நீடித்து உழைக்கும் பாதுகாப்பான பேட்டரி

நீடித்து உழைக்கும் பாதுகாப்பான பேட்டரி
Updated on
1 min read

வீடுகளில் மின்சாரம் நின்றுபோனதும் எமர்ஜென்சி லைட்டைத் தேடி எடுத்து தற்காலிகமாக ஒளியூட்டிக்கொள்கிறோம். இந்தத் தேவையை ஒரு காலத்தில் டார்ச் லைட்டுகள் நிறைவேற்றித் தந்தன. டார்ச் லைட்டையே பேட்டரி லைட் என்று சொல்லும் வழக்கம் இருந்தது. மின் ஆற்றலைத் தம்முள் சேமித்துவைத்திருக்கும் பேட்டரியால் இயங்குவதால் அது பேட்டரி லைட். டிஜிட்டல் வாட்சுகள் வந்த காலத்தில் சிறிய அளவிலான மாத்திரை போன்ற பேட்டரிகள் புழக்கத்தில் வந்தன. மொபைல்கள் வந்தபிறகு அவை தங்கு தடையின்றி இயங்கத் தேவையான சக்தியை அளித்தன பேட்டரிகள்.

தற்போது ஸ்மார்ட்போன்களில், பேட்டரியில் இயங்கும் கார்களில், விளக்குகளில் அதிகமான அளவில் லித்தியம் - அயர்ன் பேட்டரிகள் தாம் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாற்றாகப் புதிய பேட்டரிகளைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் ஜப்பான் இறங்கியது. இந்த முயற்சியின் விளைவாக ஜப்பான் புதிய கார்பன் பேட்டரிகளை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் புதிய பேட்டரியின் பெயர் ரிடென் டூயல் கார்பன் பேட்டரி.

இந்த கார்பன் பேட்டரிகள் தற்போது சந்தையில் கிடைக்கும் லித்தியம்-அயர்ன் பேட்டரிகளைவிட விலை குறைவானவையாகவும் நீடித்த உழைப்பவையாகவும், பாதுகாப்பானவையாகவும், விரைந்து செயல்படுபவையாகவும் இருக்கும் எனத் தொழில்நுட்ப நிபுணர்கள் கூறுகிறார்கள். பவர் ஜப்பான் ப்ளஸ் என்னும் நிறுவனம் இந்த பேட்டரியை உருவாக்குகிறது. புதிய கார்பன் பேட்டரிகளை லித்தியம்-அயர்ன் பேட்டரிகளைவிட 20 மடங்கு விரைவாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். 3,000 ஆயிரம் முறைகளுக்கு மேல் ரீசார்ஜ் செய்தாலும் அதன் ஆற்றல் குறையாமல் அப்படியே இயங்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.

செயற்கைக் கோள்கள், மருத்துவச் சாதனங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படும் வகையில் பேட்டரியின் உற்பத்தியை விரிவாக்கும் திட்டமும் உள்ளது. கார்பன் பேட்டரிகளின் உபயோகம் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமைத் தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களை அதிகமாகச் சாலையில் செலுத்தும் திட்டமும் நனவாகும் என பவர் ஜப்பான் ப்ளஸ் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் லித்தியம்- அயர்ன் பேட்டரியில் உள்ள லித்தியம் டை ஆக்ஸைடு தீப்பிடிக்கும் இயல்பு கொண்டது. ஆனால் கார்பன் பேட்டரியில் இந்தப் பயம் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in