங்கள் நல்ல வழியாக இருக்கின்றன” என்றார்.

எதற்கு முன்னுரிமை?

இணையத் திரையை அணுக முடியாத கோடிக் கணக்கான மக்கள் கொண்ட இந்தியாவில், இரும்புத் திரைபோல் இறுகிக் கிடக்கின்றன திரையரங்குகள். இந்த மூடலின் விளைவாக, ஆயிரக்கணக்கான திரையரங்க ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்களது துயரம் பற்றிய குரல்கள் எவையும் எடுபடவில்லை. அதேபோல், ‘திரையரங்கில் படம் பார்க்கும் சாமானிய, நடுத்தர மக்கள் சந்தித்துவரும் ஊதிய இழப்பால், கடன் வாங்கி நாட்களை நகர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவர்களது தீனமான முனகல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.

ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டால் கல்விக் கட்டணம் செலுத்த வாங்கும் கடனையும், வாழ்க்கையை ஓட்ட வாங்கும் கடனையும் அடைப்பதற்கே மக்கள் முன்னுரிமை தருவார்கள். திரையரங்கு சென்று படம் பார்க்கும் எண்ணமெல்லாம் எப்போது வரும் என்று யாராலும் கணித்துக் கூறமுடியாது’ என்பதே படத் தயாரிப்பாளர்கள் பலரின் குரலாகவும் இருக்கிறது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x