Published : 24 May 2020 09:30 AM
Last Updated : 24 May 2020 09:30 AM

இப்படித்தான் சமாளிக்கிறோம்: வீடும் தோட்டமும் பளிச்சிடுகின்றன

இவ்வளவு நாட்களாக நானும் கணவரும் வேலைக்கும் என் மகன் கல்லூரிக்குமாக மூவரும் ஆளுக்கு ஒரு திசையில் பயணத்துக்கொண்டிருந்தோம். வீட்டைக் கவனிக்க நேரமிருந்ததில்லை.

அதனால், இந்த ஊரடங்குக் காலத்தில் வீட்டைச் சுத்தம்செய்வது, செடிகளைப் பராமரிப்பது, முள்வேலி அமைப்பது என்று மூவரும் ஏதாவது பயனுள்ள வேலையைச் செய்துகொண்டேதான் இருக்கிறோம். ஒருநாள்கூட வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. பால், காய்கறி வாங்குவதற்காக மட்டும் வெளியே சென்று திரும்புகிறோம், அவ்வளவுதான். மற்றபடி வீட்டில் இருக்கும் வேலையே சரியாக இருக்கிறது.

கரோனா பரவலுக்குப் பிறகு பலரும் வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலமிடுகிறார்கள். இதுவும் நல்லதுதான். இனி வரும் காலத்தில் எந்த நோயும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள இந்த ஊரடங்கு நல்ல படிப்பினையைத் தந்துவிட்டது. வருமானத்துக்கு வழியில்லை என்றாலும் இருப்பதை வைத்து இப்போதைக்கு உயிர்வாழ வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். நிலைமை சீரடைந்ததும் நிச்சயம் நம் வாழ்க்கையும் சீரடையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

- கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி, சிதம்பரம்.

குழந்தைகளால் களைகட்டும் உற்சாகம்

இந்த ஊரடங்கு குழந்தைகளுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் எரிச்சலையும் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியும் இல்லை, வெளியே சென்று நண்பர்களோடு விளையாடவும் முடியாது. வீட்டுக்குள்ளேயே அவர்களை முடக்க வேண்டியுள்ளது. துறுதுறுவென்று சுற்றித் திரியும் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார வைக்கவும் முடியாது. எவ்வளவு நேரம்தான் தொலைக் காட்சியைப் பார்ப்பார்கள். அதனால், நானும் அவர்களோடு சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

நான் கண்ணைக் கட்டிக்கொண்டு அவர்களைக் கண்டுபிடித்தால் என் பேரக் குழந்தைகள் உற்சாகமாகிவிடுவார்கள். நானும் குழந்தையாகி அவர்களோடு ஒளிந்து விளையாடுதல், பரமபதம், கேரம், செஸ் என்று விளையாடுவோம். எல்லோரும் சேர்ந்து பாடுவோம், நடனமும் உண்டு. தினமும் வித்தியாசமான விளையாட்டுகள் வேண்டும். ஓவியம் வரைதல், வெட்டி, ஒட்டி வண்ணம் தீட்டுதல் போன்ற களேபரமும் உண்டு. கதையோடு சாப்பாட்டை உருட்டிப் போட்டால் மகிழ்வாகவும் நிறைவாகவும் சாப்பிடுவார்கள். வாசிப்பையும் விடுவதில்லை. குட்டிகதைகளைப் படிக்கிறார்கள். நானும் படித்துச் சொல்வேன்.

நான் வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்தால் என்னோடு சேர்ந்துகொள்வார்கள். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற ஓடி வருவார்கள். சமையலில் உதவுகிறேன் என்று பேத்தியும் செல்லமாக இம்சிக்கிறாள். இவர்களோடு இருப்பது மனநிறைவாக இருக்கிறது. கரோனா அவர்களை வீட்டில் கட்டிப்போட்டாலும், உற்சாகத்துக்கும் உல்லாசத்துக்கும் குறைவில்லாமல் வீடு களைகட்டுகிறது.

- சுந்தரி ராஜேந்திரன், கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x