Published : 22 May 2020 08:47 AM
Last Updated : 22 May 2020 08:47 AM

முதல் பார்வை: நீர்மீது நடக்கும் வாழ்வு - கட்டுமரம் (தமிழ்)

அம்ஷன் குமார்

சுனாமியால் தாக்கப்பட்ட தமிழ்நாட்டின் தென்கடலோரத்துச் சிறிய கிராமம் ஒன்றில் கதை நிகழ்கிறது. கடல் மீன் வளம் குன்றியபோதிலும் இறுதிவரை மீன்பிடித்தல்தான் தனது தொழில் என்பதில் பெருமைகொள்பவன் சிங்காரம். சுனாமியில் இறந்துபோன அவனுடைய சகோதரிகளின் வாரிசுகளான ஆனந்தி, மணி ஆகியோர் அவனது பொறுப்பில் வளர்கிறார்கள். ஆனந்தி அங்குள்ள சிறுவர் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள்.

மணி பள்ளியில் படிக்கிறான். நடுத்தர வயதை நெருங்கியும் கல்யாணம் செய்துகொள்ளாத சிங்காரத்தின் ஒரே கவலை, ஆனந்திக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்பதுதான். அவள் காரணம் எதுவுமின்றி வரன்களை நிராகரிக்கிறாள். ‘நான் நீ பிடித்துவரும் வரும் மீன் அல்ல’ என்றுகூறி அவனிடம் அறை வாங்குகிறாள்.

ஒளிப்படக் கலையை அக்கடலோர கிராமத்தின் சிறுவர்களுக்குக் கற்றுத்தர, நகரத்திலிருந்து கவிதா அங்கே வருகிறாள். அவளும் கல்யாணத்தை வெறுக்கிறாள். தன்னால் கல்யாணத்துக்கு எதிரான காரணத்தை உணர முடியாத நிலையில், கவிதாவின் அச்செயலுக்கான காரணத்தை அறிய முற்படுகிறாள் ஆனந்தி. தான் ஒரு லெஸ்பியன் என்றும் தனது துணையான லட்சுமி இறந்த துயரத்தில் தான் இருப்பதையும் கவிதா தெரிவிக்கிறாள்.

தனது இனம்புரியாத உணர்வுகளை மேலெழுப்பிக் கொண்டு வர ஆனந்திக்கு அப்போது ஒரு இயல்பான சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதுவே கவிதாவுக்கும் அவளுக்குமிடையேயான உறவுக்கும் வழிவகுக்கிறது. பின்னர் சிங்காரத்தின் குடும்பம் அக்கிராமத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கும் அதுவே காரணமாக அமைகிறது. சிங்காரத்தின் ஆசிபெற்று ஆனந்தி கவிதாவுடன் நகர்நோக்கிச் செல்கிறாள். சிங்காரமும் மணியும் வேறிடம் செல்கிறார்கள்.

கட்டுமரம் என்பது மீன்பிடிப்பதற்காக மரங்களால் கட்டப்பட்ட மிதவையைக் குறிக்கிறது. ஒற்றுமை, கட்டுப்பாடு ஆகியவற்றின் உருவகமாகவும் அது சொல்லாட்சி பெற்றுள்ளது. கட்டுமரத்தின் பயன்பாடு அருகிவருவதைப் போன்றே, கிராம வாழ்க்கையின் வேறுபல அம்சங்களும் அருகிவிட்டன. கிராமம் சுனாமியால் பொலிவற்று இருக்கிறது. பொருளாதாரத்தில் மட்டுமின்றிப் பிற்போக்கான மதிப்பீடுகளும் கொண்டதாக விளங்குகிறது.

நகரத்துக்குப் பெயர்வதன் மூலம் எல்லோருக்கும் புது வாழ்வு கிடைத்துவிடுவதில்லை. அக்கிராமத்தில் அலங்காரம் என்ற திருநங்கை உலவுகிறாள். வெளியே தள்ளப்படாவிடினும் அவளுடையது உதிரியான வாழ்க்கை. ஆண்களின் தகாத காம இச்சையைப் பூர்த்தி செய்பவளாயும் அவள் இருக்கிறாள். படம் லெஸ்பியன் உறவுப் பிரச்சினை பற்றியதாக நகர்ந்தாலும் நமது பச்சாதாபத்தைக் கோருபவளாக அவள்தான் தெரிகிறாள். மகாபாரதத்தில் அரவானின் பலிபீடமும் கட்டுமரம் என்றே அழைக்கப்படுகிறது.

இயக்குநர் மிஷ்கின் சிங்காரமாக நடித்துள்ளார். வேறெந்த நடிகரின் சாயலும் தென்படாத, பார்வையாளனை ஈர்க்கும் உக்கிரமான நடிப்பு அவருடையது. பல வெற்றிப் படங்களின் இயக்குநராக இருப்பினும், ‘கட்டுமரம்’ போன்ற ஒரு சுயாதீனக் கலைப் படத்துக்கு அவர் அளித்துள்ள ஆதரவு, பாராட்டப்பட வேண்டியது. பிரீதி கரன், அனுஷா பிரபு, செல்வம், அஜெய், ஜி‌.ஆர். ஆதித்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சுருங்கக்கூறின், பல அடுக்குகளை எழுப்பும் படத்தின் முழுமைக்குப் பொறுப்பானவர் கட்டுமரத்தின் திரைக்கதாசிரியரும் இயக்குநருமான ஸ்வர்ணவேல் ஈஸ்வரன். ஏற்கெனவே தமிழின் பல முக்கிய ஆவணப்படங்களை எடுத்தவர். மிஷிகன் பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். படத்தின் கருவைப் பரபரப்புக்குரியதாக எடுத்துச் செல்லாது, நிதானமாக அதனூடாகப் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறார்.

கடல்புரத்தைக் களனாகக் கொண்டு உயிர்ப்புடன் கூடிய பல மலையாளப் படங்கள் வந்துள்ளன. தமிழில் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் ‘கட்டுமரம்’ அதற்கான தொடக்கம். கடற்புரக் காட்சிகளை அவற்றின் அமைதி குன்றாது படம் பிடித்துள்ளார் கார்த்திக் முத்துகுமார். ‘எல்ஜிபிடி' (LGBT Films) படங்களுக்கான பிரேம்லைன் (frameline film festival) எனும் உயரிய உலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.

தொடர்புக்கு: amshankumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x