Published : 16 May 2014 10:31 AM
Last Updated : 16 May 2014 10:31 AM

நிஜமும் நிழலும்: மீண்டு வருமா தயாரிப்பாளர்கள் சங்கம்?

தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள மக்கள் ஆவலாகக் காத்திருக்கும் நேரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் ஒரு நடந்த வாக்கெடுப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சங்கத் தலைவர் கேயார் தலைமையிலான நிர்வாகக் குழு மீது எஸ். தாணு அணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 261 வாக்குகள் பதிவான நிலையில் தீர்மானம் வெற்றிபெற்றுவிட்டதாகத் தாணு அணியினர் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் வாக்களிக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு மடங்கு பலத்தைப் பெற்றால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெற்றதாகும்; எனவே இந்தத் தீர்ப்பு செல்லாது என்று கேயார் அணியினர் சொல்ல, விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.

700 கோடிகளும் 200 கோடிகளும்

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 600 முதல் 700 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 160 படங்கள் தயாரிக்கப்படும் தமிழ்த்திரையுலகின் முதன்மையான அமைப்பாக இருந்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். தற்போது சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கொண்ட 832 உறுப்பினர்களைக் கொண்டது இந்தச் சங்கத்தில் புதிதாகத் திரைப்படம் தயாரிக்க வருவதன் மூலம் ஆண்டுக்குக் குறைந்தது ஐம்பது புதிய தயாரிப்பாளர்கள் இணைந்தபடி இருக்கிறார்கள்.

புதிதாகப் படம் தயாரிக்க வரும் அனைவருமே சிறு முதலீட்டு படங்களைத் தயாரிக்க வருபவர்கள்தான். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே சிறு முதலீட்டு படங்கள் தொடர்ந்து ’ வாஷ் அவுட்’ என்று வருணிக்கப்படும் போட்ட முதல் கைக்கு வராத நிலையில் 100 முதல் 200 கோடி நஷ்டம். இதனால் சின்னப் படத் தயாரிப்பாளர்களின் பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்தால் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு, தீர்க்கப்பட வேண்டிய முதல் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு அடுத்த நிலையில் ஆறு ஆண்டுகளைக் கடந்து திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதனால் பல பெரிய படங்களின் படப்பிடிப்புகள், தமிழ்நாட்டில் நடத்தப்படாமல் வெளிமாநிலங்களில் நடத்தப்பட்டுத் தமிழகத்திரைப்படத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய வேலையை அவர்கள் தொடர்ந்து இழக்கும் சூழ்நிலை நீடிக்கிறது.

மூன்றாவது முக்கியப் பிரச்சினையாகத் திருட்டு விசிடி, திருட்டுக் கேபிள் என்ற பைரசி வீடியோவின் பலமுகத் தாக்குதல் அனைத்து வகைத் தயாரிப்பாளர்களுக்குமே பேரிழப்பாக இருந்து வருகிறது. இன்னும் பல தலைபோகும் பிரச்சினைகளைத் தயாரிப்பாளர்கள் சந்தித்து வந்தாலும், இன்றைய சங்க உறுப்பினர்களில் பாதிபேர் படமெடுத்துச் சொத்துகளை இழந்த நிலையில் மாதம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் கிடைத்தாலே அவர்களைப் பொருத்தவரை அது பெரிய தொகை என்ற நலிந்த நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. இவர்களுக்கான நிரந்தரமான நலவாழ்வுத் திட்டமொன்றைத் தயாரிப்பாளர் சங்கம் இதுவரை கண்டறிந்ததாகத் தெரியவில்லை.

தீர்க்கப்படப் பட வேண்டிய இத்தனை தலையாய பிரச்சினைகள் இருக்கும்போது தயாரிப்பாளர் சங்கத்தின் பதவிகளுக்கு இத்தனை அடிதடியும் அமளியும் நடக்கிறது. முறையாகத் தேர்தல் மூலம் வெற்றிபெற்றாலும், நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும் அளவுக்கு மோசமானது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, சங்கத்தில் எந்த அணியிலும் சேராமல் பொதுவில் செயல்பட்டுவரும் பல உறுப்பினர்களிடம் பேசியபோது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

மூன்று விதமான உறுப்பினர்கள்

கேயார்ஜி தலைவராக இருந்தபோது அவரது செயற்குழுவில் அங்கம் வகித்தவர், தற்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வந்து அங்கே நடந்த இருதரப்பு ரகளைகளைப் பார்த்துப் பயந்து பாதியில் வெளியேறிய மூத்த உறுப்பினர், எனது பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார். ” இங்கே மூன்றுவிதமான தயாரிப்பாளர்கள் இருக்காங்க. ஒரு தரப்பினர் சங்கப்பதவிகளைக் கொண்டு, தாங்கள் எடும் படங்களுக்கும் வேண்டியவர்களின் படங்களுக்கும் சங்கம் தொடர்பாக நடக்க வேண்டிய வேலைகளைச் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். பதவியில் இருப்பவர்கள் சிலருக்குச் சலுகை காட்டவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். சங்கத்தின் பெயரால் டீசென்டாக கட்டப்பஞ்சாயத்து நடப்பது ஒன்றும் புதிதல்ல. நிர்வாகிகளாக யார் வந்தாலும் கட்டப்பஞ்சாயத்து என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும். கட்டப்பஞ்சாயத்தில் நேரடியாகக் கட்டிங் வாங்கும் அளவுக்கு யாரும் இறங்கிப் போகமாட்டார்கள். ஆனால் கட்டப்பஞ்சாயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால், தொழில் ரீதியான சலுகைகள் நிர்வாகிகளுக்கு இங்கே கேட்காமலேயே கிடைக்கும். இவர்கள் முதல்வகை. இரண்டு அணிகளிலுமே உதாரணங்கள் உண்டு. ஆனால் நம் சொல்லும் எதையுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீறிச் சொன்னால் ” என்னோட இடத்துல இருந்துபார் புரியும்!” என்று வாயை அடைத்துவிடுவார்கள்.

இரண்டாவது வகை உறுப்பினர்கள் சங்கத்தின் வழியாகவும், சங்கத்தின் அறக்கட்டளை வழியாகவும் எதாவது ஒருவகையில் உதவிகளைப் பெற்றுக்கொள்வது, யார் அதிகமாகத் தீனி போடுகிறார்களோ அவர்களுக்கு ஜால்ரா போடுவது. சங்கத்தின் அதிகாரபூர்வ லெட்டர் பேடைப் பயன்படுத்திக் கேபிள் டிவிகாரர்களிடம் பணம் வசூல் செய்வது உட்படப் பலவிதத்திலும் சங்கத்தைப் பணம் காய்ச்சி மரமாகப் பார்ப்பவர்கள் ஐம்பது முதல் நூறு பேர் வரை இரண்டு அணிகளிலுமே இருக்கிறார்கள். இவர்கள் படமும் எடுப்பதில்லை, விநியோகமும் செய்வதில்லை. ஆனால் இவர்கள்தான் சங்க வட்டாரத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர்கள்.

மூன்றாவது தரப்பினர் சங்கத்தின் செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என்று உளப்பூர்வமாக நினைப்பவர்கள். இவர்கள் பலர் மூத்தவர்களும் உண்டு, இளையவர்களும் உண்டு. இவர்களில் பலர் பொறுப்புகளுக்கு வந்து சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்தாலும், இவர் என்ன சொல்வது நாம் என்னக் கேட்பது என்று, பழம் தின்று கொட்டை போட்ட மூத்தவர்களின் ஈகோவை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுபவர்கள். இவர்கள்தான் சங்கத்தில் பாதியளவில் உறுப்பினராக இருக்கிறார்கள். இவர்களில் பலர் சங்கத்தேர்தலில் பலர் சங்கச் செயல்பாடுகளில் சலிப்புற்று ஒட்டு போடவோ பொதுக்குழுவுக்கு வரவோ கூடத் தயங்கித் தவிர்த்து விடுகிறார்கள்” என்று வகை வாரியாக விளக்குகிறார் அவர்.

கேயாருக்கு எதிர்ப்பு ஏன்?

இப்படிப் பலவிதமாக இயங்குவதாகக் கூறப்படும் உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி தேர்தல் நடந்தது. கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 832 ஓட்டுகளில் கேயார் அணி 449 ஓட்டுகளைப் பெற்றிருந்தது. ஆனால் ஓட்டுகள் பதிவான வகையில் குளறுபடிகள் செய்தே கேயார் அணி வெற்றிபெற்றதாகவும், இந்த வெற்றி செல்லாது என்றும் கூறி நீதிமன்றத்துக்குப் போனார்கள் தயாரிப்பாளர் தாணு தலைமையிலான எதிரணியினர். இந்த வழக்குடன் மேலும் பல வழக்குகள் கேயாரின் நிர்வாகக் குழு மீது தொடுக்கப்பட்டு, பிறகு அந்த வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. என்றாலும் இந்த வழக்குகளுக்குப் பதில் சொல்வதற்கே நேரம் போதாமல் போய்விட்டதாகவும், இதனால் கேயார் அணியால் பதவியேற்ற கடந்த 9 மாதங்களில் சங்கப்பணிகள் எதையும் சரிவரச் செய்யமுடியாதச் சூழ்நிலை ஏற்பட்டது என்கிறார்கள் கேயார் தரப்பில். மேலும் கேயார் அணி சார்பில் போட்டியிட்டுப் பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் திடீரென்று தாணு அணியுடன் இணைந்து கொண்டதும், சங்கப்பணிகள் முடங்க முக்கிய காரணம் என்று தெரிய வருகிறது. ஆனால் கேயாரை முழுமூச்சாகத் தாணு அணியினர் எதிர்க்க என்னதான் காரணம்? முதலில் கேயார் அணியில் செயலாளர் பதவிக்காக நின்று வெற்றிபெற்ற டி.சிவா, துணைத் தலைவர் பதவிக்காக நின்று வெற்றிபெற்ற சத்தியஜோதி டி.ஜி. தியாகராஜன் ஆகியோர் கேயார் அணியில் இருந்து விலகி, தாணு அணியில் சேரக் காரணம் என்ன? முதலில் சங்கச் செயலாளர்களில் ஒருவராக இருக்கும் டி.சிவாவிடம் கேட்டோம்.

” கேயார் அனுபவஸ்தர், புத்திசாலி என்பதிலெல்லாம் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இம்முறை அவர் வெற்றிபெற்ற பிறகு அலுவலக வேலைகளை அவர் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். எந்தவொரு சின்னப்பிரச்சினையாக இருந்தாலும், அதை உடனடியாகத் தீர்க்க வேண்டும். என்று அவர் நினைக்கவில்லை. எல்லாவற்றையும் ஆறப்போடுவதே அவருக்கு வழக்கமாகிவிட்டது. உறுப்பினர்கள் நம்மை மாற்றம் வேண்டும் என்றுதான் தேர்ந்தெடுக்கின்றார்கள். ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களுக்கு உடனடியாக நல்லது செய்ய முன்வராமல் தேங்கிவிட்டார். இதுதான் அவர் மீதான அதிருப்திக்கு முதல் காரணம். அடுத்து மற்றொரு செயலாளராக இருக்கும் ஞானவேல் ராஜாவின் தன்னிச்சையான பல நடவடிக்கைகளை இவர் கண்டிப்பதேயில்லை. அவருக்கு ஒரு காட் ஃபாதரைப் போல் இருந்து அவரை அதிகமாக ஆட விட்டுவிட்டார். கேயார் அமைதியாக இருந்து கொள்கிறார் என்றால், ஞானவேல் ராஜா அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார் யாரையும் மதிப்பதேயில்லை. காரணம் இவர் சூர்யா, கார்த்தி போன்ற பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டைப் பெற்று ஆரம்பத்திலேயே எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஹை - புரஃபைல் தயாரிப்பாளராக அறிமுகமானவர். இவருக்குச் சின்னத் தயாரிப்பாளர்களின் வழி தெரியாது. ஆனால் சின்ன தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுகிறோம் என்று அவசர அவசரமாக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது உறுதி என்று தெரிந்ததும், இவரும் கேயாரும் சேர்ந்து கொண்டு மாதம் பத்தாயிரம் கேபிள் டிவி கிளிப்பிங்ஸ் வருவாய் மூலம் எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் கொடுக்கப்போகிறோம் என்று கடைசி நேரத்தில் பரபரப்பு கிளப்புகிறார்கள். அதுவும் தனது சொந்தக் காசோலையைப் பத்தாயிரம் வீதம் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கிறார். சிறிய நடிகர் முதல், பெரிய நடிகர் வரை அனைத்துப் படங்களின் கிளிப்பிங்குகளையும் கேபிள் டிவிக்குக் கொடுத்தால்தான் நாம் பணம் வசூல் செய்யமுடியும். அப்படியே அனைத்துப் படங்களின் கிளிப்பிங்குகளையும் கொடுத்தாலும் இதைப் பொது டெண்டர் மூலம் விட்டு மூன்றாவது தரப்பிடம் இதை ஒப்படைத்தால் மட்டுமே பணத்தை வசூல் செய்யமுடியும்.

நிலைமை இப்படியிருக்கும்போது கேபிள் டிவிகளிடம் முறைகேடாக வசூல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் வழக்கொன்றைச் சந்தித்துவரும் சதிஷ்குமார் என்பவரையே கேபிள் டிவி வசூல் திட்டத்துக்குத் தலைமை பொறுப்பாளராகப் போட்டிருக்கிறார் ஞானவேல் ராஜா.

இப்படி ஞானவேல் ராஜாவால் தயாரிப்பாளர் சங்கத்தில் பெயரே கெட்டுக் கிடக்கிறது. அவரால் பெப்சியுடன் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பலவிதங்களில் மனச்சங்கடம்தான். ஞானவேல் ராஜாவைக் கேயாரால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில்தான் நான் அவர்மீது நம்பிக்கை இழந்தேன்” என்று வரிசையாக அடுக்குகிறார் டி.சிவா. ஞானவேல் ராஜா மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஞானவேல் ராஜா என்னப் பதில் தரப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, கேயார் தலைவர் பதவியில் இருப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்துவரும் தாணு என்னச் சொல்கிறார். அவரது தரப்பைக் கேட்டோம்

தாணு என்ன சொல்கிறார்?

தாணு பேசும்போது ” ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை படம் தயாரித்திருந்தால் மட்டும்தான் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஒருவர் போட்டி போட முடியும். ஆனால் கேயார் தமிழில் படம் எதுவும் தயாரிக்காமலேயே, மலேசியாவில் தயாரான ’ மூடி சூடா மன்னன்’ என்ற படத்தை வாங்கி அதைத் தமிழ்நாட்டில் ரிலீஸ் கூடச் செய்யாமல், தனிக்கைச் சான்றிதழ் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு படமெடுத்ததுபோலக் காட்டி, தேர்தலில் முறைகேடாகப் போட்டியிட்டார். இதற்காகத் தனி வழக்கு நடத்தி வருகிறேன்.

பிறகு வெற்றிபெற்று வந்தபிறகு சிறு தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் நிறைய தீர்க்கப்படாமல் இருக்கும்போது, அது எதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இரண்டாம் உலகம் படத்தைத் தயாரித்துக் கொடுத்த விவகாரத்தில் இயக்குநர் செல்வராகவனுக்கும், அந்தப்படத்தைத் தயாரித்த பிவிபி பட நிறுவனத்துக்கும் இடையிலான பண விவகாரம், ஜெமினி லே நிறுவனத்திடம் நடிகர் விஷால் கடன்வாங்கியாதாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவற்றுக்குத் தீர்வுகாண 7 நட்சத்திர ஹோட்டலில் கேயாரும் ஞானவேல் ராஜாவும் கட்டைப் பஞ்சாயத்து செய்து அதன்மூலம் பலன் பெறுவதிலேயே குறியாக இருந்தார்கள். பிவிபி நிறுவனத்தின் பஞ்சாயத்தைத் தீர்த்துக் கொடுத்ததற்குப் பிரதிபலனாகவே, தற்போது பிவிபி தயாரித்த ’வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் க்ரீன் ஸ்டூடியோ ஞானவேல் ராஜாவுக்கு அந்த நிறுவனம் கொடுத்தது என்று நாங்கள் சந்தேகப்பட வழியிருக்கிறது.

அதேபோலத் தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலராக இருக்கும் கேயார், நல உதவி என்ற பெயரில் தனக்கு வேண்டியவர்களுக்கும் உறவினர்களுக்கு வாரியிறைத்திருக்கிறார்.

நாங்கள் பொறுப்புக்கு வந்தபோது நான்கு பேர் மூன்று லட்சம் வரை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டுவந்து, எங்கள் பதவிக்காலம் முடிய ஒருசில மாதங்களே இருந்த நிலையில் காப்பீட்டை மூன்று மாதத்துக்கு நீட்டிப்பு செய்துவிட்டுச் சென்றோம். ஆனால் அடுத்து வந்த கேயார் நிர்வாகம் அதை அப்படியே புதுப்பிக்காமல் காலாவதியாகும்படி செய்துவிட்டார்கள்.

எனது கைபேசியில் நடிகர் சிவகுமார் என்பதற்குப் பதிலாக அவரது பெயரை ’ தமிழ் காப்போன்’ என்று சேமித்து வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து தவறான ஒரு தயாரிப்பாளரைச் சினிமாவுக்குக் கொடுத்துவிட்டார்கள். அவர் சங்கத்துக்குள் நுழைந்த நாள் முதல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ஒரே அடாவடிதான்.

தயாரிப்பாளர் சங்க ஊழியர்களைத் தனது பட அலுவலகத்துக்கு வேலைக்கு வரவழைத்து, அங்கே கேபிள் டிவி திட்டம் என்ற ஒன்றை இவராகவே செயல்படுத்துகிறார். தனது தொழில் தொடர்புகளைக் கொண்ட தனியார் வங்கியொன்றில் உறுப்பினர்களுக்கு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கிறார். ஆனால் சங்கச் சட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்தான் கணக்கு தொடங்க வேண்டும் என்று விதி இருக்கிறது.

இதைக்கூட விட்டுவிடலாம் நம்பிக்கையில்லா தீர்மானம் என்று முடிவான பிறகு அதை நேர்மையாக எதிர்கொள்ளத் திராணியற்று ஏன் பொதுக்குழுவைத் தனியார் ஹோட்டலில் நடத்தச் செல்லவேண்டும். 92 புதிய உறுப்பினர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது என்கிறார்கள். ஆனால் அந்த 92 பேரையும், முறைப்படி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆக்கியிருந்தால் அது ’சங்கத்தின் மினிட் புத்தகத்தில் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அது இல்லை. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்திய நீதிபதி இவர்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதை எப்படி நாங்கள் செய்த தவறாகக் கூற முடியும்? நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிறது. அந்த வீடியோ எத்தனை உண்மையானதோ அதேபோல எங்களிடம் உண்மை இருக்கிறது.” என்று முடித்துக் கொண்டார்.

ஞானவேல் ராஜா சங்கத்தின் மீட்பரா?

தமிழ்ப்படத் தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகள் என்றில்லாமல், திரையுலக நிகழ்வுகளிலும் ஞானவேல் ராஜாவைப் பார்க்கலாம் என்ற அளவில் எப்போது பரபரப்பாக இருக்கும் தயாரிப்பாளரான இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறார் அவரிடம் பேசியபோது..

” டி. சிவா சொல்வதைப் போலச் சூர்யா குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது எனக்கு ஆரம்பத்தில் வேண்டுமானால் உதவி செய்திருக்கலாம். ஆனால் அட்டக்கத்தி போன்ற சிறு முதலீட்டு படங்களை எனது சொந்த முயற்சியால், கதை, புதிய திறமைகள், தரக்கட்டுப்பாடு இவற்றை நம்பித்தான் எடுத்து வெற்றிபெற்றேன். எனக்கு எதுவொன்றிலும் தரமும், பேசித் தீர்க்கமுடியாதப் பிரச்சினை என்று எதுவுமில்லை என்ற கொள்கை இரண்டையும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆனால் ” இவன் என்ன பொடிப் பையன் வந்துட்டான். ” என்று என் மீது ஈகோவைக் காட்டுகிறார்களே தவிர, சங்க உறுப்பினர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அப்படி ஈகோ பார்க்கிறவர்களிடம் நாம் விட்டுக்கொடுத்துப் போனாலும், அடுத்த நிமிடம் உன் வேலையைப் பார்த்துக்கு கொண்டு போ, உன் வேலை முடிச்சதா நடையைக் கட்டு, மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.

எனக்குச் செயலாளர் பொறுப்பை நம்பிக்கொடுத்த நிலையில் அப்படிச் செல்ல நான் விரும்பவில்லை. கடந்த வருடம் நடந்த தேர்தல் செல்லாது என்று கூறி வழக்கு போட்டார் தாணு. பிறகு முறைகேடுகள் நடப்பதாக வழக்கு போட்டார். இப்படி அவர் போட்ட பல வழக்குகள் தள்ளுபடியானது.. இனி நீதிமன்றம் மூலமாக எதுவும் செய்ய முடியாது என்று உண்மை தெரிந்தபிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் என்ற ரகசிய வழியைத் தாணு கையிலெடுத்தார். இதில் முழுக்க முழுக்க அவரது பழிக்குப் பழி மனோபாவம் மட்டுதான் வெளிப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் பிலிம் சேம்பர் தேர்தல் வந்தபோது தமிழ்த்திரையுலகத்துக்கு உரியப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றார் கேயார். ஏற்கெனவே பிலிம் சேம்பர் தலைவராக இருந்தவர் என்பதால் பழைய நடைமுறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றார். அப்படி நடந்தால்,

நம்மில் பலர் பிலிம்சேம்பரில் நுழைந்து சினிமா நூற்றாண்டு விழா கணக்கு வழக்குகளை நோண்டுவார்கள் என்பதை மோப்பம் பிடித்தே பிராக்ஸி வோட்டைப் பயன்படுத்தினார்கள். அதுவரையில் எங்களுடன் இருந்த செயலாளர் டி.சிவா, டி.ஜி.தியாகராஜன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிலிம் சேம்பருக்கும், தாணுவுக்கும் ஆதரவாளராக மாறிப் போனார்கள். என்றாலும் நாங்கள் தேர்தலைப் புறக்கனித்திருக்கிறோம்.

இதுவொரு பக்கம் இருக்கட்டும் சிறப்புப் பொதுக்குழுவுக்கு அரசியல் கட்சிகளைப் போல ஆட்களைத் திரட்டி, அவர்களைப் பலநாட்களாக ஹோட்டலில் தங்க வைத்து, பணம்கொடுத்து அவர்கள் செய்த வேலைகளை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம் அவ்வளவுதான். எங்களால் நம்பிக்கைகளை மட்டுமே கொடுக்க முடிந்தது.

ஆனால் நிகழ்ச்சிநிரல் படி தீர்மானங்களின் மீது யாரையும் பேச விடாமல் ரகளை செய்தார்கள். இது வீடியோவில் பதிவாகியுள்ளது. திருமதி கமீலா நாசர் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அதுவும் பதிவாகியுள்ளது. நடுநிலையாக வாக்களிக்க வந்த சுமார் 150 தயாரிப்பாளர்கள் அங்கே நடந்த அமளியில். உயிருக்குப் பயந்து அங்கிருந்து வாக்களிக்காமல் அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்கள். நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லமா செல்லாத என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.

இவை ஒருபுறம் இருக்க, கேபிள் டிவி திட்டத்தில் என் மீது குற்றம் சாட்டும் டி.சிவா உள்ளிட்டவர்கள் இருந்த செயற்குழுவில் பேசி முடிவெடுத்ததையே நான் தற்போது சங்க ஊழியர்களை வைத்து நிறைவேற்றி வருகிறேன். எனது காசோலைகளை வழங்கியதை இவர்கள் குற்றம் சொல்ல முடியாது. நான் முதல் மாதம் கொடுத்துவிட்டு அடுத்தமாதம் கொடுக்க வில்லை என்றால் என்னை யாரும் சும்மா விட மாட்டார்கள். ஆதுவுமில்லாமல் தமிழகம் முழுவதும் இருக்கும் 1100 கேபிள் டிவி உரிமையாளர்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்பாமல் கேபிள் டிவி நடத்த முடியாது. ஒரு கேபிள் டிவி ஆபரேட்டர் குறைந்தது மாதத்துக்கு இரண்டாயிரம் தருகிறார் என்று கணக்கு வைத்துக் கொண்டால் கூட மாதம் 95 லட்சம் ரூபாய் சங்கத்துக்கு வருமானம் கிடைக்க இருக்கிறது. இதைத்தான் தயாரிப்பாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் வீதம் பிரித்துக் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கினோம்.

இந்தத்திட்டத்துக்காக விண்ணப்பம் எதுவும் விநியோகிக்கக் கூடாது மீறிச் செய்தால் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று எதிரணியினர் ஊழியர்களை மிரட்டி, இதைக் குலைக்க முயற்சி செய்ததால்தான், எனது அலுவலகத்திற்கு வந்து சங்கப்பணிகளை செய்யச் சொன்னேன். அதில் எந்தத் தவறும் கிடையாது.

பெரிய நிறுவனங்களுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்தேன் என்று சொல்லும் சிவாவும் அதில் இருந்தார். நான்தான் இந்த வழக்குகளைச் சங்கத்தில் பேசி முடிவெடுக்க வைத்தேன். இவர்களால் எட்டமுடியாதச் சுமூகத் தீர்வை நான் எட்டிக்கொடுத்தால் அதைக் குறை கூறுவது பொறாமை சார்ந்தது. அதற்காக நான் ஆதாயம் அடைந்தேன் என்பதும் பொய். காரணம் பிவிபி - செல்வராகவன் விவகாரம் இன்னும் பேசித் தீர்க்கப்படாமல் சங்கத்தில் நிலுவையில் இருக்கிறது.” என்று எல்லாவற்றுக்கும் பதில் தருகிறார்.

பதில் தெரியாத கேள்வி

புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்குச் சங்கம் தள்ளப்பட்டுள்ளாது போன்ற தோற்றம் உருவாகியிருப்பதே தயாரிப்பாளர் சங்கத்தின் பலவீனத்தை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டியிருக்கிறது. கேயார் - தாணு ஆகிய இரு தரப்பினருமே வெற்றி, தோல்வியைப் பற்றி சிந்தித்து வரும் வேளையில் சங்கத்துக்குக் கேபிள் டிவி வழியாக வரவேண்டிய பணம் வரமால் போய்விடும் ஆபத்து இருப்பது மட்டுமல்ல, ஏற்கனவே சங்கத்தின் சேமிப்பாக இருக்கும் பணமும் வீணாகச் செலவாகி வருகிறது.

நடந்து முடிந்த பொதுக்குழுவிற்கான செலவுகள். நீதிமன்ற ரிசிவருக்கான ஊதியம், கேயார் தரப்பின் மூலம் தாணு வழக்குகளை எதிர்கொண்ட வகையில் வக்கீலுக்குத் தரப்பட்ட பீஸ் என்று சங்கப்பணத்துக்கு தொடர்ந்து சங்கு ஊதுகிறார்கள்.

அதிகாரப் போட்டிகளும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளும் வழக்காடல்களுமாக இரு தரப்பினரும் பரஸ்பரம் மோதிக்கொண்டிருக்க, தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் சங்கத்தின் கவனத்துக்காகக் காத்திருக்கின்றன. கோஷ்டி சண்டைகள் முடிந்து சங்கம் செயல்படத் தொடங்கினால்தான் தமிழ் சினிமாவின் பிரச்சினைகளைக் கவனிக்க முடியும். ஆனால் சண்டையோ முடிவற்று நீளும் நிலையில் சங்கத்தால் என்றைக்காவது உருப்படியாக ஏதாவது செய்ய முடியுமா என்பதே மக்கள் மற்றும் பெரும்பாலான சங்க உறுப்பினர்கள் முன் இப்போது எழுந்துள்ள கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x